அமைதியை நிலை நாட்டுங்கள்


அமைதியை நிலை நாட்டுங்கள்
x
தினத்தந்தி 28 Jun 2019 1:08 PM GMT (Updated: 28 Jun 2019 1:08 PM GMT)

ஒரு நாடு நல்ல நாடாக இருக்க வேண்டுமெனில் அங்கு அமைதியான சூழல் நிலவ வேண்டும். அந்த அமைதியான சூழலை நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்துதான் உருவாக்க முடியும்.

வாழும் நாட்டில் அமைதியை நிலைநாட்டும் பணியில் முஸ்லிம்களாகிய நமக்கும் பெரும்பங்கு உள்ளது.

இஸ்லாம் என்பதே அமைதி மார்க்கம்தான். ‘ஸலாம்’ (அமைதி) எனும் வேர்சொல்லில் இருந்துதான் ‘இஸ்லாம்’ எனும் சொல் உருவாகிறது. அதுமட்டுமல்ல, ஒவ்வோர் இறைநம்பிக்கையாளரையும் ஏக இறைவன் இந்த அமைதியின்பால் இவ்வாறு அழைக்கின்றான்:

“இறைநம்பிக்கை கொண்டோரே, நீங்கள் முழுக்க முழுக்க இஸ்லாத்தில் நுழைந்துவிடுங்கள்” (திருக்குர்ஆன் 2:208).

இந்த வசனத்தில் கூறப்பட்டிருக்கும் ‘இஸ்லாம்’ எனும் பதத்தைக் குறிக்க, மூலத்தில் ‘ஸில்ம்’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு இரண்டு பொருள்கள் உள்ளன. ஒன்று: அமைதி. இரண்டு: இஸ்லாம்.

ஆக, இந்த வசனத்தின் பொருளை ஒருவகையில் இப்படியும் கூறலாம்; ‘இறைநம்பிக்கை கொண்டோரே, நீங்கள் முழுக்க முழுக்க அமைதியில் நுழைந்துவிடுங்கள். போருக்கு எதிரான அமைதியில் நுழைந்துவிடுங்கள்’.

இரு முஸ்லிம்கள் சந்தித்துக்கொண்டால் இருவரும் கூறவேண்டிய முகமன் என்ன?

‘அஸ்ஸலாமு அலைக்கும்’. (உங்கள் மீது சாந்தியும் அமைதியும் உண்டாவதாக!).

அதற்கான பதிலை அடுத்தவர் எவ்வாறு கூற வேண்டும்?

‘வ அலைக்குமுஸ்ஸலாம்’. (உங்கள் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக)

உலகில் சுமார் 150 கோடி முஸ்லிம்கள் ஒவ்வொரு நாளும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது, ‘அஸ்ஸலாமு அலைக்கும், வ அலைக்குமுஸ்ஸலாம்’ என்று கூறுவதன் மூலம் அவர்கள் வாழும் பகுதியில் எவ்வளவு பெரிய அமைதியை ஏற்படுத்த அவர்கள் முயலுகின்றனர் என்பதை எண்ணிப் பாருங்கள்.

ஆகவேதான் ‘ஹிஜ்ரத்’ எனும் புலம் பெயர்தலின்போது மதீனாவில் முதன் முதலாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நுழைந்த வேளையில் மக்களிடம் கூறினார்கள்: “மக்களே, ஸலாமை (அமைதியைப்) பரப்புங்கள். அறிந்தவர் அறியாதவர் அனைவர் மீதும் ஸலாமைப் பரப்புங்கள்”. (முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள், பிற நாட்டு அரசர்களுக்கு கடிதம் எழுதும்போது அந்தக் கடிதத்தை இவ்வாறுதான் தொடங்குவார்கள்: “நேர்வழியைப் பின்பற்றி நடப்போருக்கு சாந்தி உண்டாகட்டும்” (திருக்குர்ஆன் 20:47)

வாழும் தேசத்தில் அமைதியை நிலைநாட்டும் முஸ்லிம்களுக்கு மறுமையில் இறைவன் தரும் சுவனத்தின் பெயர் என்ன தெரியுமா? ‘தாருஸ்ஸலாம்’ (அமைதி இல்லம்). ஆம், சுவனத்தின் இன்னொரு பெயர்தான் இது. அங்கு வீணான தேவையற்ற பாவமான பேச்சுகள் எதுவும் பேசப்படமாட்டாது. மாறாக, அங்கு என்ன பேசப்படும் என்பது குறித்தும் திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது: “அங்கு அவர்கள் வீண் பேச்சுகளையோ, பாவமான விஷயங்களையோ செவியேற்க மாட்டார்கள், சாந்தி சாந்தி என்ற பேச்சைத் தவிர”. (திருக்குர்ஆன் 56:25,26)

போர் என்பது ரத்தமும் சதையுமாக பல உயிர்களை காவு வாங்கும் ஒரு வெறுக்கத்தக்க செயல். இஸ்லாமும் தற்காப்புப் போர்களில் ஈடுபட்டுள்ளது. ஆயினும் போர்களில் கிடைக்கும் வெற்றியை ஒருபோதும் இஸ்லாம் சிலாகித்துக் கூறுவதில்லை.

ஆனால் கத்தியின்றி ரத்தமின்றி கிடைத்த ஹுதைபிய்யா எனும் உடன்படிக்கை குறித்து கூறும்போது மட்டும், “(நபியே) நாம் உமக்கு வெளிப்படையான வெற்றியை அளித்துவிட்டிருக்கிறோம்” என்று கூறுகின்றான் இறைவன். (திருக்குர்ஆன் 48:1)

ஏன்..? என்ன காரணம்..? அது யுத்தமல்ல. அது ஓர் உடன்படிக்கை மட்டுமே. பத்து வருடங்கள் போர் செய்யக்கூடாது எனும் உடன்படிக்கை. அந்த உடன்படிக்கையைத்தான் இறைவன் ‘தெளிவான வெற்றி’ என்று அறிவிக்கின்றான். உடன்படிக்கையை தெளிவான வெற்றி என்று அறிவிப்பதில் இருந்தே இஸ்லாம் எந்த அளவுக்கு அமைதியை விரும்புகின்றது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

ஒருவருடைய பெயரில் கூட வன்முறையைக் குறிக்கும் சொற்கள் இருக்கக் கூடாது என்று இஸ்லாம் விரும்புகின்றது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “போர் (ஹர்ப்), கசப்பு (முர்ரா) என்பவை வெறுக்கத்தக்க பெயர்கள் ஆகும்” (அஹ்மத், அபூதாவூத்)

ஒருமுறை ஓர் ஒட்டகத்தில் இருந்து பால் கறக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அருகில் இருந்த மக்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்: “இந்த ஒட்டகத்திலிருந்து யார் பால் கறப்பார்கள்?”. அப்போது ஒருவர் முன் வந்தார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள், “உமது பெயர் என்ன?” என்று கேட்டார்கள். அவர், “முர்ரா” (கசப்பு) என்றார். உடனே நபி (ஸல்) அவர்கள், “உட்கார்” (நீர் பால் கறக்க வேண்டாம்) என்றார்கள். மீண்டும் ஒருவர் எழுந்தார். அவரிடமும் நபி (ஸல்) அவர்கள், “உமது பெயர் என்ன?” என்று கேட்டார்கள். அவர், “ஹர்ப்” (போர்) என்றார். உடனே நபி (ஸல்) அவர்கள், “உட்கார்” (பால் கறக்க வேண்டாம்) என்றார்கள். மூன்றாவதாக ஒருவர் எழுந்தார். அவரிடமும் நபி (ஸல்) அவர்கள், “உமது பெயர் என்ன?” என்று கேட்டார்கள். அவர், “யஈஷ்” (உயிருடன் வாழ்பவர்) என்றார். அவரிடம் பால் கறக்குமாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், ஹாகிம்)

ஆக, பெயரில்கூட வன்முறையும் அமைதியின்மையும் இருப்பதை நபி (ஸல்) அவர்கள் பொருந்திக்கொள்ளவில்லை என்பது இதிலிருந்து தெரிய வருகின்றது. எனவே பெயரில் கூட அமைதியின்மையை விரும்பாத மார்க்கத்தின் சொந்தக்காரர்கள் இந்த நாட்டில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.

அமைதியைக் குறித்து வெறுமனே பேசிக்கொண்டிருக்கும் மார்க்கம் அல்ல இஸ்லாம். மாறாக அதனைச் செயலளவில் நடைமுறைப்படுத்துவதற்கான பயிற்சியையும் முஸ்லிம்களுக்கு வழங்குகிறது. ஆம், ஹஜ் என்ற பெயரில் உலகளாவிய முஸ்லிம்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் அமைதிப் பயிற்சியை இஸ்லாம் வழங்குகிறது.

ஹஜ்ஜை நிறைவேற்றுபவர் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள் குறித்து கூறும்போது அல்லாஹ் கூறுகின்றான்: “ஹஜ்ஜின்போது இச்சைகளைத் தூண்டக்கூடிய சொல், செயல் மற்றும் தீவினை, சண்டை சச்சரவு ஆகியவற்றில் ஈடுபடக் கூடாது”. (திருக்குர்ஆன் 2:197)

நாம் வாழும் தேசத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்கு இயன்றவரை பாடுபட வேண்டும். இல்லையேல் குறைந்தபட்சம் இப்ராகிம் (அலை) அவர்கள் தாம் வாழ்ந்த நாட்டுக்காகப் பிரார்த்தனை செய்ததைப்போன்றாவது பிரார்த்திக்க வேண்டும்.

மக்கா நகர் குறித்து இப்ராகிம் (அலை) அவர்களின் பிரார்த்தனை இவ்வாறு இருந்தது: “இப்ராகிம் இவ்வாறு பிரார்த்தனை புரிந்ததை நினைவுகூருங்கள்: ‘என் இறைவனே! (மக்காவாகிய) இந் நகரத்தை அமைதி அளிக்கக்கூடியதாக ஆக்குவாயாக!” (திருக்குர்ஆன் 14:41)

- நூஹ் மஹ்ளரி, குளச்சல்.

Next Story