அம்மை அப்பனுடன் அருளும் முருகப்பெருமான்


அம்மை அப்பனுடன் அருளும் முருகப்பெருமான்
x
தினத்தந்தி 26 March 2019 10:52 AM GMT (Updated: 26 March 2019 10:52 AM GMT)

முருகப்பெருமானுக்குரிய ஆலயங்களில் திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய் என்னும் செந்தூர், திருஆவினன்குடி என்னும் பழனி, திருவேரகம் என்னும் சுவாமிமலை, திருத்தணிகை, பழ முதிர்ச்சோலை ஆகியன ஆறுபடை வீடுகள் முக்கியமானவை.

450 அடி உயரமும் 660 படிக்கட்டும் கொண்ட பழனி மலை மீது, ஞான தண்டம் தாங்கி குழந்தையாகக் காட்சி தரும் முருகனைக் காண கண்கள் ஆயிரம் போதாது. போகர் என்ற சித்தர் ஒன்பது வகை மூலிகைகளை (நவபாஷாணம்) சேர்த்து உருவாக்கிய அற்புதச் சிலை இங்கு இருக்கிறது. போகரின் ஜீவ சமாதி, மலைக் கோவிலின் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ளது. அதைப் போல மலையடிவாரத்தில் புலிப்பாணி சித்தரின் ஜீவ சமாதி உள்ளது.

மலைக்கு அருகே அடிவாரத்தில் அமைந்துள்ள திருத்தலம்தான், திருஆவினன்குடி. குழந்தை வேலாயுத சாமியாக, இங்கும் முருகப்பெருமான் மேற்கு நோக்கி மயிலில் அமர்ந்தவாறு வீற்றிருக்கிறார். லட்சுமியும், காமதேனுவும், பூமா தேவியும், சூரியனும், அக்னியும் வழிபட்ட தலம் இது. அருணகிரிக்கு ஜபமாலை தந்த பெருமைக்குரியது இத்தலம்.

பழனி மலை மீது அருளும் ஞான தண்டாயுதபாணியை தரிசனம் செய்யும் பக்தர்கள் அனைவரும், மலை அடிவாரத்தில் உள்ள திருஆவினன்குடி தலத்திற்கு வந்து இறைவனை வழிபடுகிறார்களா என்பது சந்தேகம் தான்.

இந்த இரண்டு ஆலயங்களையும் விட, பழனி நகரில் இருக்கும் மற்றொரு குமரன் கோவிலும் பழமையும், தொன்மையும் வாய்ந்தது. இந்த ஆலயத்தையும் சேர்த்து மூன்று கோவில்களையும் வணங்கினால்தான் முழுமையான பலன் கிடைக்கும் என்கிறார்கள்.

பழனி மலையில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் நகரின் மையத்தில் இருக்கும் இந்த ஆலயத்தை, ‘பெரியநாயகி அம்மன்’ ஆலயம் என்றால்தான் அனைவருக்கும் தெரியும். மற்ற இரு கோவில்களை விட இந்த ஆலயத்திற்கு தனிச் சிறப்பு ஒன்று உள்ளது.

இங்கே முருகப்பெருமான் தனியாக இல்லாமல், வள்ளி-தெய்வானை சமேத குடும்பஸ்தராக அருள்புரி கிறார். அதுமட்டுமல்ல, இவருக்கு இடதுபுறம் தந்தை கயிலாசநாதரும், வலதுபுறம் தாயார் பெரியநாயகியும் தனித்தனி சன்னிதியில் வீற்றிருக்கிறார்கள். எனவே இது ஒரு சோமாஸ்கந்த மூர்த்த தலம் என்பது இக்கோவிலின் சிறப்பாகும்.

பெரும்பான்மையான சிவாலயங்களில் ‘சோமாஸ்கந்தர்’ என்ற மூர்த்தம் இருக்கும். அதில் சிவன் சக்தி இருவருக்கும் நடுவில் குழந்தையாக குமரன் வீற்றிருப்பார். ஆனால் இங்கே இரண்டு தேவியர்கள் புடைசூழ, அம்மை அப்பன் இருவரும் இருபுறமும் வீற்றிருக்க, நடுநாயகமாக முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். இங்கு வந்து வழிபட்டால், குடும்ப பிரச்சினைகள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

வண்ணங்களால் மிளிரும் தெய்வீக சுதைச் சிற்பங்கள் அணிவகுத்து நிற்க, கம்பீரமாய் காட்சி தருகிறது தோரண வாயில். அதை ஒட்டி நவரங்க மண்டபம் என்ற நாயக்கர் கால கருங்கல் மண்டபம் உள்ளது. இங்கே வடக்கு பார்த்த சன்னிதியில் பத்ரகாளி வீற்றிருக்கிறாள். இந்த அன்னையை வழிபட்டால் கண் திருஷ்டி அகலும், கிரக தோஷம் விலகும், மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள். இங்கு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ராகு கால வேளைகளில் பெண்களின் கூட்டம் அலைமோதுகிறது.

இந்த மண்டபத்தில் உள்ள கற்துதூண்கள் கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. காளி சன்னிதிக்கு எதிரில் நிற்கும் தூணில், நடராஜர் சிலை தெற்கு நோக்கி இருக்கிறது. அதன் கீழ்ப்புறத் தூணில் முருகன் கல்யாண மாப்பிள்ளை கோலத்துடன் நிற்கிறார். அதன் எதிரே உள்ள தூணில் தண்டம் ஏந்தி ஆண்டிக் கோலத்தில் அருள்கிறார்.

கோவிலின் உள்ளே வடபுறத்தில் தல விருட்சமான கடம்ப மரம் அசைந்தாடிக் கொண்டிருக்கிறது. அதனருகில் விநாயகர் வீற்றிருக் கிறார். அவரை வணங்கி விட்டு நகர்ந்தால் பெரிய மண்டபத்தில் தனித் தனிச் சன்னிதிகள் காணப்படுகின்றன. ஒரு சன்னிதியில் கயிலாசநாதர் லிங்கத் திரு மேனியுடன் காட்சி தருகிறார். அடுத்த சன்னிதியின் வலப்புறம் வள்ளியும் இடப்புறம் தெய்வானையும் இருக்க முருகப்பெருமான் அருள்கிறார்.

அதற்கு அடுத்த சன்னிதியில் அன்னை பெரியநாயகி நின்றபடி அருள்புரிகிறாள். தாய் தந்தைக்கு நடுவில் இருப்பதால் சோமாஸ்கந்தராக, கந்தன் அருளாட்சி செய்கிறார்.

சுவாமி மற்றும் அம்பாள் சன்னிதிகளின் நுழைவு வாசல்களில் இருபுறமும் துவாரபாலகர்களுக்குப் பதிலாக படமெடுத்து ஆடும் ஐந்துதலை நாக சிற்பங்கள் உள்ளன. கோவிலின் தெற்குப் பகுதியில் தனி மண்டபத்தில் முத்துக்குமாரசாமி இருக்கிறார். இவர்தான் உற்சவ மூர்த்தி.

சோமாஸ்கந்தர் சன்னிதி எதிரே மயிலும், கொடிமரமும் பலிபீடமும் அமைந்துள்ளது. பெரிய நாயகி அம்மன் சன்னிதிக்கு எதிரில் நீர் ஊற்றி நிறைந்த கேணி இருக்கிறது. அதன் மீது பீடம் அமைக்கப்பட்டு நவக்கிரகங்கள் வீற்றிருக்கின்றன. இந்த அமைப்பு எல்லா தோஷங்களையும் போக்கும் என்கிறார்கள். பெருமண்டபத்தில் தெற்கு பார்த்த சன்னிதியில் நடராசர் - சிவகாமி ஐம்பொன் சிலைகள் உள்ளன.

கருங்கல்லால் அமைக்கப்பட்ட சுற்றுச் சுவருடன் கூடிய வெளிப்பிரகாரத்தை வலம் வரும்போது, வடக்கில் துர்க்கை, சண்டிகேசர் சன்னிதிகளும், காலபைர வரும் இருக்கிறார்கள்.

சித்ரா பவுர்ணமி தினத்தன்று இங்கிருந்து 108 பால்குடங்கள் எடுத்து திருஆவினன்குடி கோவிலுக்குச் செல்வார்கள். வெள்ளிரதம் ஏறி முத்துக்குமாரசாமி நகர்வலம் வருவார். வைகாசி விசாகம், தை மாத வசந்த உற்சவம், பங்குனி உத்திரம் என உற்சவங்கள் இங்கு வரிசையாக நடைபெறுகின்றன.

இந்த ஆலயத்திற்கு ‘ஆதி திருஆவினன்குடி’ என்ற பெயரும் உண்டு. ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

தனித்திருந்து அருளும் பழனி ஆண்டவரைத் தரிசிக்கச் செல்பவர்கள், குடும்பத்துடன் இருக்கும் சோமாஸ்கந்தரையும் வழிபட்டு வரலாமே.

டாக்டர் ச.தமிழரசன்

Next Story