கந்தனை வழிபடும் செவ்வாய் விரதம்
கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதி, முருகப்பெருமான்.
செவ்வாய் தோஷம் உள்ளவர்களும், பூமி பிரச்சினை உள்ளவர்களும் செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டு வந்தால், விரைவிலேயே செவ்வாய் தோஷத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அனைத்தும் படிப்படியாக நீங்கிவிடும். முருகப்பெருமானுக்கு உகந்த விரதங்களாக மூன்று விரதங்கள் பிரதானமாக சொல்லப்பட்டுள்ளன. அவை: வார விரதம், நட்சத்திர விரதம், திதி விரதம்.
வார விரதம் என்பது செவ்வாய்க்கிழமைகளில் அனுஷ்டிப்பது, நட்சத்திர விரதம் என்பது கார்த்திகை நட்சத்திரத்தில் அனுஷ்டிப்பது, திதி விரதம் என்பது சஷ்டி திதியில் அனுஷ்டிப்பது. நவக்கிரகங்களில் செவ்வாயோடு நேரடி தொடர்பு கொண்ட முருகப்பெருமானை, செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து வழிபடுவது சிறப்பானது.
செவ்வாய்க்கிழமை தோறும் காலையில் நீராடி, அருகில் உள்ள முருகப்பெருமான் ஆலயத்துக்குச் சென்று வழிபட வேண்டும். பிறகு வீட்டுக்குத் திரும்பியதும், பால் அல்லது பழச்சாறு மட்டும் அருந்தி, விரதத்தை மேற்கொள்ளவேண்டும். கந்தசஷ்டிக் கவசம், கந்த குரு கவசம் போன்ற, முருகனுக்குரிய பாடல்களை பாராயணம் செய்யலாம்.
மாலை 6 மணிக்கு மறுபடியும் முருகன் கோவிலுக்குச் சென்று வழிபட்டு விரதத்தை நிறைவு செய்யவேண்டும். இப்படி 9 செவ்வாய்க்கிழமைகள் விரதம் இருந்தால், செவ்வாய் தோஷத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் நீங்கிவிடும். இதுதவிர ஆடி செவ்வாயில் மேற்கொள்ளும் நோன்பு, திருமணத் தடைகளை விலக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் வழங்கும்.
Related Tags :
Next Story