கர்ம வினைக்கேற்ப பலன் தரும் சனீஸ்வரன்


கர்ம வினைக்கேற்ப பலன் தரும் சனீஸ்வரன்
x
தினத்தந்தி 29 Aug 2019 10:46 AM GMT (Updated: 29 Aug 2019 10:46 AM GMT)

நவக்கிரகத்தில் ஈஸ்வரப் பட்டம் பெற்றவர், சனீஸ்வர பகவான். இவர் ‘கர்மக் காரகன்’, ‘ஆயுள்காரகன்’ என்று அழைக்கப்படுகிறார். வாழ்க்கையில் கடுமையான துன்பத்தையும், அளவற்ற நன்மையையும் தருபவர் இவரே.

ஒருவரின் கர்ம வினையை முழுமையாக அனுபவிக்க உதவுபவர். கிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக் கூடியவர். ஒருவரின் வாழ்வில் ஏற்படும் எல்லா சம்பவங்களையும் தனக்குள் பதிவு செய்பவர். மனிதர்களின் அனைத்து கர்ம வினைகளும், சனி கிரகத்தில்தான் பதிவாகி இருக்கும். இவர் கர்ம வினையை நிகழ்த்த உதவி செய்பவர்களாகவும், சனியின் பிரதிநிதிகளாகவும் ராகுவும், கேதுவும் செயல்படுகிறார்கள்.

சனி பகவானுக்கு, ‘மந்தன், முடவன், கிழவன், நீலன், அந்தகன், காரி, சவுரி’ என பல பெயர்கள் உள்ளன. மனித உறவுகளில் இவர் சித்தப்பா முறையை குறிப்பிடுவார். உடல் உறுப்புகளில், கால்கள், வெளியே தெரியும் படியான நரம்புகள், இடங்களில் அசுத்தமான இடங்களைக் குறிப்பார்.

துலாம் ராசிக்காரர் ஒருவருக்கு, அவரவர் கர்ம வினைப்படி, பூர்வ புண்ணிய பலத்திற்கேற்ப நன்மை, தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகர் சனியே. அதனால்தான் சனி துலாம் ராசியில் உச்சம் அடைகிறார். இவரை ‘கர்ம வினை அதிகாரி’ என்றும் கூறலாம். ஜாதகத்தில் சனியின் வலிமை பூர்வ ஜென்ம வலிமைக்கு ஏற்பவே இருக்கும்.

9-ம் இடம் என்னும் பாக்கிய ஸ்தானம் வலுப்பெற்றவர்களது ஜாதகத்தில், சனி வலிமையாக இருப்பார். சனி கொடுத்தால் யாராலும் தடுக்க முடியாது. அடி முட்டாள்களைக் கூட மிகப்பெரிய பட்டம், பதவிகளில் அமர வைக்கும் சக்தி படைத்தவர் சனீஸ்வரன். அதே நேரத்தில் அதிபுத்திசாலி, மிகப் பெரிய ராஜதந்திரியைக் கூட தெருவில் தூக்கி வீசிவிடுவார். ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன், பதவியில் இருப்பவன், பதவி இல்லாதவன் என்ற வித்தியாசம் எதுவும் சனி பகவானுக்கு கிடையாது. பல காரியங்களை கண் இமைக்கும் நேரத்தில் நடத்திக் காட்டும் சர்வ வல்லமை படைத்த ஒரே கிரகம் சனியாகும்.

ஒருவருக்கு கெட்ட நேரம் வந்துவிட்டால் அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி, என்ன நடக்கிறது என்று அவர் யூகிக்கும் முன்பே எல்லாம் நடந்து முடிந்து இருக்கும். அதே நேரத்தில் சனியால் யோக பலன்கள் அனுபவிக்க வேண்டும் என்று ஜாதகத்தில் இருந்தால், அவரை எந்த உயரத்திற்கும் கொண்டு செல்லும் ஆற்றல், வல்லமை சனி பகவானுக்கு உண்டு. ஆகையால்தான் ‘சனியைபோல் கொடுப்பவனும் இல்லை, கெடுப்பவனும் இல்லை’ என்று சொல்கிறார்கள்.

சனீஸ்வரருக்கு திசா புத்திகளுடன், அந்தர பலத்துடன் கோச்சார பலமும் அதிகமாகும். ஒருவர் பிறந்த ராசிக்கு 1, 2, 12, ஆகிய வீடுகளில் சனிபகவான் வரும்போது ஏழரை சனி என்ற அமைப்பை ஏற்படுத்துகிறார். அதேபோல் ராசிக்கு நான்காம் வீட்டில் வரும்போது அர்த்தாஷ்டம சனியாக பலன் தருகிறார். ராசிக்கு ஏழாம் வீட்டில் வரும்போது கண்டக சனியாகவும், ராசிக்கு எட்டாம் வீட்டில் வரும்போது அஷ்டம சனியாகவும் பலன்களை தருகிறார்.

நமக்கு குடும்பத்தில் கஷ்ட நஷ்டங்கள், உடல்நல குறைவு, விபத்துகள், வியாபாரத்தில், தொழிலில் கடன், நஷ்டம், ஏற்பட்டாலும், அலுவலகத்தில் ஏதாவது பிரச்சினை, இடமாற்றம் போன்றவை நடந்தாலும், வீட்டில் பிள்ளைகள் சொல் பேச்சு கேட்காமல், படிக்காமல் விஷமத் தனங்கள் செய்தாலும், எந்த கிரக திசா புத்தி மூலம் ஒருவருக்கு கெடுதல் வந்தாலும் அது சனீஸ்வரரால்தான் நடக்கிறது என்ற தவறான எண்ணம் மக்களிடையே இருக்கிறது.

ஜனன ஜாதகத்தில் சனி வலிமை பெற்றவர்களுக்கு, தன் தசா காலத்தில், தான் நின்ற இடத்திற்கு ஏற்ப ஏராளமான நற்பலன்களை சனி பகவான் வாரி வழங்குவார். உயர் பதவி, தொழில், அந்தஸ்து என எட்டாத உயரத்தில் ஏற்றி விடுவார். வலிமை இழந்தவர்களுக்கு நீசத் தொழில், வறுமை, சிறை தண்டனை கொடுத்து பாவ, புண்ணியங்களை உணர்த்தி வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொடுப்பார். ஒரு ஜாதகத்தில் சனி அமர்ந்த இடத்தை வைத்தே பூர்வ ஜென்ம, பாவ, புண்ணிய பலனை கூறிவிட முடியும். மேலும் சனி ஒளியற்ற கிரகம் என்பதால், தன்னுடன் இணைந்த கிரகத்தின் ஒளிக்கு ஏற்ப நன்மை, தீமைகள் இருக்கும்.

பொதுவாக அசுப கிரகங்கள் தரும் பலன்களில் ஏற்ற இறக்கம் மிகுதியாகஇருக்கும் என்பதால், நன்மை வந்தாலும் அந்த நன்மையை அனுபவிக்க முடியாத சிரமமும் இருக்கும். சர்க்கரை ஆலை அதிபருக்கு சர்க்கரை வியாதியை தருவார். சர்க்கரை வியாதி இல்லாதவருக்கு சர்க்கரை வாங்க பணம் இல்லா நிலையை தருவார்.

சனி தசை, புத்தி அந்தர காலங்களிலும் கோச்சார பாதிப்பு காலங்களிலும் எளிய பரிகாரமாக, சனி ஸ்தலமான திருநள்ளாறு சென்று வழிபட்டு அன்னதானம் செய்யலாம். சனிக்கிழமை வரும் பிரதோஷ தினத்தில் சிவனுக்கு வில்வ இலை களால் அர்ச்சனை செய்து வழிபடலாம். சனிக் கிழமை ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தி வணங்கலாம். பார்வையற்றோர், மாற்றுத் திறனாளிகள், நோயாளிகள், முதியோர்கள், தொழிலாளிகள், துப்புரவு தொழிலாளிகள் போன்றவர்களுக்கு செய்யும் உதவி நல்ல பலன் தரும். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு வன்னி மர சமித்துகளால் ஹோமம் செய்து வழிபடலாம். சனியின் நட்சத்திரமான பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரம் வரும் நாட்களில் அன்னதானம், வஸ்திர தானம், நல்லெண்ணெய் தானம், இரும்புச் சட்டி தானம் செய்வதும் சிறப்பான பலன்களைத் தரும்.

சனி கிரகம் பற்றி..

நிறம் - கறுப்பு

குணம் - குரூரன்

மலர் - கருங்குவளை

ரத்தினம் - நீலக்கல்

சமித்து - வன்னி

தேவதை - எமன்

பிரத்யதி தேவதை - பிரஜாபதி

திசை - மேற்கு

ஆசன வடிவம் - வில்

வாகனம் - காகம்

தானியம் - எள்

உலோகம் - இரும்பு

சுவை - கசப்பு

பிணி - வாதம்

ராகம் - யதுகுலகாம்

நட்பு - புதன், சுக்ரன், ராகு, கேது

பகை - சூரியன், சந்திரன், செவ்வாய்

சமம் - வியாழன்

ஆட்சி - மகரம், கும்பம்

மூலத்திரிகோணம் - கும்பம்

உச்சம் - துலாம்

நீச்சம் - மேஷம்

நட்சத்திரங்கள் - பூசம், அனுஷம், உத்திரட்டாதி

திசா காலம் - 19 வருடங்கள்

பார்வை - 3, 7, 10-ம் இடங்கள்

பாலினம் - அலி

கோசார காலம் - 2½ வருடம்

உருவம் - குள்ளம்

உபகிரகம் - குளிகன்

ஸ்தலம் - திருநள்ளாறு

- பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி

Next Story