பைபிள் கூறும் வரலாறு; பிலமோன்


பைபிள் கூறும் வரலாறு; பிலமோன்
x
தினத்தந்தி 18 Feb 2020 10:05 AM GMT (Updated: 18 Feb 2020 10:05 AM GMT)

திருத்தூதர் பவுல் தனி நபர்களுக்கு எழுதிய கடிதங்களில் மொத்தம் நான்கு கடிதங்கள் விவிலியத்தில் இடம்பெற்றுள்ளன. அவற்றில் ஒன்று பிலமோன். மற்றவை 1 திமொத்தேயு, 2 திமோத்தேயு மற்றும் தீத்து.

பவுல் எழுதிய நூல்களிலேயே மிகச் சிறிய நூல் இந்த பிலமோன் தான். இந்த நூலில் ஒரே ஒரு அதிகாரமும், 25 வசனங்களும் அடங்கியுள்ளன. கிரேக்க மொழியில் கணக்கிட்டால் வெறும் 334 வார்த்தைகளால் ஆன நூல் இது. கி.பி. 61 களில் இதை ரோம சிறைச்சாலையில் இருந்து பவுல் எழுதினார் என்பது பொதுவான நம்பிக்கை. இதை அவர் எபேசிலிருந்து எழுதியிருக்கக் கூடும் என்பதும் பல அறிஞர் களின் வாதம்.

இந்தக் கடிதம் ஏன் எழுதப்பட்டது எனும் பின்னணி சுவாரசியமானது. கொலோசை நகரில் பிலமோன் எனும் நபர் இருக் கிறார். அவர் வசதி படைத்த நபர். அவரிடம் அடிமையாக வேலை பார்க்கிறார் ஒனேசிம் என்பவர். அங்கிருந்து தப்பி ஓடுகிறார். தப்பி ஓடும்போது எஜமானரின் பணத்தையும் கொஞ்சம் சுருட்டியிருக்க வாய்ப்பு உண்டு.

தப்பி ஓடும் அவர் பவுலிடம் வந்து சேர்கிறார். பவுலின் போதனைகளும், வாழ்க்கையும் அவரை மாற்றுகின்றன. கிறிஸ்தவ விசுவாசத்தை ஏற்றுக்கொள்கிறார். பவுல் மகிழ்ச்சியடைகிறார். இருந்தாலும் அவர் அடிமை நிலையிலிருந்து தப்பி ஓடியதால் மீண்டும் தலைவரிடமே திருப்பி அனுப்ப முடிவெடுக்கிறார்.

அந்தக் காலங்களில் தப்பி ஓடும் அடிமைகள் கொலை செய்யப்படுவது வாடிக்கை. சிலுவை மரணம் கூட அவர்களுக்கு வழங்கப்படுவதுண்டு. ஒருவேளை தலைவர் ரொம்ப இளகிய மனதுடையவராக இருந்தால் “தப்பி ஓடியவன்” எனும் எழுத்தை அடிமையின் நெற்றியில் பொறித்து வைத்து மீண்டும் வேலையில் சேர்த்துக் கொள்வார்கள்.

இந்த இரண்டு விஷயங்களும் நடக்கக் கூடாது. ஒனேசிம் தலைவரிடம் திரும்ப சென்று சேர்ந்து ஒரு சகோதர உறவில் வளரவேண்டும் என பவுல் விரும்புகிறார். பவுலுக்கு பிலமோனைத் தெரியும். பிலமோனும் கிறிஸ்தவராக மாறியவர் தான். அவரது இல்லத்திலேயே கிறிஸ்தவ சந்திப்புகளை நடத்துபவர் தான். எனவே பவுல் அவருக்கு உரிமையுடன் கடிதம் எழுது கிறார்.

கிறிஸ்தவ அன்பு என்பது ஆழமான மன்னிப்பின் மீதும், பிறரை ஏற்றுக்கொள்வதன் மீதும் கட்டமைக்கப்பட வேண்டும் எனும் சிந்தனையை அவர் தனது கடிதத்தில் பதிவு செய்கிறார்.

இந்தக் கடிதம் கிடைத்தபின் பிலமோன் என்ன செய்தார் என்பது நமக்குத் தெரியவில்லை. ஆனால் அவரை ஏற்றுக்கொண்டிருக்கவே வாய்ப்பு அதிகம். ஒருவேளை ஏற்றுக்கொள்ளாமல் இருந்திருந்தால் அவர் இந்தக் கடிதத்தையே கிழித்து எறிந்திருக்கக் கூடும். அப்படியெனில் விவிலியத்தில் இந்த நூல் இடம்பெறாமல் போயிருக்கும்.

பவுல் ஏன் அடிமையை மீண்டும் தலைவரிடமே அனுப்புகிறார்? ஏன் அவர் அடிமை நிலையை ஒழிப்பதற்காக குரல் கொடுக்கக் கூடாது? அவர் அடிமை நிலையை ஆதரித்தாரா? என்றெல்லாம் விவாதங்கள் எழுவதுண்டு. அன்றைய ரோம வீரர்களிலேயே மூன்றில் இரண்டு பங்கு பேர் அடிமையாய் இருந்த சூழலில் பவுல் சமூகப் போராளியாய் களம் புகவில்லை. ஆன்மிகப் போராளியாகவே இயங்கினார். அதுவே அவருக்கு இடப்பட்ட பணி என புரிந்து கொள்ளலாம். எனினும், அவர் அடிமை நிலையை எதிர்த்தார் என்பதை அவரது பிற கடிதங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

ஒனேசிமை தனது மகன் எனவும், தன்னை ஏற்றுக்கொள்வதைப் போல அவரை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் பவுல் பிலமோனுக்கு கடிதம் எழுதுவதில், பவுலின் அன்பு வெளிப்படுகிறது. கிறிஸ்து எனும் கொடியில் விசுவாசிகள் எல்லோரும் கிளைகளாக இருக்கிறார்கள் என்பதை அவரது கடிதம் வெளிப்படுத்துகிறது. “அவன் உமக்கு ஏதாவது தீங்கு இழைத் திருந்தால் அல்லது கடன்பட்டிருந்தால் அது என் கணக்கில் இருக்கட்டும். “நானே அதற்கு ஈடு செய்வேன்’ எனப் பவுலாகிய நான் என் கைப்பட எழுதுகிறேன்” எனும் பவுலின் வார்த்தைகள் அவருடைய பரிந் துரையின் ஆழத்தை நமக்கு வெளிப்படுத்துகிறது.

சரி, பவுல் ஒரு தனி நபருக்கு, ஒரு குறிப்பிட்ட காரணத்துக்காக, எழுதிய இந்தப் பரிந்துரைக் கடிதம் ஏன் இந்த புனித நூலான பைபிளில் இடம்பெற வேண்டும்? இந்தக் கேள்வி நமக்குள் எழுவது வெகு இயல்பே. அதற்கு இந்த நூலில் பொதிந்துள்ள ஆன்மிக சிந்தனை தான் காரணம்.

இது நமது மீட்பின் பயணத்தை அற்புதமாய்ப் பதிவு செய்கிறது. நாம் எல்லோருமே இறைவனின் அன்பை விட்டு விலகி ஓடுகின்ற அடிமைகளாய் இருக்கிறோம். கடவுளுக்கு உண்மையாய் இருக்கவில்லை. இறைவனுக்கு பயனற்ற ஊழியக்காரர்களாக இருக்கிறோம். இயேசு நம்மை மீட்டுக் கொள்கிறார். நம் பாவத்தின் தண்டனையை தானே ஏற்கிறார். நம்மை பயனுள்ள மனிதனாக மாற்றி மீண்டும் இறை பிரசன்னத்தில் அனுப்பி வைக்கிறார்.

இந்த இறை சிந்தனையுடன் நூலை வாசிப்போம்.

- சேவியர்

Next Story
  • chat