பட்டினி விரதம் இருக்கும் ‘சமயபுரம் மாரியம்மன்’


பட்டினி விரதம் இருக்கும் ‘சமயபுரம் மாரியம்மன்’
x
தினத்தந்தி 17 March 2020 12:22 PM GMT (Updated: 17 March 2020 12:22 PM GMT)

தெய்வத்தின் பார்வை தன் மீது பட்டு, துன்பங்கள் நீங்க வேண்டும் என்பதற்காகவே பக்தர்கள் பலரும் விரதம் இருப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

தன்னை வழிபடும் பக்தர்களின் நல்வாழ்வுக்காக, அம்மனே பச்சைப் பட்டினி விரதம் இருப்பது சமயபுரம் மாரியம்மன் ஆலயத்தில் நடைபெறுகிறது.

அது என்ன பச்சைப்பட்டினி விரதம்? அதை அறிந்து கொள்வதற்கு முன்பாக, அம்மனின் ஆலய வரலாற்றை பார்ப்போம்.

எத்தனை முறை படித்தாலும், கேட்டாலும் திகட்டாதது, நம் தெய்வங்களின் அவதார வரலாறுகள். புராண காலத்தில் கம்சனின் அழிவுக்காக நிகழ்ந்த கிருஷ்ண அவதாரத்தின்போது, தோன்றிய சக்தியின் அம்சமான மாயாதேவிக்கு முக்கிய பங்குண்டு.

தேவகியின் குழந்தையாக கண்ணனும், யசோதையின் குழந்தையாக மாயாதேவியும் அவதரித்தனர். பின் இவ்விரு குழந்தைகளும் பெருமாளின் திருவிளையாடலால் இடம் மாறின. தேவகியின் குழந்தையே தன் உயிரைக் குடிக்கும் சத்ரு என்பதை அறிந்த கம்சன், குழந்தைகள் இடம் மாறியதை அறியாமல் தேவகியிடம் இருந்த பெண் குழந்தையான மாயாதேவியைக் கொல்வதற்காக, அவளின் இரு பாதங் களைப் பிடித்து சுவற்றில் அறைந்தான்.

அப்போது அந்தக் குழந்தை அவன் கைகளில் இருந்து மேலெழும்பி ஆதிபராசக்தியாக இரு கைகளிலும் வில், அம்பு, சங்கு, சக்கரம், சூலம், பாசம், வாள் முதலிய ஆயுதங்களை தாங்கி தன் சுயரூபத்தைக் காட்டி அருளினாள். அந்த தேவியே மக்களின் தீமைகளைக் களைந்து நல்வாழ்வு அருளும் விதமாக ஆங்காங்கே அம்மனாக வணங்கப் படுகிறாள் என்பது நம்பிக்கை. அந்த வகையில், தமிழகத்தில் அமைந்துள்ள அம்மன் ஆலயங்களில் தலைமை பீடமாக விளங்கும் பெருமை கொண்டது சமயபுரம் மாரியம்மன் கோவில்.

சுமார் 700 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தின் நாயகியான, சமயபுரம் மாரியம்மனின் சிறப்புகள் ஏராளம். சுதையாலான சுயம்பு வடிவாக தன்னுள் 27 நட்சத்திரங்களை கொண்டு, 27 இயந்திரங்களாக திருமேனி பிரதிஷ்டையில் மாரியம்மன் அருள்பாலிப்பது இத்தலத்தில்தான். மேலும் நன்மை - தீமைகளை வரையறுத்து உலகையே ஆட்சி செய்யும் நவக்கிரகங்களை, நவ சர்ப்பங்களாக தன் திருமேனியில் அமர்த்தி அருள்புரிவது தனிசிறப்பு. இங்கு வருவோரின் ராகு-கேது தோஷங்களைப் போக்கும் வலிமை கொண்டவள் இத்தலத்து அன்னை.

சரி.. இனி அன்னையின் பச்சைப்பட்டினி விரதம் பற்றிப் பார்ப்போம்.

‘ஆயிரம் கண்ணுடையாள்’ என்று போற்றப்படும் இத்தல அம்மன், இங்கு ஆதிசக்தியாய் வீற்றிருக்கிறாள். அவள் தன்னை நாடி வரும் பக்தர்கள் மட்டுமின்றி, இவ்வுலகையே காக்கும் நோக்கில் மும்மூர்த்திகளை நோக்கித் தவம் புரிகிறாள். நாடு தழைக்கவும், உயிர்களைக் காக்கவும் மஞ்சள் பிரியையான பராசக்தி, தன் மாதுளம் மேனியில் மஞ்சள் நிற ஆடை உடுத்தி, பக்தர்கள் சகலசவுபாக்கியங்களும் பெற வேண்டி 28 நாட்கள் பச்சைப்பட்டினி விரதத்தை மேற்கொள்கிறாள்.

வருடந்தோறும் மாசி மாதத்தின் இறுதி ஞாயிற்றுக் கிழமை அன்று பூச்சொரிதல் மற்றும் காப்புக்கட்டுதலுடன் இந்த விழா தொடங்கும். அன்றைய தினம் முதல் பங்குனி மாதத்தின் கடைசி ஞாயிறு வரை இவ்விரதத்தை அனுஷ்டித்து, கடும் தவத்தில் இருப்பார், சமயபுரம் மாரியம்மன்.

அன்னை விரதமிருக்கும் இந்த 28 நாட்களும், அன்னைக்கு வழக்கமாக படைக்கப்படும் நைவேத்தியங்கள் செய்யப்படுவதில்லை. பட்டினி இருக்கும் அம்மனுக்கு, உப்பில்லா நீர் மோரும், இனிக்கும் கரும்பு பானகமும், குளிர்ச்சி தரும் இளநீர் மற்றும் கனி வகைகள் மட்டுமே படைக்கப்படுகின்றன. படைத்த அன்னையே விரதம் இருக்கும்போது, மக்கள் சும்மா இருப்பார்களா? அன்னையை மனதில் இருத்தி அந்த ஊர் மக்களும் தங்கள் வீடுகளில் அம்மன் படத்தை வைத்து வழிபட்டு விரதம் கடைப்பிடிக்கிறார்கள். அடுப்புத் தீயில் தாளிக்காமல், காலில் செருப்பணியாமல், இளநீரும் நீர்மோரும் அருந்தி மஞ்சள் ஆடை உடுத்தி, மகமாயியின் அருளை வேண்டி இருக்கும் விரதம் இது. இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால், அவர்கள் கேட்ட வரங்களை எல்லாம் தந்து நல் வாழ்க்கையை அமைத்துத் தருகிறாள், அன்னை.

அம்பாள் பட்டினி இருந்தாலும், இவ்வேளையில் சோர்வைக் காட்டாமல் சாந்த சொரூபிணியாக விளங்குவாள். முகமெங்கும் மலர்ந்து, தன்னை நாடி வருபவர்களின் துன்பங்களை காது கொடுத்துக் கேட்டு, அவர்களின் மனப் பிணி, உடற்பிணிகளை போக்குகிறாள். 12 ராசி களின் அதிபதியாகவும் அம்மன் இருப்பதால், இத்தருணத்தில் இங்கு வந்து அவளை வழிபடுவோரின் அனைத்து கிரக தோஷங்களும் விலகுவதாக ஐதீகம். மேலும் நவக்கிரகங்களின் ஆதிக்கத்தை உள்ளடக்கி அவற்றை நவ சர்ப்பங் களாக கொண்டு அருள்பாலிப்பதால், இந்த காலகட்டத்தில் வந்து வணங்குவோரின் நவக்கிரக தோஷங்கள் நீங்கும். இங்கு வரும் பக்தர்கள் தங்கள் உடற்பிணி நீங்கும் பொருட்டு மாவிளக்கு போடுதல், துள்ளு மாவு தானம் செய்தல், தீச்சட்டி ஏந்துதல், நீர்மோர் பானகம் தானம் செய்தல், எலுமிச்சை மாலை போடுதல், கரும்புத்தூளி எடுத்தல், அலகு குத்துதல் போன்ற பல நேர்த்திக்கடன்களை செலுத்துகின்றனர்.

இத்திருத்தலத்தில் மட்டும்தான் பக்தர்கள் தெய்வத்தை நோக்கி விரதம் இருக்கும் மரபு மாறி, மாரியம்மன் தன்னை நாடி வரும் மக்களின் நலன் வேண்டியும், அவர்களுக்கு எந்த தீயசக்தியாலும் பாதிப்பு வராமல் காக்கவும் முப்பெரும் தெய்வங்களான மும்மூர்த்திகளை நோக்கி பச்சைப்பட்டினி விரதம் இருக்கிறாள். மேலும் கடுமையான தவம் செய்து இச்சா, கிரியா, ஞான சக்திகளைப் பெற்று அருள் புரிகிறாள். விரதத்துடன் மஞ்சள் உடை அணிந்து அருள் பொங்கும் முகத்துடன் வேண்டும் வரங்களை வாரி வழங்கி மகிழும் அம்மனைக் காண தினமும் லட்சக்கணக்கான மக்கள் இங்கு வருகை புரிகின்றனர்.

இந்தப் பூவுலக வாழ்வில் முன்வினைகளால் நமக்கு ஏற்படும் துன்பங்களையும், கிரகங்களின் பாதிப்பினால் உண்டாகும் வேதனைகளையும், அறியாமையினால் நமக்குள் இருந்து முன்னேற்றத்திற்கு தடையாகும் நம் ஆணவத்தையும் அடியோடு அகற்றி நிம்மதி அருளும் அம்மனின் விரதம் காண நீங்களும் சென்று பேரின்பம் அடையலாமே.

- சேலம் சுபா

Next Story