சகோதரத்துவத்தின் இலக்கணமான ஆரோன்


சகோதரத்துவத்தின் இலக்கணமான ஆரோன்
x
தினத்தந்தி 11 Jan 2019 11:07 AM GMT (Updated: 11 Jan 2019 11:07 AM GMT)

ஒரு தாய் பிள்ளைகளாய்ப் பிறந்து, ஒரே வீட்டில் வளர்ந்து, பின்னர் பகைவர்களாய் மாறி நிற்கும் சகோதரர்களை நாம் பார்த்திருக்கிறோம்.

இது ஏதோ தனிக்குடித்தனங்களாய் மாறிப்போன இன்றைய காலக்கட்டத்திலேயோ, கூட்டுக்குடும்பங்களாய் வாழ்ந்த நேற்றைய காலக்கட்டத்திலேயோ நடந்தது மட்டுமல்ல.

திருமறையின் முதல் குடும்பமாகிய ஆதாம், ஏவாள் தம்பதியின் மக்களான காயீன், ஆபேல் தொடங்கி, முற்பிதாக்களில் ஒருவராகிய யாக்கோபு மற்றும் அவர் சகோதரர் ஏசா தொடர்ந்து தாவீதின் பிள்ளைகள் என காலம் காலமாக சகோதரர்களுக்கு இடையே பகைமையும் சண்டைகளும் இருந்தே வந்திருக்கிறது.

இப்படிப்பட்டவர்களுக்கு நடுவிலே சகோதரர்கள் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டாய் வாழ்ந்து காட்டியவர், ஆரோன்.

தன் சகோதரனாகிய மோசேயின் வாயாக இருந்து இஸ்ரயேலரை வழிநடத்திய இந்த ஆரோனின் வாழ்விலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் ஏராளம் உண்டு. அவற்றில் சில...

மகிழ்ந்த சகோதரன்

இஸ்ரயேலர்கள் எகிப்தில் அடிமைகளாய் வாழ்ந்து வருகிறார்கள். அந்த அடிமைத்தனத்திலிருந்து விடுதலை வேண்டுமென இறைவனை நோக்கி முறையிடுகிறார்கள். கர்த்தர் முட்செடியின் நடுவிலிருந்து மோசேக்கு தரிசனமாகி இஸ்ரயேலரை விடுவித்து நடத்தி செல்லும் பெரும்பொறுப்பை அவரிடம் ஒப்படைக்கிறார். அவரோ “நான் திக்குவாயும் மந்தநாவும் உள்ளவன்” என்று சொல்லி மறுக்கிறார்.

“நான் உன் வாயோடே இருந்து, நீ பேசவேண்டியதை உனக்கு போதிப்பேன்” என்று கர்த்தர் சொன்னபோதும் மோசே சமாதானம் அடையவில்லை. இதனால் கோபமடைந்த கர்த்தர், “உன் சகோதரனாகிய ஆரோன் நன்றாய்ப் பேசுகிறவன் என்று அறிவேன்; அவன் உன்னைச் சந்திக்கப் புறப்பட்டு வருகிறான்; உன்னைக் காணும் போது அவன் இருதயம் மகிழும்” என்று கூறுகிறார். (யாத்திராகமம் 4:12-14).

அப்படியே இருவரும் சந்திக்கிறார்கள். ஆரோன், மோசேயை முத்தமிடுகிறார் (யாத்திராகமம் 4:27). இங்கே, இந்த சகோதரர்கள் முத்தஞ்செய்து கொண்டது, ஏதோ வெளிவேடமானதல்ல. மாறாக, ஆத்மார்த்த அன்பினால் ஏற்படும் மகிழ்ச்சியின் வெளிப்பாடு. “அவன் இருதயம் மகிழும்” என்று கர்த்தரே சொல்லுமளவுக்கு அப்பழுக்கற்றது.

தாங்கிய சகோதரன்

மோசேயின் தலைமையில் இஸ்ரயேலர்கள் கடவுள் வாக்களித்த கானான் நாட்டை நோக்கி வந்துகொண்டிருக்கிறார்கள். வழியிலே அமலேக்கியர் இஸ்ரயேலர்களுடன் போரிடுகின்றனர். இஸ்ரயேலர்கள் சந்திக்கும் முதல் யுத்தம் இது. யோசுவாவிடம் யுத்தத்தை முன்னின்று நடத்த சொல்லிவிட்டு, ஆரோன் மற்றும் ஊர் என்பவருடன் அருகிலிருக்கும் மலையுச்சிக்கு சென்று கையில் உயர்த்திப் பிடித்த கோலுடன் நிற்கிறார் மோசே.

மோசேயின் கைகள் உயர்ந்திருக்கும் போது இஸ்ரயேலர்கள் வெற்றியடைந்தார்கள். மோசேயின் கைகள் தளரும் போது, அமலேக்கியர் வெற்றியடைந்தார்கள். உடனே ஆரோனும், ஊரும் ஒரு கல்லைக் கொண்டுவந்து, அதிலே மோசேயை உட்காரச்செய்து, இருவரும் ஆளுக்கொரு கையை தாங்கிக்கொண்டிருந்தார்கள். இதனால் மாலை சூரியன் மறையும் மட்டும் மோசேயின் கைகள் ஒரே நிலையாயிருந்தது (யாத்திராகமம் 17:8-13).

ஆம், தளர்ந்த தன் சகோதரனின் கையை தாங்கிய பொறுப்பான சகோதரன் இந்த ஆரோன்.

அழுத சகோதரன்

மோசேயின் மனைவி பிற இனத்தவராகிய ஒரு எத்தியோப்பிய பெண். விடுதலைப் பயணத்தின் ஒரு கட்டத்தில், ஆரோனும், மோசேயின் சகோதரி மிரியாமும் மோசேயின் மனைவியை முன்னிட்டு மோசேக்கு எதிராக பேசினார்கள். கர்த்தர் அதைக்கேட்டார். உடனே, கர்த்தர் மோசேயையும், ஆரோனையும், மிரியாமையும் ஆசாரிப்பு கூடாரத்திற்கு வரச் சொன்னார். மேகத்தூணில் நின்று, தனக்கும் மோசேக்கும் இடையே இருக்கும் நெருக்கத்தையும், தான் மோசேயை எந்தளவுக்கு நேசிக்கிறேன் என்பதையும் ஆரோனுக்கும், மிரியாமுக்கும் சொல்லி, அவர்கள் மேல் கோபம் கொண்டார்.

மேகம் விலகியதும், ஆரோன் தன் சகோதரியாகிய மிரியாமின் முகத்தை பார்க்கிறார், அவளை தொழுநோய் பிடித்திருந்தது. உடனே ஆரோன் மோசேயை நோக்கி, “என் ஆண்டவனே, நாங்கள் புத்தியீனமாய்ச் செய்த இந்த பாவத்தை எங்கள்மேல் சுமத்தாதிரும். தன் தாயின் கர்ப்பத்தில் பாதி மாம்சம் அழுகிச் செத்துவிழுந்த பிள்ளையைப் போல் அவள் ஆகாதிருப்பாளாக” (எண்ணாகமம் 12:11,12) என்று அழுதார்.

மோசேயும் கர்த்தரிடத்தில் கெஞ்சினார். கர்த்தர் ஏழு நாட்களுக்குப் பிறகு அவள் நலமடைவாள் என்று சொன்னார். இங்கே ஆரோன் தன் சகோதரிக்காக தன் சகோதரனிடத்தில், அழுது வேண்டவும் வெட்கப்படவில்லை.

இந்த காரணங்களால் தான், “இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது” (சங்கீதம் 133: 1) என்று சொன்ன தாவீது, அடுத்த வசனத்திலேயே, “அது ஆரோனுடைய சிரசின் மேல் ஊற்றப்பட்டு, அவனுடைய தாடியிலே வடிகிறதும், அவனுடைய அங்கிகளின்மேல் இறங்குகிறதுமான நல்ல தைலத்துக்கு... ஒப்பாயிருக்கிறது” என்று பாடுகிறார்.

நாமும் பேதங்கள் கடந்து, பிறருடன் சகோதரர்களாய்ப் பழகி, அவர்களோடு மகிழ்ந்து, அவர்கள் துயரங்களில் பங்கெடுத்து கர்த்தர் கட்டளையிடும் ஆசீர்வாதத்தையும், ஜீவனையும் பெற்று கொள்வோம்.

சகோ. ஹெசட் காட்சன், சென்னை.

Next Story
  • chat