இனிய வாழ்வு தரும் இறை நம்பிக்கை; பொதுமக்களுக்கு தொல்லை தராதே


இனிய வாழ்வு தரும் இறை நம்பிக்கை; பொதுமக்களுக்கு தொல்லை தராதே
x
தினத்தந்தி 24 March 2020 9:57 AM GMT (Updated: 24 March 2020 9:57 AM GMT)

இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70 -க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அந்த நம்பிக்கைகளில் ஒன்றான பொதுமக்களுக்கு தொல்லை தராமல் இருப்பது குறித்த தகவல்களை காண்போம்.

உண்மையான இறைநம்பிக்கை என்பது ஒரு இறைநம்பிக்கையாளர் பொது மக்களுக்கு எள்முனை அளவு கூட தொல்லைகள் தரக்கூடாது.

அந்த தொல்லைகள் அவரின் கரங்களாலோ, அவரின் கருத்துக் களாலோ, அவரின் நடவடிக்கை களாலோ, அவரின் உத்தரவுகளாலோ எந்தவிதத்திலும் வெளிப்படக்கூடாது.

மனதால் கூட அவர் பொதுமக் களுக்கு தொல்லை கொடுப்பதை கனவிலும் நினைக்கக்கூடாது. இவ்வாறு நடப்பதும் இறைநம்பிக்கையின் உடல்சார்ந்த ஒரு பகுதியாக இஸ்லாம் தேர்வு செய்கிறது. அவ்வாறு நடப்பவரே உண்மையான இறைநம்பிக்கையாளர் ஆவார்.

‘உண்மையான ஒரு முஸ்லிம் யாரெனில் அவரின் நாவின் தொல்லையிலிருந்தும், அவரின் கரத்தின் தீங்கிலிருந்தும் பிற முஸ்லிம்கள் அமைதி பெறுபவர்களே! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ்பின் அம்ர்பின் ஆஸ் (ரலி), நூல்: புகாரி, முஸ்லிம்).

‘உண்மையான ஒரு இறைநம்பிக்கையாளர் யாரென்றால் அவரிடமிருந்து பொதுமக்கள் தங்களின் உடைமைகள் விஷயத்திலும், தங்களின் உயிர்கள் விஷயத்திலும் அபயம் பெறுபவர்களே! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (அறிவிப்பாளர்: பளாளா பின் உபைத் (ரலி), நூல்: இப்னுமாஜா)

‘இறைத்தூதர் அவர்களே! இஸ்லாத்தில் சிறந்தது எது?’ என்று நபித்தோழர்கள் கேட்டதற்கு, ‘எவருடைய நாவிலிருந்தும், கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றுள்ளனரோ அவரின் செயலே சிறந்தது’ என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூமூஸா (ரலி), நூல்: புகாரி)

பொதுமக்களுக்கு தீங்கு செய்யாமல் இருப்பது இறைநம்பிக்கையான காரியம் மட்டுமல்ல. அது நன்மையான காரியமாகவும் பார்க்கப்படுகிறது. இது குறித்த ஒரு சிந்தனையை அபூதர் (ரலி) அவர்கள் வரலாற்றில் இவ்வாறு பதிவு செய்கிறார்கள்:

‘அபூதர் (ரலி) கூறியதாவது: ‘நான் நபி (ஸல்) அவர்களிடம் ‘அல்லாஹ்வின் தூதரே, நற்செயல்களில் சிலவற்றைக் கூட என்னால் செய்ய இயலவில்லையென்றால் நான் என்ன செய்வது? என தாங்கள் கூறுங்கள்’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘மக்களுக்குத் தீங்கு செய்யாமல் இருங்கள். ஏனெனில், அதுவும் நீங்கள் உங்களுக்குச் செய்து கொள்ளும் ஒரு நல்லறம்தான்’ என பதில் கூறினார்கள்’. (நூல்: முஸ்லிம்)

ஒருவரின் வளர்ச்சிக்கும், அவரின் எழுச்சிக்கும் இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டுமே தவிர, அவரின் அழிவிற்கும், அவருக்கு நேரப் போகும் தீங்கிற்கும் பிரார்த்திக்கக் கூடாது. நம்மால் ஒருவர் வாழவேண்டும்; நம்மால் ஒருவர் அழியக்கூடாது; நம்மால் ஒருவருக்கு தீங்கு நேர்ந்து விடக்கூடாது. இந்த விஷ யத்தில் நபி (ஸல்) அவர்கள் மிகத்தெளிவாக முன்மாதிரியாகத் திகழ்ந்தார்கள். பின்வரும் ஒரு நிகழ்வு மிகப்பெரும் படிப்பினையாக அமைகிறது.

‘துபைல் பின் அம்ர் அத்தவ்ஸீ (ரலி) அவர்களும், அவர்களின் தோழர்களும் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதரே, எங்கள் ‘தவ்ஸ்’ குலத்தார் மாறுசெய்து (இஸ்லாத்தை ஏற்க மறுத்து) விட்டார்கள். எனவே, அவர்களுக்கு தீங்கு நேரப் பிரார்த்தியுங்கள்’ என்று வேண்டிக் கொண்டனர். அப்போது, ‘தவ்ஸ் குலத்தார் அழியட்டும்’ என்று கூறப்பட்டது. உடனே நபியவர்கள், ‘இறைவா, தவ்ஸ் குலத்தாரை நேர்வழியில் செலுத்துவாயாக, அவர்களை நேரான மார்க்கத்தின் பக்கம் கொண்டு வருவாயாக’ என்று பிரார்த்தித்தார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)

பொதுமக்களுக்கு தொல்லை தரும் அனைத்து செயல்பாடுகளிலிருந்தும் முஸ்லிம்கள் தவிர்த்து கொள்ள வேண்டும். போக்குவரத்துக்கு இடையூறு தரக்கூடாது. பாதசாரி களுக்கு தொந்தரவு தரக்கூடாது. மருத்துவ மனைகள் போன்ற இடங்களில் நோய்க்கு நிவாரணம் தேடிவரும் நோயாளிகளுக்கும், முதியோர்களுக்கும் கூச்சல், குழப்பம் போட்டு தொல்லை தரக்கூடாது. இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் பயணம் செய்வோர் சாலைகளில் வண்டியின் ஹாரனை அதிகமாக ஒலி எழுப்பி, சாலையில் கடப்போருக்கு தர்ம சங்கடத்தை கொடுக்கக் கூடாது. காற்று, ஒலி, நீர், நிலம், ஆகாயம் இவற்றை மாசுபடுத்தி பொதுமக்களின் நல்வாழ்வை சீரழித்துவிடக்கூடாது.

இது குறித்த நபி மொழி வருமாறு:-

‘நீங்கள் சாலையில் அமர்வதைத் தவிருங்கள்’ என நபி (ஸல்) கூறினார்கள்.

மக்கள், ‘எங்களுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறு வழியில்லை. அவை தாம் நாங்கள் பேசிக்கொள்கிற எங்கள் சபைகள்’ என்று கூறினார்கள். அப்படியென்றால் நீங்கள் அந்தச் சபைகளுக்கு வந்து அமரும்போது, பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்துவிடுங்கள்’ என்று கூறினார்கள்.

மக்கள், ‘பாதையின் உரிமை என்ன?’ என்று கேட்டார்கள்.

அதற்கு நபியவர்கள் ‘(அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும், (பாதையில் செல்வோருக்குச் சொல்லாலோ, செயலாலோ) துன்பம் தராமலிருப்பதும், சலாமுக்கு பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் தான் அதன் உரிமை ஆகும்’ என இவ்வாறு பதிலளித்தார்கள்’. (அறிவிப்பாளர்: அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல்: புகாரி)

ஏதேனும் ஒன்றை கூறி ஒருவருக்கு நோவினை தருவது பாவமான காரியமாகும். இதிலிருந்து தவிர்ந்து நடக்க முயலவேண்டும் அல்லது கேட்டில் விழும் சூழல் ஏற்படும்.

‘இறைநம்பிக்கை கொண்ட ஆண் களையும், இறைநம்பிக்கை கொண்ட பெண்களையும் செய்யாத (எதையும் செய்ததாகக்) கூறி எவர்கள் நோவினை செய்கிறார்களோ, நிச்சயமாக அவர்கள் அவதூறையும், வெளிப்படையான பாவத்தையுமே சுமந்து கொள்கிறார்கள்’. (திருக்குர்ஆன் 33:58)

நோவினை தருவது, தொல்லை கொடுப்பது, தீங்கு விளைவிப்பது, ஒருவரின் மனதை புண்படுத்துவது யாவுமே இறைநம்பிக்கைக்கு புறம்பான செயல் களாகும். அதுமட்டுமல்ல, இவை நரகத்தின் படுகுழியில் தள்ளும் மோசமான காரியங்களாகும்.

‘ஒருமனிதர் நபி (ஸல்) அவர்களிடம் ‘அல்லாஹ்வின் தூதரே, இந்த பெண் அவளின் அதிகமான தொழுகைகள், அதிகமான நோன்புகள், அதிகமான தானதர்மங்கள் இவற்றைக்கொண்டு நினைவுபடுத்தப்படுகிறாள். எனினும், அவள் தமது அண்டை வீட்டாருக்கு தமது நாவினால் தொல்லை தருகிறாள்’ என்று முறையிட்டார். உடனே நபி (ஸல்) அவர்கள் ‘அவள் நரகவாதி’ என்றார்கள். மேலும் அவர், அல்லாஹ்வின் தூதரே! இந்தப்பெண் அவளின் குறைவான தொழுகைகள், குறைவான நோன்புகள், குறைவான தானதர்மங்கள் கொண்டு அவள் பேசப்படுகிறாள். எனினும், அவர் தமது நாவால் தமது அண்டை வீட்டாருக்கு நோவினை தருவதில்லை’ என்று முறையிட்டார். உடனே நபி (ஸல்) அவர்கள் ‘அவள் சொர்க்கவாசி’ என்று விளக்கமளிப்பார்கள்.’ (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: அஹ்மது)

பெரும்பாலும் பொதுமக்களுக்கு தொல்லை கிடைப்பது மனிதனின் நாவினால் ஏற்படுகிறது. சில வேளை அவனது கரத்தாலும், அவனது இன்னும் பிற செயல்களாலும் ஏற்படுகிறது. எந்தவிதத்திலும் பொதுமக்களுக்கு தொல்லைகள் கொடுப்பதை இஸ்லாம் ஆதரிக்கவில்லை. அவ்வாறு ஈடுபடுவோர் உண்மையான இஸ்லாமியர்களாக இருக்கமுடியாது. உண்மையான இறைநம்பிக்கை யாளர்களாகவும் முடியாது.

நமது இறைநம்பிக்கை பொதுமக்கள் நிம்மதியாக வாழ்வதில் அமைந்துள்ளது.

- மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, நெல்லை.

Next Story