மீக்கா


மீக்கா
x
தினத்தந்தி 20 Aug 2019 10:25 AM GMT (Updated: 20 Aug 2019 10:25 AM GMT)

பிரபல இறைவாக்கினர் ஏசாயாவின் காலத்தில் வாழ்ந்த ஒரு இறைவாக்கினர் மீக்கா.

ஏசாயா செல்வச் செழிப்புள்ள அரசவைக் குடும்பத்தில் பிறந்தவர். மீக்காவோ, ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். அடக்குமுறைக்கு ஆளாகும் சமூகத்தின் பிரதிநிதி. ஆனால் இறைவாக்குகளைப் பொறுத்தவரை ஏசாயாவின் இறைவாக்கோடு ஒத்துப்போகும் இறைவார்த்தைகளைப் பகிர்ந்தவர்.

இவர் சின்ன இறைவாக்கினர்களின் பட்டியலில் வருகிறார். கி.மு.735- களில் இறைவாக்கு உரைத்தவர். இறைமகன் இயேசுவின் பிறப்பை சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பே தீர்க்கதரிசனமாய்க் கூறி விவிலியத்தின் மிக முக்கிய இறைவாக்கினராய் மாறியவர்.

“எப்ராத்தா எனப்படும் பெத்லகேமே, யூதாவின் குடும்பங்களுள் மிகச்சிறியதாய் இருக்கின்றாய். ஆயினும், இஸ்ரயேலை என் சார்பாக ஆளப் போகின்றவர் உன்னிடமிருந்தே தோன்றுவார்; அவர் தோன்றும் வழி மரபோ ஊழி ஊழிக் காலமாய் உள்ளதாகும்” எனும் அவரது இறைவார்த்தையை அறியாத கிறிஸ்தவர்கள் இருக்க முடியாது.

மீக்காவின் இறைவார்த்தை சமூக அவலங்களுக்கு நேரான சாட்டையாய் சுழன்றது. இறைவனின் பிள்ளைகள் ஒளியைப் பிரதிபலிக்க வேண்டியவர்கள், ஆனால் அவர்களோ இருளின் ஆதிக்கத்தில் இருக்கிறார்களே என அவர் கலங்கினார்.

குறிப்பாக மூன்று பிரச்சினைகள் அவரது மனதை அலைக்கழித்தன. ஒன்று சிலை வழிபாடு. தங்களை படைத்து வழிநடத்தும் யாவே தேவனை விட்டு விட்டு வேறு தெய்வங்களை மக்கள் வழிபட்டனர். கடவுளுக்கு எதிரான மிகப்பெரிய பாவமாக மீக்கா இதைப் பார்த்தார்.

இரண்டாவதாக, மக்களின் ஒழுக்கமின்மை. பாவத்தின் வழிகளில் பயணம் செய்த மக்கள் தங்களுடைய ஆன்மாவை அழுக்கடையச் செய்து கொண்டிருந்தனர். இது தன்னையே அழிக்கின்ற பாவம்.

மூன்றாவதாக நீதியின்மை. செல்வந்தர்கள் ஏழைகளை அடக்கி கொடுமைப் படுத்தினார்கள். நீதியும் நியாயமும் பணம் இருப்பவர்களின் பக்கமாகவே சார்ந்து கிடந்தன. ஆலயங்களிலும் கையூட்டு நடந்தது. இறைவனின் வார்த்தையை விட பணம் பெற்றுத் தரும் வார்த்தைகளே பகிரப்பட்டன. பிறருக்கு எதிரான குற்றங்கள் மலிந்து விட்டன. வறியவர்கள், விதவைகள் ஆகியோர் நசுக்கப்பட்டனர். பிறருக்கு எதிரான மிகப்பெரிய பாவங்கள் இவை.

இப்படி கடவுளுக்கு எதிரான, தனக்கு எதிரான, பிறருக்கு எதிரான எனும் மூன்று வகைப் பாவங்களும் மீக்காவின் மனதை நிலைகுலையச் செய்தன. அவரை இறைவன் இறைவாக்கு உரைக்க அழைத்தார். தூய ஆவியின் இயல்புகளோடு, தனது இயல்பும் இணையும் போது அங்கே வலிமையான தீர்க்கதரிசிகள் உருவாகின்றனர்.

மொத்தம் ஏழு அதிகாரங்கள் அடங்கியது இவரது நூல். 105 வசனங்களும், 3153 வார்த்தைகளும் அடங்கியது. அதில் முதல் மூன்று அதிகாரங்களும் மக்களின் குற்றங்களும், அதற்காக இறைவன் தண்டனை தரப்போகிறார் எனும் எச்சரிக்கையுமாய் அமைகிறது.

அதன் பின் வருகின்ற இரண்டு அதிகாரங்களும் இறைவன் தர விரும்புகின்ற அமைதியையும், பாதுகாப்பையும் பேசுகிறது. கடைசி இரண்டு அதிகாரங்களும் இறைவனின் இரக்கத்தையும், நீதியையும் பேசுகிறது.

இறைமகன் இயேசுவின் முதல் வருகையை மட்டுமல்லாமல், இரண்டாம் வருகையைப் பற்றியும் இந்த நூல் பூடகமாய்ப் பேசுகிறது.

மிக அற்புதமாய்க் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த நூலில் இறைவனின் இரண்டு இயல்புகளை மிக நேர்த்தியாக மீக்கா பதிவு செய்கிறார். இறைவன் பாவங்களை வெறுக்கிறவர், அதற்கான தண்டனையைத் தருபவர்.

அதே நேரத்தில் இறைவன் பாவிகளை நேசிக்கிறவர், அவர்களை மன்னித்து ஏற்றுக்கொள்பவர். தண்டனை தராத மன்னிப்பு இல்லை, மன்னிப்பு பெறாமல் மீட்பு இல்லை எனும் தத்துவ சிந்தனை இந்த நூலில் காணப்படுகிறது.

அதனால் தான் ஒவ்வொரு பகுதியையும் எச்சரிக்கையின் ஒலியோடு தொடங்கி, ஆறுதலின் தொனியோடு முடிக்கிறார்.

இறைமகன் இயேசுவின் சிலுவை மரணம் என்பது உலக பாவங்களுக்காக அவர் ஏற்றுக் கொண்ட தண்டனை. அவருடைய சிலுவை மரணம் என்பது மனிதர்களின் பாவங்களுக்காக அவர் தருகின்ற மன்னிப்பு.

சிலுவை இல்லாமல் இயேசு மன்னித்திருந்தால் அவர் இரக்கமுடையவர். ஆனால் நீதியற்றவர் எனும் நிலை ஏற்பட்டிருக்கும்.

மன்னிக்காமல் தண்டனை கொடுத்திருந்தால், அவர் நீதிபரர். ஆனால் இரக்கமற்றவர் எனும் இயல்பு உருவாகியிருக்கும். ஆனால் இறைவனின் இயல்பு இரண்டும் கலந்தது என்பதையே மீக்கா அழகாகப் பதிவு செய்கிறார்.

எருசலேமிலிருந்து சுமார் 25 மைல் தொலைவில் தான் அவருடைய ஊர் இருந்தது. அவருடைய இறைவாக்கு பெரும்பாலும் யூதாவை மையமாகக் கொண்டிருந்தாலும், அவர் இஸ்ரேலுக்கு எதிரான இறைவாக்குகளையும் உரைக்கிறார். சுமார் 25 ஆண்டு காலம் இவர் இறைவாக்கு உரைத்தார் என்கிறது இறையியல் வரலாறு.

நேர்மையைக் கடைப்பிடித்தலையும்,

இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும்

உன் கடவுளுக்கு முன்பாக

தாழ்ச்சியோடு நடந்து கொள்வதையும் தவிர

வேறு எதை ஆண்டவர்

உன்னிடம் கேட்கின்றார்

எனும் அழைப்பே மீக்கா நூலின் வாயிலாக நமக்கு விடப்படுகிறது.

மிகச்சிறிய, ஆனால் மிக ஆழமான சிந்தனைகள் அடங்கிய இந்த நூலை வாசிப்பது ஒரு இனிய ஆன்மிக அனுபவம்.

Related Tags :
Next Story