நவக்கிரகங்கள் தரும் சுப யோகங்கள்


நவக்கிரகங்கள் தரும் சுப யோகங்கள்
x
தினத்தந்தி 30 Aug 2019 11:47 AM GMT (Updated: 30 Aug 2019 11:47 AM GMT)

செல்வமும், மகிழ்ச்சியும் அளிக்கும் விதத்தில் ஜாதக ரீதியாக நூற்றுக்கும் மேற்பட்ட யோகங்கள் இருப்பதாக ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகிறது.

ஒரு மனிதன் பிறக்கும்போது வான மண்டலத்தில் சுழலும் ஒன்பது கோள்களும், வெவ்வேறு நிலைகளில் அமைகின்றன. சில குறிப்பிட்ட நிலைகளில் அமர்ந்த கிரகங்கள் அளிக்கும் பலன்களை யோகம் என்று ஜோதிடம் குறிப்பிடுகிறது. அத்தகைய நிலையில் கிரகங்களால் உருவாகும் சுப யோகங்கள் பற்றிய குறிப்பு களை இங்கே காணலாம்.

இன்றைய நவீன ஜோதிட நூல்களுக்கு அடிப்படையாக உள்ள ஜோதிட மேதை வராகமிகிரர் அளித்த பிருஹத் ஜாதகம் என்ற நூலில் சொல்லப்பட்ட நாபஸ யோகங்கள் வரிசையில் ஏழு சங்கியா யோகங்கள் பற்றிய குறிப்புகளை இங்கே காணலாம். அவை, வல்லகி, தாமனி, பாசம், கேதாரம், சூலம், யோகம், கோளம் என்று ஏழு வகையாக அமைகின்றன.

1) வல்லகி யோகம்

ஒருவரது சுய ஜாதகத்தில் ஏழு கிரகங்களும் ஏழு ராசிகளில் தொடர்ச்சியாக அமர்ந்து இருக்குமானால் அது வல்லகி யோகம் என்று சொல்லப்படும். அந்த யோகத்தில் பிறந்தவர்கள் கூர்மையான புத்தி உள்ளவனாகவும், சங் கீதம், நடனம், ஓவியம் போன்ற நுண் கலைகளில் தேர்ச்சியும், அவற்றில் பற்றுள்ள ரசிகனாகவும் இருப்பான்.

2) தாமனி யோகம்

ஒருவரது ஜாதகத்தில் ஏழு கிரகங்களும், தொடர்ச்சியாக ஆறு ராசிகளில் அமர்ந்து இருப்பது தாமனி யோகம் எனப் பெயர் பெறும். இந்த யோகத்தில் பிறந்தவர்கள் தர்ம சிந்தனை கொண்டவர்களாகவும், தாமாக முன்வந்து, பிறருக்கு உதவிகளைச் செய்வதில் விருப்பம் கொண்ட வர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் கால்நடைகளின்மீது அக்கறை கொண்டவர்களாக, குறிப்பாக பசு மாடுகள் மீது பிரியம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

3) பாசம் யோகம்

ஏழு கிரகங்களும் தொடர்ச்சியாக ஐந்து ராசிகளில் இருப்பது பாசம் யோகம் என்று சொல்லப்படும். ஒருவரது சுய ஜாதகத்தில் அமைந்த இந்த யோகம் கொண்டவர்கள் நல்ல வழிகளில் தங்களது சம்பாத்தியத்தை செய்வார்கள். நிறையப் பொருட்களைச் சேகரிப்பவர்களாகவும், அன்பான சுற்றத்தார்கள் மற்றும் பணிபுரியும் வேலையாட்கள் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

4) கேதாரம் யோகம்

ஏழு கிரகங்கள் வரிசையான நான்கு ராசிகளுக்குள் அமர்ந்திருப்பது கேதாரம் யோகம் என்று அழைக்கப்படு கிறது. இந்த யோகத்தில் பிறந்தவர்கள் வேளாண்மை உள்ளிட்ட விளைபொருட்கள் தொழிலில் சிறப்பான இடம் பெற்றவர்களாக இருப்பார்கள். துன்பம் என்று வந்த அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் உதவுகின்ற குணமான தன்மை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

5) சூலம் யோகம்

ஏழு கிரகங்களும் மூன்று ராசிகளுக்குள் இருக்குமானால் இந்த யோகம் சூலம் என்னும் யோகமாகும். இந்த யோகத்தில் பிறந்தவர்கள் போராட்ட குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். பிறர் பொருட்டு சிரமப்படும் மனமும், கடும் உழைப்பால் பாதிக்கப்பட்ட உடல் நிலை உடையவராகவும் இருப்பார்கள். பணம் சேர்ப்பதில் ஆர்வம் கொண்டு, கடும் உழைப்பாளிகளாக வாழ்வார்கள்.

6) யுகம் யோகம்

ஒருவரது ஜாதகத்தில் எல்லாக் கிரகங்களும் இரண்டு ராசிகளுக்குள் இருக்குமானால், அந்த யோகம் யுகம் என்று சொல்லப்படும். இந்த யோகத்தில் பிறந்தவர்கள், அளவான செல்வமும், சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட மரபுகளை மீறி செயல்படும் மன தைரியம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

7) கோளம் யோகம்

ஆறு கிரகங்கள் ஒரே ராசியில் இருக்கும்போது பிறந்தவர்களுக்கு கோளம் என்னும் யோகம் அமைகிறது. மத்திய தர யோகமாக உள்ள இந்த யோகத்தில் பிறந்தவர்கள் ஆரம்ப கட்ட வாழ்வில் சிரமப்படுபவர்களாகவும், பின்னர் படிப்படியாக நல்ல நிலைக்கு வருபவர்களாகவும் இருப்பார்கள். சிறிய வயதில் பட்ட துன்பங்களை எப்போதும் மறக்காத தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.

Next Story