லல்லேஸ்வரி


லல்லேஸ்வரி
x
தினத்தந்தி 26 Nov 2019 11:32 AM GMT (Updated: 26 Nov 2019 11:32 AM GMT)

நம் பாரத நாட்டில் பண்டைய காலத்தில் இருந்து இன்றைய காலகட்டம் வரை இருக்கும் ஒரு முக்கியமான பிரச்சினை மத வேறுபாடுகள்.

ம் பாரத நாட்டில் பண்டைய காலத்தில் இருந்து இன்றைய காலகட்டம் வரை இருக்கும் ஒரு முக்கியமான பிரச்சினை மத வேறுபாடுகள். இதைக் கையில் எடுத்துக்கொண்டு பல மனிதர்களும் மதம் பிடித்து அலைகிறார்கள்.

ஆனால் சுமார் எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பே ஒரு பெண்மணி மத சகிப்புத்தன்மையைக் கற்றுக் கொடுத்திருக் கிறார். அதை வளர்க்கப் பாடுபட்டிருக்கிறார்.

யார் அந்த அம்மையார்?

1320-ம் வருடம் காஷ்மீரத்தில் பாண்டிர்தன் கிராமத்தில் பிறந்து,1392-ம் வருடம் வரை வாழ்ந்து மறைந்தவர், லல்லேஸ்வரி அன்னை. ‘லல்லா’, ‘லால் டெட்’ (grand mother), ‘லால் டிட்டி’ என்று பல பெயர்களில் அழைக்கப்பட்டவர் இவர். மிகவும் பழமையான காஷ்மீர் பண்டிட் குடும்பத்தில் பிறந்த இவரின் அறிவு, சிறுவயது முதலே சுடர் விட்டு எரிந்தது.

தன்னுடைய வீட்டிலேயே இருந்தபடி கல்வி பயின்றார். அவரது குருவாக இருந்து கல்வி பயிற்று வைத்தவர் சித் ஸ்ரீகாந்த் என்பவர். லல்லேஸ்வரியின் ஆன்மிக தாகத்தைப் புரிந்து கொண்டு, சைவ சம்பிரதாயங்களில் ஆர்வத்தைத் தூண்டியவர் இவர்தான்.

குருவின் மூலம் கற்ற அறிவைக் கொண்டு, அந்தச் சின்னஞ்சிறு வயதிலேயே சிவபெருமான் மீது பல பாடல்களை எழுதி பாடத் தொடங்கினார். ஆனால் அவரது ஆன்மிகப் பணிக்கு, அந்த காலகட்டத்தில் பெண்பிள்ளைகள் அடிமைப்பட காரணமாக இருந்த குழந்தைத் திருமணம் மூலமாக முட்டுக்கட்டை உருவானது.

பெற்றவர்கள், தங்களின் பாரத்தை இறக்கும் நோக்கத்தில், லல்லேஸ்வரிக்கு திருமணம் செய்து வைத்தார்கள். இறைபணியில் மனம் மூழ்கி இருந்தாலும், பெற்றோர் மனம் வாடக் கூடாதே என்று மறுப்பு ஏதும் சொல்லாமல் திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் ஒரு பெண், ஆன்மிக விஷயங்களில் ஈடுபாடு கொண்டு பாடல்கள் பாடுவதையும் எழுதுவதையும் லல்லேஸ்வரியின் கணவனும், மாமியாரும் ஏற்றுக்கொள்ள வில்லை. லல்லேஸ்வரியின் பெயர் பண்டிட் வழக்கப்படி `பத்மாவதி' என்று மாற்றப்பட்டது.

“பத்மா.. பத்மாக்கண்ணு.. வாடா வந்து சாப்பிடு” என்றார் மாமியார்.

அதிகாலையில் எழுந்தது முதல் வீட்டு வேலைகள் முழுவதையும் முடித்து விட்டு வந்தவரை, மாமியார் அன்போடு அழைத்ததும், அவரது வேலைக்களைப்பு முழுவதும் நீங்கி விட்ட உணர்வு ஏற்பட்டது. கவலைகள் அனைத்தும் மறந்து போக ஆவலுடன் சாப்பிடும் இடத்திற்குப் போனாள், அந்தக் குழந்தைத் தன்மை மாறாத குட்டி புதுமணப் பெண்.

சாப்பாட்டு தட்டு நிறைய சாதமும், அதன் மேல் பருப்பு சாம்பாரும் ஊற்றப்பட்டிருந்தது. ஆவலுடன் சாப்பாட்டைப் பிசைந்த அந்தப் பிஞ்சு மனம், கொஞ்சம் அதிர்ந்துதான் போனது. ஏனெனில் மேல்புறம் சாப்பாடு தூவப்பட்டு, அதன் கீழே கற்கள் வைக்கப்பட்டிருந்தன.

“அந்த சாப்பாட்டை எப்படி சாப்பிடுவது?”

மாமியார் முகத்தைப் பார்த்தார். அதுவரை அந்த முகத்தில் இருந்த காருண்யம் மறைந்து, குரூரம் குடி கொண்டிருந்தது. அதைப் பார்த்த பத்மாவதி என்றழைக்கப்பட்ட லல்லேஸ்வரியின் மனதில் சிவன் தோன்றினார். மனதிற்குள்ளேயே சிவபெருமானை போற்றித் துதித்தவர், எந்த வார்த்தையும் பேசாமல் அங்கிருந்து அகன்று சென்று விட்டார்.

மற்றுமொரு நாள் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பிக் கொண்டிருந்தார் பத்மாவதி.

அப்போது “அடியே பத்மா.. இவ்வளவு நேரமா தண்ணீர் கொண்டுவருவதற்கு? அங்கே யாரைப் பார்த்து நின்று கொண்டிருந்தாய்?” என்று கீழ்த்தரமாக பேசினார், அவரது மாமியார்.

அவளது கணவனும் கூட தன் தாயின் பேச்சை நம்பி, பத்மாவை பின் தொடர்ந்தான். ஒரு திருப்பத்தில் எதிர்பாராத விதமாக மனைவியின் மீதே மோதிக் கொண்டான்.

அதில் தண்ணீர் எடுத்து வந்த பானை கீழே விழுந்து துண்டு துண்டாக உடைந்தது. ஆனால் கீழே கிடந்த எல்லாத் துண்டுகளிலும் தண்ணீர் அப்படியே இருந்தது. அந்தத் துண்டுகளில் இருந்த தண்ணீரையே வீட்டின் பாத்திரங்களில் எல்லாம் ஊற்றினார். அந்த தண்ணீரே, அனைத்துப் பாத்திரத்திலும் நீர் நிரப்பும் அளவுக்கு வந்துகொண்டே இருந்தது. இன்னும் மீதம் தண்ணீர் இருந்தது.

“வேறு எந்தப் பாத்திரத்திலாவது ஊற்ற வேண்டுமா அத்தை?” என்று கேட்டாள், லல்லேஸ்வரி.

பன்னிரண்டு ஆண்டுகள் இதே போன்று பல வகைகளிலும் கொடுமைகளை அனுபவித்து வந்த லல்லேஸ்வரி, அதற்கு மேலும் பொறுக்க முடியாமல் அந்த வீட்டை விட்டு வெளியேறினார்.

சிவனைத் தேடி, உண்மையைத் தேடி அலைந்தார். வழியில் அவருக்கு ஒரு குரு கிடைத்தார். யோகம் கை வந்தது. மீண்டும் கால் போன போக்கில் நடக்கத் தொடங்கினார். ஆடைகள் கந்தலாகின. ஆனால் பல வருடங்களாக வாரப்படாமல் அடர்த்தியாக, கால் வரை வளர்ந்திருந்த கூந்தலே அவருக்கு ஆடையாக மாறிப்போனது.

எதைப்பற்றியும் அவர் கவலை கொள்ளவில்லை. உடலை மூடியிருந்த அந்த ரோமங்களோடு பார்க்கும் போது, அவர் பைராகி அல்லது பைரவி போன்ற தோற்றத்தில் காணப்பட்டார்.

அவரின் உரைகள், ‘வாக்குகள்’ என்று புகழப்பட்டன. இந்துக்கள் இவரை ‘லல்லீஸ்வரி’ என்றும், இஸ்லாமியர்கள் ‘லால் அரிபா’ என்றும் அழைத்தனர். பலருக்கும் இவர் ‘லால் அன்னை.’

“இந்த உலகின் ஒவ்வொரு துகளிலும் இறைவன் இருக்கிறான். இந்து - முஸ்லிம் என்ற பாகுபாடு எதுவும் இல்லை. முதலில் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். பிறகு இறைவனுடனான தொடர்பை அறிந்து கொள்ளுங்கள்” என்பது அவரது அறிவுரையாக இருந்தது.

இந்துக்களும், இஸ்லாமியர்களும் அவரைக் கொண்டாடினர். ஒவ்வொரு காஷ்மீரியும் அவர் புகழ்பாடினர். அவரைக் குறித்து பெருமைப் பட்டார்கள்.

தன் வாழ்நாளின் கடைசி நிமிடம் வரை மத ஒற்றுமை, சகிப்புத்தன்மை, மனித நேயம் இவற்றை வலியுறுத்தி பல பாடல்களை எழுதிப் பாடினார் லால் அன்னை.

தனது வாழ்க்கையின் இறுதியில் தீ வளர்த்து அதில் இறங்கினார். அந்தப் பிறைசூடனின் தலையில் சூடிய மூன்றாம் பிறை போல், குளிர்ச்சியுடன் அவரை அணைத்தது நெருப்பின் நாக்குகள்.

நம் பாரத பூமிதான் எவ்வளவு கொடுத்து வைத்திருக்கிறது. நாம் தாம் எவ்வளவு கொடுத்து வைத்திருக்கிறோம், இப்பூமியில் பிறக்க.

எத்தனையோ மகான்களும், யோகினிகளும் வாழ்வின் சுகங்களை அனுபவிக்காமல் மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்து போயிருக்கிறார்கள். அப்படிப்பட்ட அன்னையரில் முதன்மையானவரான லல்லேஸ்வரி என்னும் லால் அன்னையின் பாதங்களை மானசீகமாக பணிவோம்.

-தொடரும்.

Next Story