கடன் பிரச்சினை தீர்க்கும் கடன் நிவர்த்தி லிங்கம்


கடன் பிரச்சினை தீர்க்கும் கடன் நிவர்த்தி லிங்கம்
x
தினத்தந்தி 4 Feb 2020 1:30 AM GMT (Updated: 3 Feb 2020 9:52 AM GMT)

தனது சாபம் நீங்க, கேது பகவான் இத்தல இறைவனை ஆராதித்து சாபம் நீங்கப் பெற்றதாக செவி வழி புராண தகவல் ஒன்று சொல்லப்படுகிறது.

மகாவிஷ்ணு, கேதுவை கிரக மூர்த்தியாகவும், ஞான சக்தி மூர்த்தியாகவும் பலருக்கு உணர்த்திய தலம் செம்பங்குடி. இந்த அனுக்கிரகத்தை மகாவிஷ்ணுவிடம் இருந்து பெறுவதற்கு முன்பாக, ‘செம்பாம்புகுடி’ என்று அழைக்கப்பட்டு, தற்போது ‘செம்பங்குடி’ என்று அழைக்கப்படும் இந்த தலத்தில் பல ஆண்டுகளாக கேது பகவான் யோக நிலையில் இருந்து வழிபட்டு வந்தாா். அதன்பிறகுதான், மகாவிஷ்ணு தோன்றி, கேது பகவானுக்கு அனுக்கிரகம் செய்தார்.

இந்த ஊரில் தான் நாகநாத சுவாமி கோவில் இருக்கிறது. இத்தல இறைவனின் பெயர் ‘நாகநாத சுவாமி.’ இறைவியின் பெயர் ‘கற்பூரவல்லியம்மன்.’ ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. ஆலயத்தின் முகப்புப் பகுதியைத் தாண்டியதும், முக மண்டபம் காணப்படுகிறது. அதையடுத்து மகா மண்டபம் இருக்கிறது. ஆலய கருவைறக்குள் இறைவன் நாகநாத சுவாமி, லிங்க வடிவில் கிழக்கு திசை நோக்கி வீற்றிருந்து அருள்பாலிக்கிறாா். இறைவன் சன்னிதியை அடுத்து வெளியே தனி ஆலயத்தில் அன்னை கற்பூரவல்லியம்மன் நின்ற கோலத்தில், இளநகை தவழ இன்முகத்துடன் பக்தா்களுக்கு அருள்புரிந்து வருகிறார்.

கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை ஆகியோா் வீற்றிருக்கின்றனா். ஆலய திருச்சுற்றில் மகாவிஷ்ணு, வினை தீர்க்கும் விநாயகர், வள்ளி- தெய்வானை சமேத தணிகைவேலவர், ஆதியோக கேது, சண்டிகேஸ்வரா் ஆகியோா் அருள்பாலிக்கின்றனர். கிழக்கு பிரகாரத்தில் பைரவர், கடன் நிவர்த்தி லிங்கம், சமயக்குரவா்களில் ஒருவரான திருஞான சம்பந்தர், சூரிய பகவான் ஆகியோரது திருமேனிகள் உள்ளன.

இது கேது தோஷ நிவா்த்தி தலமாகவும் விளங்குகிறது. ஆலயத்தின் வடக்கு பிரகாரத்தில் கேது பகவான் யோக நிலையில், தனி ஆலயத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருளை அள்ளி வழங்குகிறார். தனது சாபம் நீங்க, கேது பகவான் இத்தல இறைவனை ஆராதித்து சாபம் நீங்கப் பெற்றதாக செவி வழி புராண தகவல் ஒன்று சொல்லப்படுகிறது. கேது தோஷம் உள்ளவர்கள், கேது பகவானுக்கு வேத ஞான தானியமான முழு முந்திரியால் ஆன மாலையை, குரு மற்றும் புதன் ஓரை நேரத்தில் அணிவித்து வழிபாடு செய்து வந்தால் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

இத்தலம் நாகதோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்குகிறது. நாக மூர்த்திகள் அனைவரும், மானுட உருவில் பாத யாத்திரையாக வந்து வழிபட்ட தலம் இது என்று சொல்லப்படுகிறது. செம்பதனிருப்பு, சொர்ணபுரம், செம்பங்குடி ஆகியவை நாக தோஷ நிவர்த்தி தலங்களாக கருதப்படுகின்றன. எனவே நாக தோஷம் உள்ளவர்கள் இத்தலங்கள் ஏதாவது ஒன்றில் இருந்து, இன்னொரு தலத்திற்கு பாத யாத்திரை சென்று இறைவனை வழிபட தோஷம் நீங்குமாம். இந்த ஆலயத்தின் தல விருட்சம் புரச மரம்.

இந்த ஆலயத்தில் பிரதோஷம், நவராத்திரி, சிவராத்திரி, திங்கட்கிழமைகளில் வரும் சோமவார வழிபாடு ஆகியவை சிறப்பாக நடைபெறுகின்றன. இந்த நாட்களில் இறைவனுக்கும், இறைவிக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்படும். இங்குள்ள கடன் நிவர்த்தி லிங்கத்திற்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டால், கடன் பிரச்சினை கணிசமாக குறையும் என்கின்றனர் பக்தர்கள். ராகு - கேது பெயர்ச்சி நாட்களில் இங்கு பக்தர்கள் கூட்டம் நிறைய வருவதுண்டு. அன்றைய தினம், கேது பகவானுக்கு விசேஷ தீபாராதனை நடைபெறும். கேது தோஷம் மற்றும் நாக தோஷம் உள்ளவர்கள், இந்த ஆராதனையில் பங்கு கொண்டு பலன் பெறுவது உண்மை.

தினசரி ஒரு கால பூஜை மட்டுமே நடக்கும் இந்த ஆலயம், இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த ஆலயம் தினமும் காலை 9 மணி முதல் 10 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும். இருப்பினும் அர்ச்சகா் இல்லம் அருகிலேயே இருப்பதால், எந்த நேரத்திலும் ஆலயத்திற்குச் சென்று வழிபடலாம்.

நாகப்பட்டினம் மாவட்டம் சீா்காழியில் இருந்து திருமுல்லை வாசல் சாலையில், சீர்காழியில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் செம்பங்குடி உள்ளது. சீா்காழி பேருந்து நிலையத்தில் இருந்து பஸ் மற்றும் ஆட்டோ வசதி உண்டு.

- மல்லிகா சுந்தர்

Next Story