பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவில் மாசித்திருவிழாவில் பக்தர்கள் பால்குட ஊர்வலம்


பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவில் மாசித்திருவிழாவில் பக்தர்கள் பால்குட ஊர்வலம்
x
தினத்தந்தி 19 Feb 2019 10:00 PM GMT (Updated: 19 Feb 2019 8:39 PM GMT)

பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவில் மாசித்திருவிழாவில் நேற்று பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.

பாவூர்சத்திரம்,

பாவூர்சத்திரம் காமராஜர் நகரில் அமைந்துள்ளது வென்னிமலை முருகன் கோவில். இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசித்திருவிழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான மாசித்திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் வெவ்வேறு சமுதாயத்தினர் சார்பில் திருவிழா நிகழ்ச்சிகள் நடந்தது. விழா நாட்களில் 1,008 திருவிளக்கு பூஜை, சுவாமி வீதிஉலா மற்றும் சிறப்பு பூஜைகளும் நடந்தது.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக, நேற்று காலை 8 மணிக்கு குறும்பலாப்பேரி பக்தர்கள் கீழப்பாவூர் சிவன் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து வந்தனர். அதேபோல் பாவூர்சத்திரம், பனையடிப்பட்டி, திப்பணம்பட்டி பகுதியை சேர்ந்த பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தி, காவடி எடுத்தும் ஊர்வலமாக வந்தனர். இந்த ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது.

பால்குட ஊர்வலம் கோவிலை வந்தடைந்ததும் மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை, பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மாலை 4 மணிக்கு புஷ்பாஞ்சலி நடந்தது. இரவு 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி எழுந்தருளி வீதிஉலா நடந்தது. கோவில் வளாகத்தில் இன்னிசை கச்சேரி நடந்தது.

விழாவில் பாவூர்சத்திரம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தென்காசி, கடையம், சுரண்டை, ஆலங்குளம் பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பால்குட ஊர்வலத்தின்போது பக்தர்களுக்கு ஆங்காங்கே நீர்மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன. விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

Next Story