கிறிஸ்தவம்: பைபிள் கூறும் வரலாறு; பேதுரு இரண்டாம் நூல்


கிறிஸ்தவம்: பைபிள் கூறும் வரலாறு; பேதுரு இரண்டாம் நூல்
x
தினத்தந்தி 17 March 2020 10:44 AM GMT (Updated: 17 March 2020 10:44 AM GMT)

பேதுரு இரண்டாம் நூலை எழுதியவர் இயேசுவின் திருத்தூதர்களில் ஒருவரான பேதுரு என்பது மரபுச் செய்தி. இவர் இதை கி.பி. 66, 67-களில் எழுதினார் என்பது பொதுவான நம்பிக்கை.

‘திருத்தூதனான பவுல் எழுதியது’ என்றும், ‘இயேசுவின் உருமாறுதலைக் கண்டவன்’ என்றும் வருகின்ற சொற்றொடர்கள் இந்த நூலின் ஆசிரியர் பேதுரு என நம்பச் செய்கின்றன.

இது பேதுரு எழுதிய நூலாய் இருந்தால் அவரது மரணத்துக்கும் சற்று முன்பு இது எழுதப்பட்டிருக்க வேண்டும். பேதுரு ரத்தசாட்சியாய் மரித்தவர். அவர் சிலுவையில் தலைகீழாய் அறையப்பட்டு உயிர்விட்டிருக்கலாம் என்பதை திருச்சபை வரலாறு தெரிவிக்கிறது.

இந்த நூலை பேதுரு எழுதியிருக்க வாய்ப்பில்லை, அவருடைய சிந்தனைகளை உள்வாங்கி இன்னொருவர் பிற்காலத்தில் எழுதியிருக்க வேண்டும் எனும் சிந்தனையும் ஆதிகாலம் முதலே உண்டு. காலத்தால் இது கி.பி. 150-ல் கூட எழுதப்பட்டிருக்கலாம் எனும் வாதங்கள் உண்டு. அதற்கு முக்கியக் காரணமாக இந்த நூல் கொண்டு வருகின்ற செய்திகள் பட்டியலிடப்படுகின்றன.

உதாரணமாக, எருசலேமின் அழிவுடன் இரண்டாம் வருகை நடக்கும் எனும் நம்பிக்கை ஆதித் திருச்சபை நாட்களில் வலுவாக இருந்தது. எருசலேம் கி.பி. 70-ல் தான் தரைமட்டமானது. அதைத் தொடர்ந்து இரண்டாம் வருகை இருக்கும் எனும் எதிர்பார்ப்பு நிலவியது. அது நடைபெறாமல் போனதால் இரண்டாம் வருகை குறித்த சந்தேகங்கள் அதிகரித்தன. ஆனால் அதற்கு முன் பேதுரு கொலைசெய்யப்பட்டிருந்தார். இந்த நூல் இரண்டாம் வருகை குறித்த சந்தேகத்தைப் பேசுவதைக் காணலாம்.

அதே போல இதில் இடம்பெற்றுள்ள கிறிஸ்தவ சிந்தனைகளும் காலத்தால் பிந்திய வளர்ச்சியடைந்த சிந்தனைகள். இந்த நூல் தொடக்க காலத்தில் ஏற்றுக்கொள்ளப் பட்டும், ஏற்றுக்கொள்ளப்படாமலும் தான் இருந்தது. ஆறாம் நூற்றாண்டுக்குப் பின் இந்த நூல் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்கிறது விவிலிய வரலாறு.

திருச்சபைக்கு இரண்டு விதமான சிக்கல்கள் எழலாம். ஒன்று உள்ளேயிருந்து, இன்னொன்று வெளியேயிருந்து. உள்ளே இருந்து எழுகின்ற பிரச்சினைகள் தான் திருச்சபையை அழிக்கும். வெளியேயிருந்து எழுகின்ற பிரச்சினைகள் உண்மையில் திருச்சபையை வளர்க்கும். அதைத் தான் வரலாறு சொல்கிறது.

கடினமான சூழல் நிலவிய, கிறிஸ்தவர்கள் வேட்டையாடப்பட்ட முதல் மூன்று நூற்றாண்டுகளிலும் கிறிஸ்தவம் ஆல்போல தழைத்தது. கிறிஸ்தவர்களை அழிக்க நினைக்கும் சீனா போன்ற நாடுகளிலும் கிறிஸ்தவம் அசுர வளர்ச்சியடைகிறது.

ஆனால் திருச்சபைக்கு உள்ளே பிரச்சினைகள் எழும்போது, அவை உள்ளிருந்து வேர்களை அரித்து ஆலமரத்தை அடியோடு சாய்த்து விடுகிறது.

பேதுருவின் இரண்டாம் நூலில் திருச் சபைக்கு உள்ளே எழுகின்ற பிரச்சினைகள் அலசப்படுகின்றன. ஆன்மிகத்தில் பாலகர் களாக இராமல், வளர்ச்சியடைய வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது. புனிதமற்ற சிந்தனைகளும், போதனைகளும் விலக்கப்பட வேண்டுமென விவாதிக்கப்படுகிறது.

கிறிஸ்தவ விசுவாசத்தில் படிப்படியாய் வளரவேண்டும் எனும் சிந்தனை இதில் இழையோடுகிறது. கடவுளிடமிருந்து நேரடியாய்ப் பெற்ற செய்திகளையே நம்ப வேண்டும். போலிப் போதகர்களை நம்பக்கூடாது எனும் கருத்து வலியுறுத்தப்படுகிறது.

தீய நாட்டத்தால் சீரழிந்துள்ள உலகைவிட்டு விலகியோடி இறைத்தன்மையில் பங்கு பெறுங்கள் என்கிறார் பேதுரு. தனது உயிர் விரைவில் பிரியும் நிலை வரும் என்றும். தனது உயிர் பிரியும் வரை விசுவாசத்தில் நிலைத்திருக்குமாறு அறிவுறுத்திக் கொண்டே இருப்பேன் எனவும் நெகிழ்ச்சியாய் பேதுரு பதிவு செய்கிறார்.

பாவம் செய்த வானதூதர்களை இறைவன் தண்டித்தார். பாவம் செய்த பழைய ஏற்பாட்டு மனிதர் களையும் இறைவன் தண்டித்தார். அதே போல பாவம் செய்தால் நீங்களும் தண்டிக்கப்படுவீர்கள். எனவே இறைப்பற்றில்லாத நிலையை மாற்றி இறைவனில் நிலைத்திருக்க வேண்டும் என அவர் வலியுறுத்துகிறார்.

யாரும் அழிவுறாமல் எல்லோரும் மீட்படைய வேண்டும் என்பதற்காக இறைவன் பொறுமையோடு காத்திருக்கிறார் எனும் சிந்தனையை பேதுரு தருகிறார். எனவே வருகையில் காலத்தைக் குறித்து சந்தேக மடைய வேண்டாம். அது திருடனைப் போல வரும் என்கிறார் பேதுரு. “புதிய விண்ணுலகும் புதிய மண்ணுலகும் வரும் என நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்” என நம்பிக்கையின் வாக்கையும் அவர் அளிக்கிறார்.

விசுவாசம், நல்லொழுக்கம், இறை அறிவு, சுய கட்டுப்பாடு, புனிதத்துவம், சகோதர நல்லுறவு, அன்பு, விடாமுயற்சி போன்றவை இந்த நூலில் இழையோடுகின்ற முக்கியமான செய்திகளாகும். பேதுருவின் வாழ்வும், எழுத்தும் நமக்கு சில செய்திகளைச் சொல்கிறது. தோல்வியாளனாய் இருந்தாலும் நமக்கு இறைவன் மீண்டும் மீண்டும் வாய்ப்பு களைத் தருகிறார். நாம் ஆன்மிகத்தில் வளர்ச்சியடைய விரும்புகிறார். துன்பங்களை நாம் சகித்துக் கொள்ள வலிமை தருகிறார். நம் வாழ்வில் நாம் புனிதமான வாழ்க்கை வாழ விரும்புகிறார் என அவற்றை வகைப்படுத்தலாம்.

“கிறிஸ்தவர்கள் எல்லோரும் கிறிஸ்துவின் ரத்தத்தினால் மீட்கப்பட்டவர்கள். இயேசுவே மீட்பர். பிதாவாகவும், சுதனாகவும் இருப்பவர் இவரே. இவரே ஆண்டவர். அவரில் விசுவாசம் வைக்க வேண்டும். பாவத்தை விலக்கி விடவேண்டும்” போன்ற கிறிஸ்தவ அடிப்படைச் சிந்தனைகள் இந்த நூலில் அழுத்தமாய்ப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

- சேவியர்

Next Story