ஆலய அற்புதங்கள்


ஆலய அற்புதங்கள்
x
தினத்தந்தி 23 Jan 2021 10:30 PM GMT (Updated: 20 Jan 2021 6:58 PM GMT)

தஞ்சாவூர் மாவட்டம் தாராசுரத்தில் உள்ள ஐராவதீஸ்வரர் கோவில், கட்டிடக் கலைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்த ஆலயங்களில் ஒன்றாகும்.

இந்தக் கோவிலின் நுழைவு வாசலில் உள்ள நந்தி அருகே இசைப்படிகள் இருக்கும். இந்தப் படிகளைத் தட்டினால் ‘சரிகமபதநிச’ என்ற சுவரங்கள் தோன்றுவதை கேட்கலாம்.

கோயம்புத்தூரில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, வெள்ளியங்கிரி மலை. இது ‘தென் கயிலாயம்’ என்றும் அழைக்கப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து சுமாா் 3500 அடி உயரத்தில் இருக்கும் வெள்ளியங்கிரி மலையின் உச்சியில், சிவபெருமானின் பஞ்சவாத்திய ஒலி கேட்பதாக சொல்கிறார்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ளது கோட்டையூர். இங்கு நூற்றி ஒன்று சாமிமலை குகை உள்ளது. இந்த குகையில் ஓரடி உயரம் கொண்ட கல்லால் ஆன அகல் விளக்கு இருக்கிறது. இதில் இளநீர் விட்டு தீபம் ஏற்றினால், அது பிரகாசமாக எரியும் அதிசயத்தைக் காணலாம்.

சென்னை வியாசர்பாடி ரவீஸ்வரர் கோவிலில், மூலவர் மீது காலை, மதியம், மாலை என மூன்று வேளைகளிலும் சூரிய ஒளி படும் அதிசயம் நிகழ்கிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது சுசீந்திரம். இங்கு சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூவரும் ஓர் உருவாக இருக்கும் தாணுமாலயன் திருக் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் உள்ள ஒரு சிற்பத்தின் ஒரு பக்க காது வழியாக குச்சியை நுழைத்தால், மறு காது வழியாக வரும்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ளது, கங்கைகொண்ட சோழபுரம். இங்கு தஞ்சை பெரிய கோவில் போன்றே, மிக பிரமாண்டமாக கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் கோவில் இருக்கிறது. இதனை தஞ்சை கோவிலைக் கட்டிய ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன் கட்டியுள்ளார். இந்தக் கோவிலில் உள்ள கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும். சிங்கத்தின் வாய் பகுதியில் ஒரு கதவு தென்படும். அதன் மூலம் கீழே இறங்கினால் கிணற்றில் குளிக்கலாம். ஆனால் மேலே இருந்து பார்ப்பவர்களுக்கு நாம் குளிப்பது தெரியாது.

சேலம் அருகே உள்ள தாரமங்கலத்தில் பெருமாள் கோவில் உள்ளது. இந்த ஆலயத்தின் ஒரு தூணில் ராமர் வில்லோடு இருப்பது போன்ற சிற்பம் காணப்படுகிறது. அங்கிருந்து பார்த்தால், மற்றொரு தூணில் வாலியும், சுக்ரீவனும் சண்டையிடுவது போன்ற சிற்பம் இருப்பதைக் காணலாம். ஆனால் வாலி இருக்கும் தூண் அருகில் நின்று பார்த்தால், ராமர் வில்லோடு இருக்கும் சிற்பத்தைக் காண முடியாது. புராணக் கதையை அடிப்படையாகக் கொண்டு செதுக்கப்பட்டுள்ள இந்த அபூர்வ சிற்ப முறையை நம்மால் வியக்காமல் இருக்க முடியாது.

Next Story