உலகத்தின் செல்வங்களை பாதுகாக்கும் குபேரன்


உலகத்தின் செல்வங்களை பாதுகாக்கும் குபேரன்
x
தினத்தந்தி 23 Dec 2020 11:15 PM GMT (Updated: 21 Dec 2020 8:01 PM GMT)

பிரம்மாவின் மானசீக புத்திரராகத் தோன்றி யவர், புலஸ்தியர். இவருக்கு விச்வரஸ் என்ற மகன் பிறந்தார்.

விச்வரஸ் முனிவராக இருந்தாலும், சுமாலி என்ற அசுரனின் மகளான கேகஸியை மணந்தார். இவர்களுக்கு தாயின் குணநலத்துடன் ராவணன், கும்பகர்ணன், சூர்ப்பனகை என மூன்று பிள்ளைகள் பிறந்தனர்.

தந்தையின் குணநலத்துடன் விபீஷணன், குபேரன் ஆகிய இருவரும் பிறந்தனர். இதில் குபேரன் மிகச் சிறந்த சிவ பக்தன். அவர் சிவபெருமானை நினைத்து கடும் தவம் புரிந்ததன் காரணமாக, வடதிசைக்கு அதிபதியாக ஆனார். மேலும் உலகத்து செல்வம் முழுவதையும் குபேரனிடம் ஒப்படைத்து, உழைக்கின்ற மக்களுக்கு அவர்களின் விதிப்பயன்களுக்கு ஏற்ப செல்வத்தைக் கொடுத்துவரும்படி சிவபெருமான் கட்டளையிட்டார்.

இதற்கிடையில் திருமாலின் மனைவியான லட்சுமிதேவி, தனம், தான்யம், சந்தானம் உள்ளிட்ட எட்டு விதமான சக்திகளைப் பெற்றிருந்தாள். அவளது சக்திகள் அனைத்தையும் சங்கநிதி, பதுமநிதி ஆகியோரிடம் ஒப்படைத்து பராமரிக்கக்கூறினாள். அந்த இருவரையும் தன்னுடைய கணக்கர்களாக சேர்த்துக் கொண்டார், குபேரன். இவர்கள் இருவரும் குபேரனின் இருபுறமும் அமர்ந்தனர். குபேரன் அரசாட்சி நடத்த, ‘அழகாபுரி’ என்ற பட்டணத்தை தேவசிற்பியான விஸ்வகர்மா உருவாக்கிக் கொடுத்தார். அங்கு ஒரு அரண்மனை கட்டப்பட்டது. இந்த அரண்மனையில் இருந்த அத்தாணி மண்டபத்தில் தாமரை மலர் ஏந்தி, மீன் ஆசனத்தில் போடப்பட்ட பட்டு மெத்தை மீது அமர்ந்து ஆட்சி செலுத்தி வருகிறார், குபேரன்.

பணக்கஷ்டத்தால் துன்பப்படுபவன், இதுவரையில் கொடிய பாவங்கள் செய்யாமல் இருந்தால் அவனை ஒரே நாளில் கோடீஸ்வரன் ஆக்குவது இவரது பணி. இவரது வலதுபுறத்தில் சங்கநிதியும், இடதுபுறம் பதுமநிதியும் இருப்பார்கள். சங்கநிதி கையில் சங்கு வைத்திருப்பார். இவர்தான் குபேரனிடம் செல்வம் பெற அனுமதி கொடுப்பவர். இவரது மற்றொரு ைக, வரத முத்திரை தாங்கி இருக்கும். பதுமநிதியின் கையில், தாமரை இருக்கும். தாமரையும், சங்கும் செல்வத்தின் அடையாளங்கள் என்பதால் இந்த அமைப்பு காணப்படுகிறது.

குபேரன், சிறுத்த சிவந்த உருவமும், பருத்த வடிவமும் கொண்டவர். இவரது மனைவி சித்ரலேகா. தலையில் கிரீடம் ஆபரணங்கள் அணிந்து, முத்துக்குடையின் கீழ் ஆசனத்தில் குபேரன் அமர்ந்திருக்கிறார். அவர் காலின் கீழ், அவரது வாகனமான குதிரை இருக்கும். குபேரனின் ஒரு கை அபய முத்திரையைக் காட்டும். இன்னொரு கை பாம்புக்குப் பகைவனான கீரியைத் தொட்டுக் கொண்டிருக்கும். சில சித்திரங்களில் கீரிக்குப் பதிலாக கைக்குடை ஒன்றை வைத்திருப்பார். இது இறைத்தன்மைக்குரிய, அதாவது அரசனுக்குரிய அடையாளம். குபேரன் எங்கு பறந்து சென்றாலும் தங்கம், முத்து ஆகியவை வழி நெடுக சிதறிக் கொண்டே போகுமாம். அவர் தன் வாய் வழியாக ரத்தினங்களை உமிழ்வதால் இந்த செய்கை நடைபெறுவதாக சொல்லப்படுகிறது.

குபேரனுக்கு மொத்தம் ஒன்பது பொருளாளர்கள் உள்ளனர். குபேரன் ஒரு சமயம் எல்லா சிவாலயங்களுக்கும் தன் புஷ்பக விமானத்தில் சென்று வழிபட்டுக் கொண்டிருந்தார். ஒரு முறை காவிரி நதிக்கரையில் மான், புலி, பசு, யானை, பாம்பு மற்றும் எலி ஆகியவை ஒரே இடத்தில் தங்கள் பகைமை குணங்களைக் காட்டாமல் நீர் அருந்திக் கொண்டிருந்தன. அந்த நதிக்கரையருகே ஓர் இலந்தை மரமும் இருந்தது. இலந்தை மரத்தின் அடியில் ஒரு சிவலிங்கம் காணப்பட்டது. அதை குபேரன் வணங்கிக்கொண்டிருந்தபோது, “என்னை நீ முறையாக வழிபட்டு வந்தால், உனக்கு அளவிலாத நன்மைகள் கிடைக்கும். என்னை வழிபடுபவர்களுக்கு உன் அருள் கடாட்சமும் கிட்டும்” என்றது சிவபெருமானின் குரல்.

ஈசன் கூறியவாறே குபேரனும், அந்த சிவலிங்கத்தை எடுத்து பூஜை செய்து வந்தார். குபேரன் வழிபட்ட அந்த ஆலயம், பவானி சங்கமேஸ்வரர் கோவிலாகும்.


Next Story