நீர் நிலைகளை பாதுகாக்கும் சுயம்பூற்று நாதர்


நீர் நிலைகளை பாதுகாக்கும் சுயம்பூற்று நாதர்
x
தினத்தந்தி 26 April 2019 8:03 AM GMT (Updated: 26 April 2019 8:03 AM GMT)

வாழ்வில் நலமும் தந்தருளும் சித்தர்களும் இந்த மலையில் அதிகம்

மேற்கு தொடர்ச்சி மலை என்றாலே, தென்றலின் ராஜாங்கமும், மூலிகையின் வாசமும், சிவபெருமானின் அருளாட்சியும் சிறப்பாக விளங்கும் இயற்கை பெட்டகமாகும். சதுரகிரி மலை, குற்றால மலை, அத்ரி மலை, பொதிகை மலை, மகேந்திரகிரி மலை, பாபநாச மலை என இறைவனின் அரசாட்சி, மேற்கு தொடர்ச்சி மலை முழுவதும் பரவியிருக்கிறது. நாடிவரும் பக்தர்களை பல ரூபத்தில் காட்சி தந்து அரவணைத்து, அவர்களுக்கு வாழ்வில் நலமும் தந்தருளும் சித்தர்களும் இந்த மலையில் அதிகம்.

அப்படி ஈசன் அருள்பாலிக்கும் அற்புதமான கோவில்களில் ஒன்றுதான், திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடி அருகில் உள்ள சொக்கம்பட்டி சுயம்பூற்று நாதர் ஆலயம்.

கால்நடையாய் நடந்து, மலை ஏற்றத்தில் வியர்வை சிந்த ஏறியபடி, இறைவனை நாடிச்செல்லும் சுகமே தனிதான். அங்கு அவனை கண்டு நெடுஞ்சாண்கிடையாக விழுந்து, ‘உன்னைப் பார்த்ததே ஆனந்தம்’ என்று பரவசமடையும் நிலை வாழ்வில் உன்னதமானது. அப்படி ஒரு ஆன்மிக பரவசத்தைத் தரும் இடமாக சுயம்பூற்று நாதர் ஆலயம் இருக்கிறது. இந்த இடம் யோகிகளும், சித்தர் பெருமக்களும், சாதுக்களும் தங்கியிருந்து, இந்த தேசம் வளம்பெற தவம் இயற்றிய இடம் என்று கூறப்படுகிறது. எனவே இந்த மலை ‘சித்தர் மலை’ என்றும் அழைக்கப்படுகிறது.

ஒரு காலத்தில் மேற்குதொடர்ச்சி மலையில் உள்ள சொக்கம்பட்டி மலைப் பகுதியில், ஒரு மேய்ப்பன் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்தான். செல்வச்செழிப்பாக இருந்த அந்த காட்டில் அந்த சமயத்தில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. இதனால் மலைகளில் தழைகள் எல்லாம் காய்ந்து கருகிபோய் விட்டன. மழை இன்றி, மலைகளில் இயற்கையாகவே சுரக்கும் சுனைகளும் கூட வற்றி விட்டது. கால் நடைகளை காக்க வேண்டுமே. எனவே மலையில் ஒவ்வொரு இடமாக சென்று கால்நடைகளை மேய்த்துக்கொண்டே இவ்விடத்துக்கு வந்து சேர்ந்தான், மேய்ப்பன்.

அவனுக்கும் தாகம், சமையல் செய்யவேண்டும் என்றாலும் தண்ணீர் இல்லை. இதனால் கால்நடைகளில் கோமியத்தை பிடித்து தாகத்தை போக்கியும், சமையல் செய்தும் வாழ்ந்து வந்தான். இயற்கை அன்னை, கொடுத்த அருட்பிரசாதமாய், கால்நடைகள் கூட ஒரு சில மூலிகைச் செடியை மேய்ந்து, அதிலிருந்து கிடைத்த நீரில் தங்களது தாகத்தை தணித்துக் கொண்டன. அந்த மூலிகை, மாடு மேய்ப்பவனுக்கும் தெரியும். ஆனால் அதை வைத்து தாகத்தைதான் தணிக்க முடியும். சமையல் செய்ய முடியாதே.. எத்தனை நாள்தான் கோமியத்தை வைத்து சமையல் செய்வது. எனவே அந்த மேய்ப்பன், தன்னுடைய மனத்துயரை துடைக்கும்படி சிவ பெருமானை வேண்டினான்.

பின்னர் திடீரென்று அவனுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. அதன்படி தான் மேய்த்து வந்த கால்நடைகளை, சற்று பள்ளமான இடத்தில் கொண்டு போய் விட்டு விட்டு, மீண்டும் அதே இடத்திற்கு வந்தவன், “இறைவா! மழை பெய்து இங்குள்ள வறட்சி நீங்க வேண்டும். தண்ணீர் பஞ்சமின்றி கிடைக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் நான் இங்கேயே என் உயிரை மாய்த்துக் கொள்வேன்” என்று சொல்லி இறைவனிடம் மன்றாடினான்.

என்ன ஆச்சரியம். திடீரென்று இடி இடித்து, மின்னல் வெட்டி, மழை கொட்டோ கொட்டென்று கொட்டித் தீர்த்தது. அதுமட்டுமின்றி, அந்த இடத்தில் தானாகவே ஒரு ஊற்று தோன்றியது. அதில் இருந்து தண்ணீர் பெருக்கெடுத்தது. மேய்ப்பன், தண்ணீரை எடுத்து கண்ணில் ஒற்றிக்கொண்டான். அதை தாகம் தீரும் வரை குடித்தான். இறைவனின் கருணையை எண்ணி ஆனந்தத்தில் துள்ளிக்குதித்தான். தன் வேண்டுதலை நிறைவேற்றிய இறைவனுக்கு, ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டான்.

மலையின் மீது தானாக தோன்றிய ஊற்றுக்கு, ‘சுயம்பு ஊற்று’ என்றும், பிரதிஷ்டை செய்த லிங்கத்திற்கு ‘சுயம்பூற்று நாதர்’ என்றும் பெயரிட்டான்.

சொக்கம்பட்டியில் சந்தனமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த அன்னையை தாய் தெய்வம் என்று அழைக்கிறார்கள். இந்த சந்தன மாரியம்மனை வழிபட்டு விட்டு, அங்கிருந்து மலை அடிவாரத்திற்குச் செல்ல வேண்டும். மலை அடிவாரத்தில் விநாயகப் பெருமான் வீற்றிருக்கிறார். இவர் சுயம்பூற்று விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். இவரும் வேண்டும் வரம் தருவதில் வல்லவர். தேர்வு நேரத்தில் மாணவர்கள் பலரும் இங்கு வந்து வழிபடுவதைப் பார்க்க முடியும். அரசு வேலை கிடைக்கவும் இந்த விநாயகரை வழிபடுகிறார்கள். விநாயகர் கோவில் புதுப்பித்துக் கட்டப்பட்டுள்ளது. கோவிலைச் சுற்றி ஆங்காங்கே அமர்ந்து தியானம் செய்வதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. விலங்குகள் நடமாட்டம் அதிகம் என்பதால் இரவு நேரத்தில் இங்கு தங்குவதை தவிர்ப்பது நல்லது.

விநாயகரை தரிசனம் செய்து விட்டு, மலை ஏற வேண்டும். சுமார் 2 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள சுயம்பூற்று நாதரை வணங்கச் செல்லும் வழி நெடுகிலும் பல அனுபவங்கள் கிடைக்கலாம். பாவு ஊற்று ஓடை, வண்ணாத்தி பாறை, ஆலமரம், மலை முருகடு என கரடு முரடான சாலைகளைக் கடந்து செல்ல வேண்டும். பின்னர் மலையின் மறு பகுதியில் அகலமான பள்ளத்தில் இறங்கி நடக்க வேண்டும். ஒரு பக்கம் பாறை, மறு பக்கம் அதல பாதாளம். கொஞ்சம் கவனமாக செல்ல வேண்டிய திருத்தலம் இது.

ஓரிடத்தில் பாதையின் கீழே மிகப்பெரிய பாறை இருக்கிறது. அந்தப் பாறை இடுக்கில் ஒரு பள்ளம் காணப்படும். அந்தப் பள்ளத்தில் இறங்கி உள்ளே சென்றால் விசேஷமான குகை காணப்படுகிறது. அந்த குகையின் மேல்மட்டத்தில் பாறை ஒன்று தலைக்கு மேலே தொங்கிக் கொண்டிருக்கும். அதையும் தாண்டி உள்ளே சென்றால், விசாலமான அறை. இரண்டு குகை. அதற்குள் செல்லும் போது கவனமாக இறங்க வேண்டும். அங்கு சென்றதுமே நம் உடலில் ஒருவித அதிர்வு ஏற்படுவதை உணரமுடியும். இங்கு இன்றும் சித்தர்களும், சாதுக்களும் தங்கி பூஜை, தியானம் செய்து செல்வதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இந்த இடத்திற்கு அடுத்ததாக வரும் பள்ளத்தாக்கில் தான், இந்த ஆலயத்து இறைவன் வீற்றிருக் கிறார். பழைய லிங்கம் தனியே இருக்க, புதியதாக ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இறைவன் சுயம்பூற்று நாதருக்கு அருகில் பிள்ளையார் மற்றும் அம்மன் இருந்து அருள் பாலிக்கிறார்கள். அங்கிருந்து கொஞ்சம் மலை ஏறிச் சென்றால், அபூர்வ ஊற்றை காணலாம்.

ஊற்றுப் பகுதியில் இருந்து சற்று மேலே சென்றால், அகத்தியர் உள்ளிட்ட பல சித்தர்கள் தவம் செய்த பாறை ஒன்று உள்ளது. இந்த இடத்துக்கு வந்தாலே, பிறவிக்கடன் நீங்கும் என்கிறார்கள். இந்தப் பகுதிக்கு வந்து சென்றாலேயே இயற்கையானச் சூழலும், மூலிகை காற்றின் வாசமும் இதயம் மற்றும் சிறுநீரக நோய்களை அகற்றுவதாக நம்பிக்கை நிலவுகிறது.

இந்த ஆலயத்திற்கு யார், எப்போது வந்து பூஜை செய்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் தினமும் நான்கு கால பூஜைகள் செய்யப்படுகின்றனவாம்.

அமைவிடம்

திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடியில் இருந்து தென்காசி செல்லும் சாலையில் உள்ளது சொக்கம்பட்டி. இங்குதான் சந்தனமாரியம்மன் கோவில் உள்ளது. அந்த அம்மனை வழிபட்டு விட்டு, மலை அடிவாரத்திற்குச் சென்று சுமார் 6 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டும். பஸ் வசதி கிடையாது என்பதால் சொந்த வாகனத்திலோ, அல்லது நடந்தோ தான் செல்ல வேண்டும். அதன்பிறகு மலை அடிவாரத்தில் உள்ள விநாயகரை வணங்கிவிட்டு மலை ஏறி, இறைவனை தரிசிக்க வேண்டும். இந்த மலைக்கு செல்வதற்கு வனத்துறையின் அனுமதியைப் பெற வேண்டியது அவசியம்.

- முத்தாலங்குறிச்சி காமராசு


Next Story