எசேக்கியேல்


எசேக்கியேல்
x
தினத்தந்தி 25 Jun 2019 3:58 PM GMT (Updated: 25 Jun 2019 3:58 PM GMT)

அதிகமாக யாரும் வாசிக்காத பைபிள் நூல் எது என்று கேட்டால் ‘எசேக்கியேல்’ என்று சொல்லலாம். காரணம் இந்த நூலில் உள்ள விஷயங்கள் ஏதோ பழைய காலத்தில், அந்த மக்களுக்குச் சொன்னவை என்பது போன்ற தோற்றம் அளிப்பதும், மன அழுத்தம் தரக்கூடிய செய்திகளால் நிரம்பியிருப்பதும் தான்.

‘எசேக்கியேல்’ எனும் பெயருக்கு ‘ஆண்டவர் ஆற்றல் அளிப்பார்’ என்பது பொருள். இந்த நூலில் 48 அதிகாரங்களும், 1273 வசனங்களும், 39407 வார்த்தைகளும் அமைந்துள்ளன.

எசேக்கியேல் நூலின் சில பகுதிகள் மிகவும் பிரபலமானவை. உதாரணமாக, உலர்ந்த எலும்புக்கூடுகள் எசேக்கியேல் இறைவாக்கு உரைத்த போது உயிர்பெற்று எழுந்த புதுமை நிகழ்வு. அதே போல, “பாவம் செய்பவரே சாவர். பிள்ளைகள் பெற்றோரின் குற்றத்தைச் சுமக்க மாட்டார்கள். அவ்வாறே பெற்றோரும் பிள்ளைகளின் குற்றத்தைச் சுமக்க மாட்டார்கள்” எனும் வசனமும் மிகவும் பிரபலமானது.

எசேக்கியேல் நூலை முழுமையாகப் படித்தால், நூல் முழுவதும் இறைவனின் அன்பு இழையோடுவதைக் காண முடியும். நமது வேண்டுதல்களுக்கு அவர் எப்படி செவிகொடுக்கிறார். அவர் எப்படி நம்மை அரவணைக்கிறார். நம்மைப்பற்றி என்ன நினைக்கிறார், போன்றவற்றை எல்லாம் புரிந்து கொள்ளவேண்டுமெனில் எசேக்கியேல் நூலை நாம் முழுமையாய் வாசிக்க வேண்டும்.

பன்னிரண்டு கோத்திரங்களான இஸ்ரேலின் பத்து கோத்திரங்கள் வடக்கே “இஸ்ரேல்” என்றும், இரண்டு கோத்திரங்கள் தெற்கே “யூதா” என்றும் எல்லை பிரித்து ஆட்சியமைத்து வந்தன. அதில் இஸ்ரேல் நாடு இறைவாக்கினர்களின் வார்த்தைகளை நிராகரித்து பாவத்தின் மேல் பாவம் செய்து குவித்தது. எனவே அவர்கள் கடவுளால் கைவிடப்பட்டு அசீரியர்களால் நாடு கடத்தப்பட்டனர்.

தென் நாடான யூதா இறைவனோடு நெருங்கியும், விலகியும் வாழ்ந்து வந்தது. பிற்காலங்களில் அதுவும் இறைவனை விட்டு விலகி வேற்று தெய்வங்களின் காலடியில் விழுந்தது. எசாயா போன்ற பெரிய இறைவாக்கினர்களின் வார்த்தைகளும் அவர்களது இதயத்தில் விழவில்லை.

எசேக்கியேல் இறைவாக்கினரும் கடைசி காலத்தில் யூதாவில் இறைவாக்கு உரைத்தார். ஆனால் அவரது வார்த்தைகளும் காற்றில் அடித்துச் செல்லப்பட்டன. யூதா பாவத்தில் மூழ்கியது. அவர்கள் பாபிலோனியரின் கைகளில் சிக்கிக்கொண்டு, பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்டனர்.

கடவுள் எசேக்கியேலிடம், ‘மக்கள் கேட்க மாட்டார்கள், மனம் மாற மாட்டார்கள், உன்னை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனாலும் தொடர்ந்து இறைவாக்கு உரைக்க வேண்டும் என கட்டளை கொடுத்திருந்தார். எனவே மக்கள் இறைவார்த்தையைக் கேட்காமல் தங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொண்டபோதும் எசேக்கியா தொடர்ந்து இறைவாக்குரைத்தார்.

பாபிலோனுக்கு மக்கள் நாடு கடத்தப்பட்ட காலகட்டத்தில் பாபிலோன் பகுதியில் இருந்து இறைவாக்குரைத்தார். எனினும் தொலைவில் இருந்த எருசலேமில் என்ன நடக்கிறது என்பதை தீர்க்கதரிசனமாய் காணும் வரம் அவருக்கு இருந்தது.

ஒருமுறை ஒரு மனிதர் எருசலேமில் கீழே விழுந்து இறந்து போவதைக் காட்சியாகக் கண்டார், அதே நேரத்தில் அந்த மனிதர் அதே போல இறந்தும் போனார்.

நிகழ்காலத்தை மட்டுமல்லாமல் எதிர்காலத்தைக் காட்சி களாய் காண்பதிலும் எசேக்கியேல் இறையருள் பெற்றிருந்தார். பைபிளில் மொத்தம் 735 எதிர்கால தீர்க்கதரிசனங்கள் உண்டு. அதில் 593 எதிர்கால தீர்க்கதரிசனங்கள் நிறைவேறிவிட்டன. இந்த தீர்க்கதரிசனங்களில் பெரும்பாலானவை இருப்பது எசேக்கியேல் மற்றும் தானியேல் நூல்களில் தான்.

எசேக்கியேலின் இறைவார்த்தைகள் மூன்று கட்டங்களாக வருகின்றன. அவருடைய முப்பது வயதுக்கும், முப்பத்து மூன்று வயதுக்கும் இடைப்பட்ட காலத்தில் முதல் இறைவாக்கு காலம் வருகிறது. எருசலேமின் அழிவு தான் அதன் முதன்மையான விஷயமாய் இருக்கிறது. மக்கள் மனம் திரும்ப வேண்டும் எனும் பாடம் தொடர்ந்து உரைக்கப்படுகிறது. அதன்பின் யூதா பாபிலோனின் ஆட்சிக்குள் அடங்கிவிட்டது.

அடுத்த கட்டமான இறைவாக்கு அவரது 36, 37 வயதுகளில் வருகிறது. இப்போது எருசலேமைச் சுற்றி இருக்கின்ற நாடு களைக் குறித்தும் அவர் இறைவாக்கு உரைக்கிறார். அந்த காலகட்டத்துக்குப் பின் இறைவன் அவரை இறைவாக்கு உரைக்க நீண்டகாலம் அனுமதிக்கவில்லை.

மூன்றாவது கட்டமாக, அவரது 50-வது வயதில் இறைவாக்கு உரைக்க ஆரம்பித்தார். மீண்டும் தாயகம் திரும்ப வேண்டும் என்பதே அவரது அந்த செய்தியின் அடிப்படை. வறண்டு எலும்புக் கூடாய் கிடக்கும் மக்கள் மீண்டும் உயிர் பெற்று எழவேண்டும் எனும் செய்தி அறிவிக்கப்பட்டது. எருசலேம் தேவாலயத்தை மீண்டும் கட்டி எழுப்புவதைக் குறித்த இறைவாக்கும் அவரிடம் இருந்தது. ஆனாலும் அவர் அதைக் காணுமுன் இறந்து விட்டார்.

மக்கள் சிலைவழிபாடு செய்வதை எதிர்த்தார். நாடு முழுவதும் ஏழைகள் சுரண்டப்படுவதைக் கண்டு கடுமையான இறைவாக்குகளை உரைத்தார். அவர்களுடைய நன்றி இல்லாத நிலைமையையும் கடுமையாகக் கடிந்து கொண்டார்.

இறைவன் தீர்ப்பிடுவார் என்பதையும், இறைவன் பழிவாங்குவார் என்பதையும், மீண்டும் மக்களை ஒருங்கிணைப்பார் என்பதையும் இந்த நூல் விளக்குகிறது. விவிலியத்தின் கடைசி நூலான திருவெளிப்பாடு நூலுக்கான சாவி இந்த எசேக்கியேல் நூலில் இருப்பதாக இறையியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

(தொடரும்)

Next Story