லண்டன் மாநகரில் ஒரு கலைக்கோவில்


லண்டன் மாநகரில் ஒரு கலைக்கோவில்
x
தினத்தந்தி 24 Dec 2019 11:52 AM GMT (Updated: 24 Dec 2019 11:52 AM GMT)

இங்கிலாந்து நாட்டின் தலைநகராக விளங்கும் லண்டன் மாநகரின் இதயப் பகுதியாக விளங்குவது நீஸ்டன் என்ற இடம். இங்கு சுவாமி நாராயணா கோவில் அமைந்துள்ளது. இது ஐரோப்பா கண்டத்திலேயே மிகப் பெரிய இந்து ஆலயம் என்ற புகழுக்குரியது.

முழுவதும் வட இந்திய பாணியில், கூரான உயர்ந்த கோபுரங்களைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலயம், இங்கிலாந்து நாட்டினரை மட்டுமல்லாது உலகெங்கும் உள்ள மக்களைக் கவர்ந்து ஒரு சுற்றுலாத் தலமாக பரிணமிக்கிறது.

பல்கேரிய வெண் கற்களையும், இத்தாலி மற்றும் இந்திய பளிங்குக் கற்களையும் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான இந்தக் கலைக் கோவிலில் காணும் இடமெல்லாம் கண்கவர் சிற்பங்கள் நம் விழிகளை விரியச் செய்கின்றன. வெள்ளைக் கற்களால் வளைந்து நெளிந்து உயர்ந்து நிற்கும் தோரணவாயில் நம்மை வரவேற்கிறது.

விசாலமான திறந்த வெளியைத் தாண்டி உள்ளே நுழைந்ததும், மரத்தினால் கட்டிடமும் தூண்களில் சிற்ப வேலைப்பாடும் அமைந்த பெரிய கூடம் காட்சியளிக்கிறது. அதுதான் பஜனை மற்றும் தியானம் செய்யும் ‘ஹாவேலி கூடம்’ என்பதாகும்.

பிறகு உட்புறமாகவே படிகளில் ஏறிச் சென்றால் அற்புதமான ஆலயம், அதில் 72 வெள்ளைப் பளிங்குத் தூண்கள். அவைகளின் நாற்புறத்திலும் சிறியதும் பெரியதுமான வேலைப்பாடமைந்த சிற்பங்கள், நம் சிந்தையைக் கவர்கின்றன. ராமாயண, மகாபாரத, சிவ லீலை காட்சிகள் சிற்பங்களாக செதுக்கப்பட்டு நமக்குள் ஒரு பிரமிப்பை ஏற்படுத்துகிறது. மேலே விதானத்திலும், அங்கே உருவாகியுள்ள குவி மாடத்திலும் சிற்பங்கள் செதுக்கப்பட்டு நம் சிந்தையைச் சிலிர்க்க வைக்கின்றன.

“சரி.. இது கலைக்கோவில் மட்டும் தானா?” என்றால், வழிபாட்டுக்குரிய வெண்ணிற சுவாமி சிலைகளும், சன்னிதிகளில் அமைக்கப்பட்டு விமானத்தின் கீழ் கருவறைகளில் தோன்றி அருட்காட்சி அளிக்கின்றன. உள்ளே நுழைந்தவுடன் மகாமண்டபத்தில் முதலில் கணபதிப் பெருமான் நின்ற திருக்கோலத்தில் தனிச்சன்னிதியில் எழுந்தருளி முதல் வணக்கத்தை ஏற்றுக் கொள்கிறார். அடுத்து ராமன் சீதாப்பிராட்டி, லட்சுமணன் ஒரு சன்னிதியிலும் அருள்காட்சி தருகின்றனர்.

பிறையும், நாகமும் சூடிய சிவ பெருமாள் பார்வதி தேவியுடன் இருக்கும் ஒரு சன்னிதியும், அதன் எதிரே கங்கையும் உள்ளது. பக்கத்து சன்னிதியில் கதாயுதம் ஏந்தி நின்ற கோலத்தில் ஆஞ்சநேய சுவாமி வீற்றிருக்கிறார். மூலவராக ராதை சமேத கிருஷ்ணபகவானும், அவருடன் பலராமனும் ஒரே சன்னிதியில் நின்ற நிலையில் அருள்பாலிக்கின்றனர். இந்த ஆலயத்தில் தினமும் வழிபாடுகள் நடை பெறுகின்றன. தினமும் பகல் 12 மணிக்கு நடைபெறும் தீபாராதனை, பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது. இந்த ஆலயம் மாலை 6 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.

டாக்டர். ச.தமிழரசன்

Next Story