விஷக்கடி போக்கும் விஷ மங்களேஸ்வரர் - ஜெயவண்ணன்


விஷக்கடி போக்கும் விஷ மங்களேஸ்வரர் - ஜெயவண்ணன்
x
தினத்தந்தி 24 Sep 2019 10:05 AM GMT (Updated: 24 Sep 2019 10:05 AM GMT)

துடையூர் ஓர் அழகிய கிராமம். சாலையின் இடதுபுறம் ஆலயமும், வலதுபுறம் கிராமமும் இருக்கிறது.

துடையூர் ஓர் அழகிய கிராமம். சாலையின் இடதுபுறம் ஆலயமும், வலதுபுறம் கிராமமும் இருக்கிறது. கொள்ளிடம் ஆற்றின் கரையில் அமைந்த அந்த ஆலயத்தின் பெயர் விஷமங்களேஸ்வரர் கோவில் என்பதாகும்.

அந்த காலத்தில் இந்த ஊர் கடம்ப மரங்கள் நிறைந்த பகுதியாக இருந்தது. எனவே இங்குள்ள ஆலயத்தில் உள்ள இறைவன் ‘கடம்பவனேஸ்வரர்’ என அழைக்கப்பட்டார். இறைவியின் பெயர் மங்களாம்பிகை. தற்போது இறைவன் ‘விஷமங்களேஸ்வரர்’ என அழைக்கப்படுகிறார். சுமார் 2000 ஆண்டு களுக்கு முற்பட்ட ஆலயம் இது. பாண்டவர்களில் ஒருவரான சகாதேவன், இத்தலத்து இறைவனை வழிபட்டு ஜோதிட ஞானம் பெற்றதாக கூறப்படுகிறது.

ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. ஆலயத்தின் முன் தனி மண்டபத்தில் நந்தியும், பலிபீடமும் உள்ளன. ஆலய முகப்பைக் கடந்ததும் மகாமண்டபம் உள்ளது. வாசலின் வலதுபுறம் பைரவரும், இடதுபுறம் மகாவிஷ்ணு சூரிய நாராயணராக தன்னுடைய தேவியர்களுடனும் அருள்கின்றனர்.

மகா மண்டபத்தைத் தாண்டி இரு துவார பாலகர்கள் காவல் காக்க, அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் விஷ மங்களேஸ்வரர் லிங்கத் திரு மேனியில் கீழ் திசை நோக்கி அருள்பாலிக்கிறார். இறைவனின் பாணம் உயரமாக உள்ளது. செதில் செதிலாக இருக்கும் லிங்க அமைப்பு வியப்புக்குரியதாக உள்ளது. இறைவனின் ஆவுடையார் 64 கலைகளை உணர்த்தும் விதமாக சதுர பீட வடிவில் அமைந்துள்ளது.

மகாமண்டபத்தில் இறைவி மங்களாம்பிகை நின்ற திருக்கோலத்தில் தென் திசை நோக்கி அருள்கிறார். அன்னைக்கு நான்கு கரங்கள். மேல் இரு கரங்களில் பத்மத்தை சுமந்து, கீழ் இரு கரங்கள் அபய வரத முத்திரைகளுடன் காணப்படுகிறது. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், 5 செவ்வாய்க்கிழமைகள் அன்னைக்கு செவ்வரளி மாலை சாத்தி அர்ச்சனை செய்து வழிபட்டால் பாதிப்பு நீங்கும் என்கின்றனர்.

தம்பதி சமேதராய் ஆறு தெய்வங்கள் காட்சி தரும் அற்புத தலம் இது. விஷ மங்களேஸ்வரர் - மங்கள நாயகி, சூரிய மூர்த்தி - உஷா மற்றும் பிரத்தியுஷா, பிரம்மா - சரஸ்வதி, முருகன்- வள்ளி மற்றும் தெய்வானை, லட்சுமி - நாராயணன், காத்யாயனி - கல்யாண சுந்தரேஸ்வரர் ஆகியோர் இத்தலத்தில் அருள்பாலிக்கிறார்கள்.

இத்தலத்திற்கும் மகா பாரதத்திற்கும் தொடர்பு உண்டு. கிருஷ்ண பகவான் ஒரு நாள் திருதராஷ்டிரரின் அரண்மனைக்கு வந்தார். நாகங்களால் பீமன் கடிபடுவான் என அறிந்திருந்த கிருஷ்ணன் பெறுவதற்கரிய மலைப்பவள சீந்தில் (மூலிகை) இலைக்கொடியை பீமனின் இடுப்பில் கட்டிவிட்டார். இந்த இலைக்கொடி எத்தகைய நச்சுத் தன்மையையும் போக்க வல்லது.

இதை அறிந்த காந்தாரி, இந்த இலைக்கொடி தன் பிள்ளைக்கும் வேண்டும் என கேட்க, கிருஷ்ணன் துரியோதனனுக்கும் மலைப்பவள சீந்தில் இலைக்கொடியை கட்டிவிட்டார்.

சிறுவனான துரியோதனனுக்கு ஒரு சனிக்கிழமை எண்ணெய் தேய்த்து விடும்போது, துரியோதனன் இடுப்பில் கட்டப்பட்டிருந்த சீந்தல் இலைக்கொடி காந்தாரியின் கையில் பட்டு அறுந்து வந்து விட்டது. மேலும் சிறிது நாட்கள் துரியோதனன் இடுப்பில் இருந்ததால் அவனது ஆயுள் தொடையில் இருப்பதையும் காந்தாரி அறிந்தாள்.

பின்னர் தன் மகனின் உயிரை காக்க என்ன செய்யலாம் என்று அசலநிசுமித்திர மகரிஷியிடம் காந்தாரி வேண்டினாள். அதற்கு அவர், ஊருகம் (ஊரு = தொடை) என்ற சிவ தலத்தைப் பற்றி கூறினார். ஊரு என்று மட்டும் அக்காலத்தில் பெயர் பெற்றிருந்த தற்போதைய துடையூர் தலத்தில் உள்ள விஷமங்களேஸ்வரரை வழிபட்டு வரும்படி மகரிஷி தெரிவித்தார்.

ஆனால் மகரிஷி தந்த பரிகார பலன்களை துரியோதனன் அலட்சியம் செய்தான். ஆனால் குருஷேத்திர யுத்தத்தின் தொடக்கத்தில் காந்தாரி, துரியோதனனுக்கு இதை நினைவூட்டினாள். அந்த நேரத்தில் ஆயிரக்கணக்கான மைல் தொலைவு கடந்து வரவேண்டி இருந்ததால் துரியோதனனால் கடைசி வரை இத்தலத்திற்கு வர இயலாமல் போயிற்று என்று புராணத்தோடு இந்த ஆலயம் தொடர்புபடுத்தப்பட்டு இருக்கிறது.

இத்தல இறைவன் விஷமங்களேஸ்வரர் என அழைக்கப்படுவதற்கு ஒரு கதை உண்டு. இந்த இறைவன் மேல் பக்தி கொண்டு தினமும் வழிபட்டு வந்தார் ஒரு பக்தர். அவர் ஒருநாள் கூட இத்தலத்திற்கு வந்து இறைவனை தரிசிக்காமல் இருந்ததில்லை. ஒருநாள் ஆலயம் வரும் வழியில் அவரை நாகம் ஒன்று தீண்டிவிட்டது. உடல் முழுவதும் விஷம் பரவத் தொடங்கியது. பதறிப்போன பக்தர், இறைவனின் ஆலயம் நோக்கி ஓடி வந்தார். உயிர் பிரியப்போவது உறுதி என்ற நிலையில், இறைவனின் காலடியில் போய் விழுந்தார். இறைவனின் காலடியில் தன் உயிர் பிரியவேண்டும் என்று அவர் நினைத்தார்.

அவருக்கு இரங்கிய இறைவன், விஷத்தை நீக்கி அருளினார். பக்தர் புத்துயிர் பெற்று எழுந்தார். இதனால்தான் ‘கடம்பவனேஸ்வரர்’ என்று அழைக்கப்பட்டு வந்த இறைவன், ‘விஷமங்களேஸ்வரர்’ என்று பெயர் பெற்றார்.

இந்த ஆலயம் தினமும் காலை 7.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம்

திருச்சி- சேலம் நெடுஞ்சாலையில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது துடையூர். திருச்சியில் இருந்து -சேலம், நாமக்கல், முசிறி செல்லும் பேருந்துகளில் சென்றால் துடையூரில் இறங்கிக்கொள்ளலாம்.

Next Story