வீதியை ஜொலிக்க வைக்கும் விளக்கு பூஜை


வீதியை ஜொலிக்க வைக்கும் விளக்கு பூஜை
x
தினத்தந்தி 29 Jan 2019 2:43 PM GMT (Updated: 29 Jan 2019 2:43 PM GMT)

தங்களுக்கு பெரும் துன்பத்தை விளைவித்து வந்த அசுரர்களை அழிப்பதற்காக, சிவபெருமானை நாடிச் சென்றனர் தேவர்கள்.

அந்த நேரத்தில் சிவபெருமான் ஆழ்ந்த தியானத்தில் மூழ்கியிருந்தார். அவரை தியானத்தில் இருந்து எழுப்ப, தேவர்கள் எவருக்கும் தைரியம் இல்லை. அதனால் எப்படி சிவபெருமானிடம் தங்களின் முறையீட்டை வைப்பது என்று வழி தெரியாமல் நின்றனர்.

பின்னர் தேவர்கள் அனைவரும், மன்மதனின் உதவியை நாடினார்கள். ஆனால் ஈசனை தியானத்தில் இருந்து எழுப்ப மன்மதன் தயங்கினான்; மறுத்தான். ஆனால் தேவர்கள் அனைவரும், சாபம் கொடுத்து விடுவோம் என்று மிரட்டியதன் காரணமாக பயந்து போன மன்மதன், சிவபெருமானின் தியானத்தைக் கலைக்க அவர் மீது மன்மத பானத்தை ஏவினான்.

தியானம் கலைந்து விழித்த சிவபெருமான், கடும் சினம் கொண்டார். அதற்கு காரணமாக மன்மதனைத் திரும்பிப் பார்த்தார். ஈசனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்பட்ட வெப்பமானது, மன்மதனை எரித்துச் சாம்பலாக்கியது.

பரமேஸ்வரன், மன்மதனை எரித்ததால் ‘மன்மத பரமேஸ்வரர்’ என்ற திருநாமம் கொண்டார். அந்த திருநாமத்துடன் வீற்றிருக்கும் இறைவன், வரதம்பட்டு என்ற கிராமத்தில் கோவில் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

சுற்றிலும் வயல்வெளிகள் சூழ அமைந்துள்ள கிராமம் வரதம்பட்டு. ஊரின் நடுநாயகமாக அமைந்துள்ளது மன்மத பரமேஸ்வரர் திருக்கோவில். கிழக்கு நோக்கி அமைந்திருக்கும் இந்த ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும், மகா மண்டபமும், கருவறைக்கு முன் நந்தியும், பலிபீடமும் காணப் படுகின்றன. கருவறை நுழைவு வாசலில் இடதுபுறம் விநாயகப்பெருமான் மற்றும் வலது புறத்தில் முருகப்பெருமான் ஆகியோரது திருமேனிகள் இருக்கின்றன.

ஆலயத்தின் உள்ளே கருவறையில் மூலவரான மன்மத பரமேஸ்வரர், லிங்கத் திருமேனியில் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். இந்த ஆலயத்தில் அம்மன் திருமேனி கிடையாது. ஊரின் நடுவே அமைந்துள்ள இந்த ஆலயத்திற்கு எதிரே அமைந்துள்ள நீண்ட வீதியானது, சித்திரா பவுர்ணமி நாள் அன்று, விளக்குகள் ஒளிவீச அற்புதமாக காட்சி தரும்.

ஆம்... ஊர் மக்கள் அன்றைய தினம் இறைவனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்வதுடன், திருவிளக்கு ஏற்றி வைத்து வழிபாடு செய்கின்றனர்.

எப்படி?

ஆலயத்தின் எதிரே உள்ள வீதியில், சுமார் 300-க்கும் மேற்பட்ட விளக்குகளை வரிசையாக ஏற்றி வைத்து, வீதியை ஒளி மயமாக்கி விடுகின்றனர் இப்பகுதி மக்கள். அந்த ஒளியினூடே இறைவனை வழிபடும் காட்சி கண்கொள்ளா காட்சியாக இருக்கும். அன்றைய தினம் இறைவனுக்கு பால் குடம், காவடி எடுத்து வந்து தங்கள் பிரார்த்தனையையும் பக்தர்கள் நிறைவேற்றுகின்றனர். கடந்த 2003-ம் ஆண்டு கும்பாபிஷேகம் கண்ட இந்த திருக்கோவில், அந்தப் பகுதி மக்கள் மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த வர்களுக்கும் பல காலமாக குலதெய்வமாக விளங்கி வருவது சிறப்புக்குரியதாகும்.

இந்த ஆலயத்தில் தீபாவளி, பொங்கல், சிவராத்திரி, சோமவாரங்கள், கார்த்திகை, ஆண்டுப் பிறப்பு போன்ற விசேஷ நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் இறைவனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. பங்குனி உத்திரம் அன்று சந்தனக் காப்பு அலங்காரத்தில் பூக்குவியலுக்கு இடையே அருள்பாலிக்கும் இந்த மன்மத பரமேஸ்வரனை தரிசிக்க மக்களின் கூட்டம் அலைமோதுவது வாடிக்கை.

இந்தக் கோவில் தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

மன்மதனை அழித்து மன்மதன் பெயரையும் தன் பெயருடன் இணைத்துக் கொண்ட இத்தல இறைவன், நம் பகைவர்களின் மனதை மாற்றி, அவர்களை நம் நண்பர்களாக்க வல்லவர் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.

அமைவிடம்

நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் - பந்தநல்லூர் பேருந்து தடத்தில் உள்ளது திருவாளப்புத்தூர். இங்கிருந்து 2 கிலோமீட்டர் தூரம் தென்கிழக்கு பகுதியில் சென்றால் வரதம்பட்டு ஊரை அடையலாம்.

- மல்லிகா சுந்தர்

Next Story