இறைவனோடு இணையச்செய்யும் நற்செயல்


இறைவனோடு இணையச்செய்யும் நற்செயல்
x
தினத்தந்தி 31 May 2019 3:51 PM GMT (Updated: 31 May 2019 3:51 PM GMT)

இறை இல்லத்தில் தங்கி தியானம் செய்வதையே கண்மணி நாயகம் (ஸல்) அவர்களும் ‘இஹ்திகாப்’ என்ற அமலாக நமக்கு அமைத்து தந்தார்கள்.

எல்லாம் வல்ல இறைவன் தன் திருமறையில் ‘இஹ்திகாப்’ பற்றி குறிப்பிடும் போது “ஹஜ்ஜு செய்து அங்கு வந்து அதை சுற்றுபவர்களும், தியானம் புரிய அங்கு வந்து தங்குபவர்களுக்கும், எனது அந்த வீட்டை சுத்தமாக ஆக்கி வையுங்கள்” (திருக்குர்ஆன் 2:125) என்று இப்ராகிம் நபிகளுக்கு கட்டளை இடுகின்றன.

இந்த வசனத்தின் மூலம் அல்லாஹ் நம் அனைவரையும் நோக்கி, “என் இல்லத்தில் வந்து தங்கி இருந்து இரவு வேளைகளில் திக்ரு, தியானம், வணக்கம் என்று அமல் செய்யுங்கள்” என்று மறைமுகமாக எடுத்தியம்புகின்றான்.

இறை இல்லத்தில் தங்கி தியானம் செய்வதையே கண்மணி நாயகம் (ஸல்) அவர்களும் ‘இஹ்திகாப்’ என்ற அமலாக நமக்கு அமைத்து தந்தார்கள்.

‘இஹ்திகாப்’ என்பதின் அர்த்தம், ஒரு இறையடியான் தன் உலக வாழ்வின் தொடர்புகள் அத்தனையும் துறந்து, தனிமையை நாடி, இறை இல்லத்தில் (பள்ளிவாசல்) வந்து தங்கி இருந்து இறைவனோடு நேரடி தொடர்பில் ஈடுபடுவதே. இது பரவலாக ரமலான் மாதத்தின் கடைசி பத்து இரவுகளில் கடைப்பிடிக் கப்பட்டு வருவதை உலகெங்கும் நாம் கண்டு வருகிறோம்.

நாம் கடைப்பிடிக்கின்ற முறைகளைக்கொண்டு ‘இஹ்திகாப்’ மூன்று விதமாக கருதப்படுகிறது. ரமலான் மாதத்தில் கடைசி பத்து நாட்கள் கடைப்பிடிக்கப்படுவதற்கு சுன்னத்தான ‘இஹ்திகாப்’ என்றும், பத்து நாட்களுக்குப் பதிலாக அதற்கு குறைந்த எண்ணிக்கையில் இருப்பதற்கு ‘நபில் இஹ்திகாப்’ என்றும், ரமலான் மாதத்தில் கடைசி பத்து தவிர்த்து, மற்றைய நாட்களில் அல்லது பிற மாதங்களில் தன் நேர்ச்சைக்காகவோ அல்லது எண்ணிய எண்ணங்கள் நிறை வேறுவதற்காகவோ பள்ளிவாசலில் வந்து தங்கி இருந்து அமல் செய்வது ‘வாஜிபான இஹ்திகாப்’ என்றும் அழைக்கப் படுகிறது.

இஹ்திகாபின் முக்கிய அம்சம் நோன்பிருந்து மட்டுமே இஹ்திகாப் இருக்க வேண்டும். அது வரையறுத்துச் சொல்லப்பட்ட கட்டளை. இந்த மூன்று நிலைகளையும் தவிர்த்து எப்போதெல்லாம் தொழுகையை நிறைவேற்றுவதற் காக பள்ளிவாசல் வருகிறோமோ அப்பொழுதெல்லாம் நுழைவு வாசலில் வைத்து, நான் பள்ளிவாசலில் தங்கி இருக்கும் காலஅளவு முழுவதும் ‘இஹ்திகாப்’ இருக்க நிய்யத் செய்கிறேன்” என்று சொல்லி விட்டு பள்ளிவாசலில் வந்து தொழுகையை நிறைவேற்றிச் செல்லலாம். இதன்மூலம், பள்ளிவாசலில் நாம் தங்கி இருந்த அந்த கால அளவுக்கு இஹ்திகாப் இருந்த நன்மைகளை இறைவனிடம் பெறலாம்.

நம் செயல்பாடுகள் அனைத்தும் ‘நிய்யத்’ (எண்ணத்தின்) அடிப்படையிலேயே அளவிடப்படுகின்றன. உலக ஆசாபாசங் கள், குடும்பம், தொழில், வணிகம், பணி போன்ற எல்லா வற்றையும் அல்லாஹ்விற்காக துறந்து விட்டு, அந்த உலக தொடர்புகள் அறுந்த நிலையில் அல்லாஹ்விடம் வந்து தனிமையில் கெஞ்சி, இறைஞ்சி தன் தேவைகளைப் பெற்றுக்கொள்வதே ‘இஹ்திகாப்’ இருப்பதன் முக்கிய நோக் கம் ஆகும்.

‘இஹ்திகாப்’ இருக்கும்போது நாம் செய்யவேண்டியவை வருமாறு:

பர்ளான, சுன்னத்தான, நபிலான அத்தனை தொழுகை களையும் தொழுவது,

அருள்மறை திருக்குர்ஆன் ஓதுவது, அதன் விளக்கங் களை அறிந்து கொள்வது, திக்ர் செய்வது,

அன்றாட வாழ்வில் நாம் கடைப்பிடித்து நடக்க வேண்டிய ஷரியத் சட்டதிட்டங்களை அறிந்து கொள்வது, நன்னெறி களை வளர்த்துக்கொள்வது போன்றவையாகும்.

10 நாட்களில் இத்தனை அமல்களை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் தான் ‘இஹ்திகாப்’ இருப்பது பூர்த்தியாகும்.

மேலும் ‘இஹ்திகாப்’ இருப்பவர்களால் ‘லைலத்துல் கத்ர்’ என்ற மிகச்சிறந்த இரவை பெற்றுக்கொள்ள முடியும். அதுமட்டுமல்ல இன்னும் நம் கற்பனைக்கு எட்டாத எத்தனையோ நன்மைகளை அள்ளித்தருவதும் ‘இஹ்திகாப்’ என்ற இந்த அமல் தான்.

பெண்களின் ‘இஹ்திகாப்’

ஆண்கள் போன்று பெண்களும் ‘இஹ்திகாப்’ இருப்பது சுன்னத்தான வழிமுறையாக அறியப்படுகிறது. அவர் களுக்கான ‘இஹ்திகாப்’ வழி முறைகள் சற்று தளர்த்தப் பட்டுள்ளது. அவர்கள் தங்கள் வீடுகளில் இஹ்தி காப்பில் இருப்பதே சாலச்சிறந்தது. தங்கள் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்வதற்கு வேறு ஏற்பாடுகள் தனியாக இருப்பின் அவர்கள் அந்த முஹல்லாவைச் சார்ந்த பெண்கள் மதரஸா போன்ற இடங்களில் சென்று ‘இஹ்திகாப்’ இருக்கலாம்.

வீடுகளில் ‘இஹ்திகாப்’ இருக்கும் பெண்கள் தாங்கள் ஏற்கனவே தொழுவதற்காக ஏற்படுத்தி வைத்திருக்கின்ற இடங்களில் அல்லது சற்று மறைவான வெளியார் யாரும் சுலபமாக அணுக முடியாத பகுதிகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். படுக்கையை கூட அங்கே யே நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும்.

தொழுகை, குர்ஆன் ஓதுவது, திக்ர் போன்ற அமல்களை சரியான நேரங்களில் நிறைவேற்றுவதற்காக கால அளவை நிர்ணயம் செய்து கொள்ளவேண்டும். சமையலுக்காகவும், கணவன், குழந்தை பராமரிப்பிற்காகவும் உள்ள நேரங்களில் அந்த கடமையை அவர்கள் சென்று நிறைவேற்றலாம். இரவில் தனியாகவே உறங்க வேண்டும்.

மேலும், இரவு நேரங்களில் முடிந்த அளவு தூங்காமல் இருந்து பிரார்த்தனைகளில் ஈடுபட வேண்டும். இதன் மூலம் அல்லாஹ் உங்கள் தேவைகளை நிறைவேற்றித் தருவான்.

இஹ்திகாபை நிறைவேற்றுபவர்களுக்கு, இரண்டு ஹஜ் மற்றும் இரண்டு உம்ராவை நிறைவேற்றிய நன்மையை வழங்குவதாக அல்லாஹ் வாக்களித்திருக்கின்றான். அத் தகைய நன்மையைப் பெற்றுக்கொண்ட நல்லடியார்களாக நம்மையும் ஆக்கி அருள்வானாக. ஆமீன்.

மு. முகமது யூசுப், உடன்குடி.

Next Story