உண்மையாக வாழ்வோம்


உண்மையாக வாழ்வோம்
x
தினத்தந்தி 20 March 2020 3:45 AM GMT (Updated: 19 March 2020 11:01 AM GMT)

உலகமெங்கும் வியாபித்திருக்கின்ற ஒரு தீமையான காரியம் பொய் கூறுவது அல்லது உண்மையல்லாத வாழ்க்கை வாழ்வது. பெரும்பாலான மக்களின் வாழ்வில் இதைக் காண முடியும்.

பொய்யான வாழ்வினால் உடைந்த குடும்பங்கள் ஏராளம். உறவுகளில் விரிசல் ஏற் படுவதற்கு பொய் ஒரு முக்கியமான காரணமாகி இருக்கிறது.

ஒருவர் நாவினால் எதை விதைக்கிறாரோ அதையே உண்பார்; தன் பேச்சின் விளைவையே அவர் துய்த்தாக வேண்டும். வாழ்வதும் நாவாலே, சாவதும் நாவாலே; வாயாடுவோர் பேச்சின் பயனைத் துய்ப்பர். (நீதிமொழிகள் 18: 20,21)

தினமும் ஒரு மனிதன் இருபத்தைந்து முறை பொய் சொல்கிறான் என்கிறது ஒரு அமெரிக்க ஆய்வு. வாலிப பருவத்தில் தான் அதிகமாக பொய் சொல்கிறார்கள் என்று இன்னொரு ஆய்வு சொல்கிறது. பத்து நிமிடம் சிந்தித்து பார்த்தால் நம்மை அறியாமல் எத்தனை பொய் சொல்கிறோம் என்று புரியவரும்.

பொய் பேசுவதற்கான சில காரணங்கள்:

1. தன்னை காத்துக்கொள்வதாக நினைத்து சிலர் பொய் சொல்வதுண்டு. அப்படி சொல்பவர் களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்றே சொல்லலாம். வேதத்தில் அனனியா என்றொரு செல்வந்தர் இருந்தார். அவருடைய மனைவி பெயர் சப்பிரா. அவர்கள் ஆதி திருச்சபையில் ஆர்வம் கொண்டு பேதுருவின் சபையில் இணைந்தவர்கள். அவர்கள் சென்று தங்கள் செல்வத்தை எல்லாம் விற்று விட்டு பேதுருவிடம் ஒப்படைத்தபோது கொஞ்சம் தங்களுக்கு என்று வைத்து விட்டு எல்லாவற்றையும் கடவுளுக்கு கொடுத்தோம் என்று பொய் சொன்னார்கள்.

கடவுளின் முன்னிலையில் பொய் சொன்ன காரணத்துக்காக கணவனும் மனைவியும் அங்கேயே சுருண்டு விழுந்து மாண்டனர். கொஞ்சத்தை நமக்கென்று வைத்து கொள்ளலாம் என்று நினைத்தது தவறல்ல, ஆனால் அவர்கள் சொன்ன சிறிய பொய் தான் கடவுளின் முன்னிலையில் பெரிய தவறாக கருதப்பட்டது. ஒரு சிறு பொய்கூட தங்களை அழித்துவிடும் என்பதை அனனியா, சப்பிரா வாழ்க்கை நமக்கு கற்று கொடுக்கிறது.

2. தன்னை தான் உயர்த்தி காட்டுவதற்காக மக்கள் பொய் சொல்கிறார்கள். இந்த சூழல் இவ்வுலகில் எல்லா இடத்திலும் காணப்படுகிறது என்று சொன்னால் மிகையாகாது. போலித்தனமாய் பெருமை கொள்பர்வர்களை கடவுள் விரும்புவதில்லை. தாங்கள் ஆன்மிக வாதிகள், பணக்காரர்கள் என காட்டிக் கொள் பவர்களை அவர் எப்போதும் வெறுக்கிறார்.

செருக்கு கொண்ட மனிதர்களை அவர் எதிர்க்கிறார். பணிவு கொண்ட மனிதர்களை அரவணைக்கிறார். எல்லாவற்றையும் கடவுள் பார்த்து கொண்டிருக்கிறார் என்ற சிந்தனை நம்மில் வேண்டும். பொய்யுரைக்கும் நாவை ஆண்டவர் அருவருக்கின்றார்; உண்மையாய் நடக்கின்றவர்களை அவர் அரவணைக்கிறார். (நீதிமொழிகள் 12:22)

3. சிலருக்கு பொய் என்பது உயிருடன் கலந்துவிட்டது. தன்னை அறியாமலேயே அவர்கள் பொய் சொல்கிறார்கள். அவர்கள் வாழ்க்கை ஆபத்தானது. உண்மையாய் அவர் பாதம் பணிந்து, உண்மையான ஒரு வாழ்க்கை வாழ கற்றுக்கொள்ள வேண்டும். வேதத்தில் இப்படியாக படிக்கிறோம், இயேசுவுக்கு எதிரான சாத்தானே உங்களுக்கு தந்தை. உங்கள் தந்தையின் ஆசைப்படி நடப்பதே உங்கள் விருப்பம். அவனிடம் உண்மை இல்லாததால் அவன் உண்மையை சார்ந்து நிற்கவில்லை. அவன் பொய் பேசும் போதும் அவனுக்கு இயல்பாக இருக்கிறது. ஏனெனில் அவன் பொய்யன், பொய்மையின் பிறப்பிடம். (யோவான் 8:44)

4. மற்றவர்கள் மனதில் இடம் பிடிப்பதற்கும் மற்றவர்களை தாழ்த்துவதற்கும் பொய் சொல்லப்படுவதுண்டு. தன்னுடைய நன்மைக்காக நம்மை நேசிக்கும், நம்மீது நம்பிக்கை வைக்கும் மக்களிடம் கூட அவரை மதிக்காமல் உண்மைக்கு புறம்பாக பேசுபவர்கள் அநேகம். கடவுள் உண்மையாக இருப்பவர்களை நேசிக்கிறார். ஆண்டவர் வெறுக்கும் ஏழு காரியத்தில் இரண்டு பொய் சார்ந்தது, அவை பொய்யுரைக்கும் நாவு என்றும் பொய்யுரைக்கும் போலிச்சான்று என்றும் படிக்கிறோம். (நீதிமொழிகள் 6:17-19).

பொய்யின் சிந்தனைகள் இருக்கின்ற உள்ளத்தில் உண்மை இருக்காது. அற்ப வெற்றிக்காக சொல்லும் பொய்கள் நிலைப்பதில்லை. மனிதர்கள் அழியலாம் ஆனால் அவர்கள் வாயில் இருந்து வரும் வார்த்தைகள் அழிவதில்லை. ஆதலால் தான் வாயில் இருந்து வரும் வார்த்தைகள் உண்மையுள்ளதாக இருத்தல் வேண்டும்.

ஒரு போதும் பாதி உண்மை முழு உண்மையாகாது. உண்மை என்பது முழுமையானது. பொய் தன்னலமானது, அதில் துளி கூட அன்பில்லை. பொய்யான வாழ்வல்ல வாழ்வு, உண்மையான வாழ்வே மெய்யான வாழ்வு.

இயேசு உண்மையுள்ளவர் என்றும், நாம் படிக்கும் புனித வேதாகமம் உண்மையானது, கலப்படமில்லாதது என்றும் ஆழமாக நம்புகிறோம். அப்படியிருக்கும் நாம் அவர் வழியை பின்பற்றும் போது உண்மையுள்ளவர்களாக மாற வேண்டும் என்பது அவசியம். நாம் இவ்வுலகில் சாட்சியுள்ள வாழ்க்கை வாழ வேண்டும். இல்லையென்றால் வேதத்தை பின்பற்றுவதில் அர்த்தம் இல்லை.

ஆண்டவரே! பொய் பேசும் வாயினின்று என்னை விடுவித்தருளும்; வஞ்சக நாவினின்று என்னை காத்தருளும். (சங்கீதம் 120:2). ஆமென்

- துலீப் தாமஸ், சென்னை.

Next Story