சவுலின் ஆணவத்தை உடைத்த தாவீது


சவுலின் ஆணவத்தை உடைத்த தாவீது
x
தினத்தந்தி 25 Jan 2021 10:15 PM GMT (Updated: 25 Jan 2021 7:03 PM GMT)

மக்களின் ஆதரவு தாவீதுக்குப் பெருகியதைக் கண்டு ‘எங்கே அவன் அரசனாகிவிடுவானோ’ எனப் பயந்து அவனைக் கொல்லத் துணிந்தார், சவுல்.

இஸ்ரவேலின் முதல் அரசனான சவுல், கடவுளின் கட்டளையை மீறியதால், தாவீது இஸ்ரவேலின் புதிய மன்னனாக இறைவனால் அடையாளம் காட்டப்பட்டார்.இதையடுத்து மக்களின் ஆதரவு தாவீதுக்குப் பெருகியதைக் கண்டு ‘எங்கே அவன் அரசனாகிவிடுவானோ’ எனப் பயந்து அவனைக் கொல்லத் துணிந்தார், சவுல். அவரது அந்த கொலை முயற்சியிலிருந்து பலமுறை தப்பித்த தாவீது, பல நகரங்களுக்கு ஓடி அங்கிருக்கும் ராஜாக்களிடம் அடைக்கலம் கேட்டு, எங்கும் நிரந்தரமாகத் தங்க முடியாமல் அலைந்தார். சவுலோ தன் ஆட்களுடன் தாவீதைக் கொல்லத் துரத்திக்கொண்டே இருந்தார்.

அதுல்லாம் என்ற குகையில் தாவீது மறைந்து வாழ்ந்தபோது அவருடைய அண்ணன்களும் தாவீது இருக்கும் இடத்துக்கு வந்து, அவருடன் சேர்ந்துகொண்டார்கள். அதேபோல் அநீதியினால் கொதித்துப்போய் அரசனுக்கு எதிராகப் புரட்சி செய்து பிரச்சினைகளில் சிக்கியிருந்தவர்களும், கடன்தொல்லையால் அவதிப்பட்டவர்களுமாக சுமார் 400 ஆண்கள் தாவீதோடு சேர்ந்துகொண்டார்கள். அவர்களுக்குப் போர்ப் பயிற்சி அளித்த தாவீது அவர்களின் தலைவரானார். பின்னர் நோபு நகரில் கடவுளாகிய யகோவுக்கு ஊழியம் செய்துவந்த குருவாகிய அகிதூப்பின் மகன் அகிமெலேக்கைச் சென்று சந்தித்தார். தாவீது அவரிடம் உணவையும், ஆயுதங்களையும் பெற்றுக்கொண்டார். அகிமெலேக்கின் இந்தச் செயலை ஒற்றர்கள் வழியே கேள்விப்பட்ட சவுல், நோபு நகருக்கு ஆட்களை அனுப்பி தாவீதுக்கு உதவிய அகிமெலேக்கையும் 85 குருமார்கள் உள்ளிட்ட அவரது குடும்பத்தார் அனைவரையும் அரண்மனைக்கு அழைத்துவரச் செய்து, கொன்று போட்டான். நோபு நகரத்தையும் தாக்கி, ஆண்கள், பெண்கள், பிள்ளைகள், கைக்குழந்தைகள் எல்லாரையும் வாளுக்குப் பலியாக்கினான். அகிமெலேக்கின் மகன்களில் ஒருவராகிய அபியத்தார் கொலைக்களத்திலிருந்து தப்பியோடி தாவீதிடம் தஞ்சமடைந்து, சவுல் இரக்கமின்றி நடத்திய படுகொலைகளைப் பற்றி எடுத்துக் கூறினார். தன்பொருட்டு இத்தனை மரணங்கள் நிகழ்ந்ததை எண்ணி தாவீது மிகவும் வருந்தி அழுதார்.

அதேசமயம் தாவீதிடம் பலமுறை தோற்ற பெலிஸ்தியர்கள் கேகிலா என்ற நகரத்தைத் தாக்கி, அங்குள்ள தானியங்களையும் செல்வங்களையும் கொள்ளையடித்துக் கொண்டிருந்ததைக் கேள்விப்பட்ட தாவீது, தனது சிறு படையுடன் விரைந்து சென்று கேகிலா நகரத்தாரைக் காப்பாற்றினார். இது பற்றிய செய்தி சவுலின் காதுகளுக்குச் சென்றதும் அவரது ரத்தம் கொதித்தது. பெரும் படையுடன் புறப்பட்ட சவுல், தாவீதை தீர்த்துக்கட்ட துடித்தார். இதை கடவுள் வழியாக அறிந்த தாவீது, தன்னுடன் இருந்த 600 வீரர்களுடன் பல இடங்களில் பதுங்கி வாழ்ந்தார். இறுதியாக என்கேதிக்கு என்ற செங்குத்தான மலைப் பகுதிக்குப் போய், அங்கிருந்த குகைகளில் தங்கினார்.

இதை அறிந்துகொண்ட சவுல், 3,000 தலைசிறந்த வீரர்களைத் தேர்ந்தெடுத்து, வரையாடுகள் திரிகிற செங்குத்தான அந்தப் பாறைகளின் நடுவே தாவீதையும் அவருடைய ஆட்களையும் தேடிக்கொண்டு போனார். தன் படை வீரர்களை விட்டு தனியாக ஒரு குகைக்குள் சென்ற சவுலுக்கு, அங்கே தாவீதும் அவரது படையும் பதுங்கி இருந்தது தெரியவில்லை.

தாவீதின் வீரர்கள் அவரிடம், “இன்றைக்கு நம் கடவுளாகிய யகோவா உங்கள் கைகளின் வெகு அருகில் உங்கள் எதிரியைக் கொண்டுவந்து கொடுத்திருக்கிறார். அவரை நீர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்” என்று தூண்டினார்கள். ஆனால், தாவீது எழுந்து சத்தமில்லாமல் போய், சவுல் போட்டிருந்த கையில்லாத அங்கியின் ஓரத்தை மட்டும் வெட்டி எடுத்தார். அவரது ஆட்களோ தாவீதின் செயலால் கோபமுற்று சவுலைக் கொல்லத் துடித்து மறைவுகளிலிருந்து வெளிப்பட்டார்கள். ஆனால், தாவீது தன்னுடைய வீரர்களைத் தடுத்து, ஆட்களை எச்சரித்தார். சவுலோ இதைக் கேட்டு குகையிலிருந்து தலைதெறிக்க வெளியே ஓடினார்.

அப்போது, தாவீதும் அந்தக் குகையிலிருந்து வெளியே வந்து, “என் எஜமானே, சவுல் ராஜாவே.. நீங்கள் குகையில் இருந்தபோது கடவுள் உங்களை எப்படி என் கையில் கொடுத்தார் என்பதை இன்றைக்கு நீங்களே பார்த்தீர்கள். ஆனால், நான் உங்களைக் கொல்லவில்லை. ஏனெனில், நீங்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். உங்களுடைய கையில்லாத அங்கியின் ஓரத்தை வெட்டி எடுத்துக்கொண்டேன். நான் இதை மட்டும்தான் வெட்டி எடுத்தேன், உங்களைக் கொல்லவில்லை. இதிலிருந்தே நீங்கள் தெரிந்துகொள்ளலாம். நான் உங்களுக்கு எதிராக எந்தப் பாவமும் செய்யவில்லை. ஆனால், நீங்கள் என் உயிரை வேட்டையாடத் துடிக்கிறீர்கள். இஸ்ரவேலின் ராஜா யாரைத் தேடி அலைகிறார்? யாரைத் துரத்திக்கொண்டு வருகிறார்? உங்களுக்கும் எனக்கும் நடுவில் நின்று கடவுளே தீர்ப்பு கொடுக்கட்டும். நீங்கள் எனக்குத் தீர்ப்புக் கொடுக்காதீர்கள்” என்றார். கடவுள் முன்பாக தாவீதின் பணிவைக் கண்டு சவுலின் ஆணவம் உடைந்து நொறுங்கியது.

Next Story