சட்டநாதராக அருளும் அஷ்டபைரவர்


சட்டநாதராக அருளும் அஷ்டபைரவர்
x
தினத்தந்தி 12 Feb 2019 12:02 PM GMT (Updated: 2019-02-12T17:32:33+05:30)

கொங்கராயக்குறிச்சி... தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அழகிய கிராமம். இந்த ஊரில் உள்ள சட்டநாதர் ஆலயம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

இந்தப் பகுதியில் வாழ்ந்த கொங்கு ராயர் என்னும் மன்னரால், பழமையான இவ்வாலயம் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. எனவே தான் இவ்வூர் கொங்கராயக்குறிச்சி என்றழைக்கப்படுகிறது. புராணங்களிலும் சிறப்பு வாய்ந்தது இவ்வூர். இந்த ஆலயம் நவ லிங்கபுரத்தில் இரண்டாவது தலமாக விளங்குகிறது.

இந்த ஆலயத்தில் அஷ்ட பைரவர் தனி சன்னிதியில் அமர்ந்து அருள்பாலிக்கிறார். இவர் 64 பைரவர்களுக்கு சமமானவர் என்று சொல்லப்படுகிறது. சீர்காழியை போலவே இவ்வூரில் பைரவர் இருக்கும் காரணத்தினால், இவ்வூர் ‘தென் சீர்காழி’ என அழைக்கப்படுகிறது.

பைரவர் அவதாரம், சிவபெருமானின் பயன் தரும் அவதாரமாகும். பயங்கரமான, உக்கிரம் நிறைந்த அவதாரமாகவும் இது திகழ்கிறது. அப்படிப்பட்ட பைரவர், பக்தர்களின் பயத்தை நீக்குவார். பக்தர்களின் எதிரிகளை விலகி ஓடச் செய்வார். பக்தர்களிடம் உள்ள பாவம், குரோதம், காமம் போன்றவற்றில் இருந்து அவர்களை விடுபட செய்வார். ‘பை’ என்றால் படைப்பு. ‘ர’ என்றால் வாழ்க்கை. ‘வா’ என்றால் அழித்தல். மூன்று தொழிலையும் செய்யக்கூடிய தன்மை கொண்டவர் பைரவர். இவர் தோன்றிய வரலாறு மிகச் சிறப்பானதாகும்.

பிரம்மனுக்கும் முன் காலத்தில் ஐந்து தலைகள் இருந்தது. இவர் படைப்பு தொழில் செய்து வந்ததால், சிவனை விட தானே திறமை மிக்கவர் என்று நினைத்துக் கொண்டார். அனைவரும் தன்னை வணங்க வேண்டும். சிவனை விட தன்னை ஒரு படி மேலே நினைக்க வேண்டும் என்றும் ஆசைப்பட்டார். அதோடு சிவன் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் தலையிட்டு கெடுத்துக் கொண்டே வந்தார். அதன்மூலம் சிவனுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த முயற்சித்தார்.

இதனால் கோபமடைந்த சிவபெருமான், தனது நகத்தினை பெயர்த்து தரையில் போட்டார். அதில் இருந்து கால பைரவர் தோன்றினார். அவர் வேகமாக சென்று பிரம்மாவின் தலைகளில் ஒன்றை கொய்தார். அதன் பிறகே பிரம்மா, நான்முகன் ஆனார். தனது அகந்தை அழித்து சிவபெருமானின் திருவடியை சரணடைந்தார் என சிவ மகாபுராணம் கூறுகிறது.

சக்தி பீடங்கள் தோறும் காலபைரவர் மிகச்சிறப்பாக போற்றப்படுகிறார். தகுராசுரன் என்பவன் பெண்களால் மட்டும் அழியும் வரத்தைப் பெற்றிருந்தான். இதையடுத்து அவன் தேவர்கள், மனிதர்கள் அனைவரையும் துன்புறுத்தி வந்தான். பார்வதிதேவி, காளியின் உருவம் கொண்டு அந்த அசுரனை அழித்தான். அதன் பிறகு அவளின் கோபத்தில் தான் காலபைரவர் தோன்றினார் என்றும் சொல்வதுண்டு. அவர்கள் இருவரையும் சிவபெருமான் ஆட்கொண்டார். சிவபெருமானுக்கு 64 வடிவங்கள் இருப்பது போலவே, பைரவருக்கு 64 வடிவங்கள் சிறப்பானதாக போற்றப்படுகிறது.

அதில் இந்த தலத்தில் இருக்கும் பைரவரை, ‘அஷ்ட பைரவர் மற்றும் சட்டநாதர்’ என்று போற்றுகின்றனர். அஷ்டமி தேய்பிறையில் அஷ்ட பைரவருக்கு பூஜை நடத்தப்படுகிறது. இதில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு தீராத நோய் தீரும், வியாபாரம் செழிக்கும். எதிரிகள் விலகுவர். குழந்தை வரம் கிடைக்கும், திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.

இந்த ஆலயம் 19-ம் நூற்றாண்டில் ஆற்று வெள்ளத்தில் மூழ்கி, மணலில் புதைந்து விட்டது. அதன் பிறகு கடந்த 25 வருடங்களுக்கு முன்பு, பக்தர்கள் ஒன்று கூடி ஆற்று மணலில் புதைந்து கிடந்த ஆலயத்தை வெளியே கொண்டு வந்தனர். இந்த ஆலயம் மேலும் மேலும் தோண்டப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக ஆலயம் வெளிக்கொண்டு வரப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

இந்த ஆலயத்திற்குள் நாம் நுழையும் போது, சாலையில் இருந்து பூமிக்குள் இறங்கி தான் செல்ல வேண்டும். அதற்கும் தற்போது படிகள் கட்டி, பக்தர்கள் வசதியாக இறங்க வழி வகை செய்திருக்கிறார்கள். முதலில் கொடி மரம், நந்தியை தாண்டி கோவிலுக்குள் நுழைய வேண்டும். அங்கு வலது புறம் பைரவர், சட்டநாதராக தனி சன்னிதியில் காட்சி தருகிறார். ஆலய சுற்று பகுதியில் கன்னி விநாயகர், தட்சணாமூர்த்தி, வள்ளி தெய்வானையுடன் முருகன், சண்டிகேஸ்வர், சனீஸ்வரர் அருள்பாலிக்கிறார்கள். ஆலயத்தில் பொன்னுருதி அம்மாள் என்ற பெயரில் அம்பிகை தெற்கு நோக்கி வீற்றிருக்கிறாள். இந்த அன்னையிடம் வேண்டுபவர்களுக்கு, பொன்னும் பொருளும் கிடைப்பது உறுதி. கிழக்கு நோக்கி சிவபெருமான் வீரபாண்டீஸ்வரராக காட்சி தருகிறார்.

இந்த கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. தமிழ் மாதம் கடைசி வெள்ளிக்கிழமை தோறும் விளக்கு பூஜையும் நடக்கிறது. மேலும் பிரதோஷம், மகா சிவராத்திரி, மாத சிவராத்திரி, சோமவாரம், திருக்கார்த்திகை, ஐப்பசி மாதத்தில் திருக்கல்யாணம், திருவாதிரை பூஜைகள் நடை பெறுகின்றன.

ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் 10.30 வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

இந்த ஆலய இறைவனை வழிபட்டால் திருமணத் தடை நீங்கும். தொழில் போட்டி விலகும். நிலுவையில் இருந்து வந்த வழக்குகள் சாதகமாக முடியும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இந்த ஆலயத்திற்கு விரைவில் கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்பதற்காக திருப்பணிகள் செய்யப்பட்டு வருகிறது.

திருநெல்வேலி- திருச்செந்தூர் மெயின் ரோட்டில் 20 கிலோமீட்டர் தொலைவில் கருங்குளம் உள்ளது. அங்கு இருந்து 2 கிலோமீட்டர் தூரம் சென்றால் கொங்கராயகுறிச்சி சட்டநாதர் ஆலயத்தை அடையலாம். ஆட்டோ வசதி உண்டு.

-முத்தாலங்குறிச்சி காமராசு

Next Story