காரிய தடை நீக்கும் விநாயகர் காயத்ரி மந்திரம்

இந்து மதத்தில் ஆறு சமய கோட்பாடுகள் வகுக்கப்பட்டுள்ளன. அவற்றில் கணேச வழிபாடு முதன்மையானது. இருப்பினும், இந்து மதத்தில் உள்ள சமயங்களில் அனைத்திலும் கணபதியை மூல முதல்பொருளாக அனைவரும் வழிபட்டு வருகின்றனர்.
ஒருவர் ஒரு செயலைச் செய்யத் தொடங்கும் போது, விநாயகரை வழிபட்டு வணங்கித் தொழுதால், அவரது எண்ணத்திற்கு ஏற்ப அந்த செயல் இடையூறு இன்றி நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
நினைத்த மாத்திரத்தில் எளிமையாக அமைத்து வழிபடக்கூடிய ஒரே தெய்வம் விநாயகர் என்றால் அது மிகையாகாது. தடைகளை நீக்குபவர் என்பதால் இவருக்கு விக்னேஸ்வரர் என்ற பெயரும் உண்டு. சிவபெருமான், திரிபுரத்தை எரிக்க புறப்பட்டபோது, விநாயகரை வழிபடாமல் சென்றார். அப்போது வழியில் அவரது தேரின் அச்சு முறிந்தது. அதன் பிறகே தான் விநாயகரை வழிபடாமல் வந்தது சிவபெருமானுக்கு நினைவுக்கு வந்தது. இதையடுத்து அவர் விநாயகரை வழிபட்டு திரிபுரத்தை எரித்து வெற்றி கண்டார். எனவே முழுமுதற் பொருளை வழிபடவேண்டியது அவசியம் ஆகிறது.
‘விநாயகர்’ என்ற சொல்லுக்கு இவருக்கு மேல் தலைவன் இல்லை. ஒப்புயர்வற்றவர், இடையூறுகளை நீக்குபவர், தீயவர்களை அடக்குபவர் என பல பொருள்கள் கூறப்படுகின்றன.
கணேச காயத்திரி மந்திரம்:
‘ஓம் தத் புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
நந்தோ தந்தி ப்ரசோதயாத்’
பொருள்:- முழுமுதற் கடவுளான பரம புருஷனை நாம் அறிவோமாக. வக்ர துண்டன் மீது தியானம் செய்கிறோம். தந்தினாகிய அவன் நம்மை, அனைத்து செயல்களிலும் உடன் இருந்து வெற்றி பெறச் செய்வானாக.
விநாயகப் பெருமானை துதிக்கும்போது மற்ற மந்திரங்கள், அர்ச்சனைகள் முதலியவற்றை செய்வதும், மேற்கண்ட கணேச காயத்திரி மந்திரத்தையும் சொல்லி வழிபடுவதும் நல்லது. பூஜையின் முடிவில் கற்பூர தீபம் காட்டும்போது கணேச காயத்திரியை தினமும் 108 முறை சொல்லலாம். இவ்வாறு சொல்வதால் வினைகள் நீங்கும். காரிய தடைகள் அகலும். வெற்றி உண்டாகும். பாவங்கள் விலகும். உடலும், உள்ளமும் வலிமையுடன் திகழும்.
Related Tags :
Next Story