காரியங்களை நிறைவேற்றும் கூர்க்கன்சேரி மகேஸ்வரர்


காரியங்களை நிறைவேற்றும் கூர்க்கன்சேரி மகேஸ்வரர்
x
தினத்தந்தி 7 Feb 2020 8:44 AM GMT (Updated: 7 Feb 2020 8:44 AM GMT)

கேரளா மாநிலம், திருச்சூர் அருகே உள்ள கூர்க்கன்சேரியில் இருக்கிறது மகேஸ்வரர் ஆலயம்.

கேரளா மாநிலம், திருச்சூர் அருகே உள்ள கூர்க்கன்சேரியில் இருக்கிறது மகேஸ்வரர் ஆலயம். இந்தக் கோவிலில் மகேஸ்வரர் என்ற திருநாமம் கொண்ட சிவபெருமான்தான் முதன்மை தெய்வம் என்றாலும், இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் சுப்பிரமணியருக்காக 7 நாட்கள் நடைபெறும் தைப்பூசத் திருவிழாவே மிகவும் சிறப்பு வாய்ந்த திருவிழாவாக இருக்கிறது.

தல வரலாறு

கேரள மாநிலத்தில் பல சமூகத்தினருக்குக் கடவுள் வழிபாடு மறுக்கப்பட்டு வந்த நிலையில், இந்து ஆன்மிகவாதியும், சமூகச் சீர்திருத்தவாதியுமான ஸ்ரீ நாராயணகுரு அனைவருடைய வழிபாட்டுக்கும் ஏற்றக் கோவில்களைக் கட்ட முடிவு செய்தார். அதன்படி, 1888-ம் ஆண்டில் திரு வனந்தபுரத்திற்கு அருகிலுள்ள அருவிப்புரம் என்ற இடத்தில், அங்கிருந்த நெய்யாற்றில் இருந்து ஒரு கல்லை எடுத்து வந்து, அந்தக் கல்லைச் சிவலிங்கமாக நிறுவிக் கோவில் ஒன்றைக் கட்டினார்.

அதனைத் தொடர்ந்து, அவர் கேரளாவில், ‘கடவுளை வழிபட அனைவருக்கும் உரிமையுண்டு’ என்கிற அடிப்படையில் பல இடங்களில் பொது வழிபாட்டுக்குரிய பல கோவில்களை அமைத்தார். அக்கோவில்களுள், திருச்சூர் அருகிலுள்ள கூர்க்கன்சேரி என்ற இடத்தில் கட்டப்பட்ட மகேஸ்வரர் கோவிலும் ஒன்றாக இருக்கிறது.

மலையாள நாட்காட்டியின்படி, மலையாள ஆண்டு 1092, சிங்ஙம் மாதம் (1916-ம் ஆண்டு, ஆவணி மாதம்) உத்திராடம் நட்சத்திர நாளில் ஸ்ரீநாராயணகுருவால் கோவிலின் முதன்மை தெய்வமாக மகேஸ்வரர் திருமேனி நிறுவப்பட்டு, ஆலயம் உருவானதாக கோவில் வரலாறு சொல்லப்படுகிறது.

கோவில் அமைப்பு

இக்கோவிலின் முதன்மை தெய்வமாக ஸ்ரீ நாராயணகுருவால் நிறுவப்பட்ட மகேஸ்வரர் இருக் கிறார். அதன் பிறகு, இக்கோவிலில் பிரம்மஸ்ரீ போதானந்த சுவாமிகள் என்பவரால் கணபதி, பாலசுப்பிரமணியர் சிலைகள் நிறுவப்பட்டன. இக் கோவில் வளாகத்தில் ஐயப்பன், வேணுகோபாலன், பார்வதி, முத்தப்பன், பகவதி, நவக்கிரகங்கள் சிலைகளும் வழிபாட்டுக்காக அமைக்கப்பட்டிருக்கின்றன. இங்கு சிவபெருமானுக்குரிய சிறப்பு நாட்கள் அனைத்திலும் மகேஸ்வரருக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இதே போன்று இங்குள்ள பாலசுப்பிரமணியர் கோவிலில் முருகனுக்குரிய சிறப்பு வழிபாடுகள் அனைத்தும் செய்யப்படுகின்றன.

சிவபெருமானுக்குரிய இக்கோவிலில் ஆண்டுதோறும் மலையாள நாட்காட்டியின்படி மகரம் (தை) மாதத்தில் ஏழு நாட்கள் கொண்டாடும் முக்கியமான விழாவாக சுப்பிரமணியருக்கான தைப்பூச விழா இருக்கிறது. இவ்விழாவில், காவடியாட்டம் முக்கியமானதாக இடம் பெறுகிறது. இக்காவடி ஆட்டத்தில் ஒரு குழுவிற்கு 30 அம்பலக் காவடிகள் மற்றும் 60 பூக்காவடிகள் என்று பத்துக் குழுக்கள் வரை பங்கேற்கின்றன. அம்பலக்காவடி என்பது அலங்கரிக்கப்பட்ட வெவ்வேறு கோவில் மாதிரி வடிவங்களைக் கொண்டதாக இருக்கிறது. ஆறு முதல் 10 அடி வரையிலான உயரம் கொண்ட இக்காவடியினை ஆண் பக்தர்கள் தோளில் சுமந்து செல்கின்றனர். பூக்காவடி என்பது பூக்களால் அலங்கரிக்கப்பட்டக் காவடியாகும். இக்காவடியாட்டம் காலையில் தொடங்கி, யானை அணிவகுப்புடன் மதியம் வரை நடைபெறுகிறது. இத்திருவிழாவின் இறுதி நாளில் கண்ணைக் கவரும் வாண வேடிக்கை நிகழ்வுகளும் நடத்தப்படுகின்றன.

இக்கோவிலில், சிவபெருமானுக்குரிய வழிபாடுகளைச் செய்து அதற்குரிய நற்பயனைப் பெற்றிட முடியும் என்பதும், பாலசுப்பிரமணியர் சன்னிதியில் வழிபட்டு முருகப்பெருமானிடம் இருந்து பெறக்கூடிய சிறந்த பலன்களைப் பெறமுடியும் என்பது இங்கு வந்து வழிபடுபவர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம்

கேரள மாநிலம், திருச்சூர் நகரில் இருந்து 3.5 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கூர்க்கன்சேரி எனுமிடத்தில் அமைந்திருக்கும் இக்கோவிலுக்குச் செல்ல, திருச்சூர் பேருந்து நிலையத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் அதிக அளவில் இருக்கின்றன.

- தேனி மு.சுப்பிரமணி.

Next Story