பிரதோஷ வகைகள்


பிரதோஷ வகைகள்
x
தினத்தந்தி 27 Jan 2021 9:30 PM GMT (Updated: 27 Jan 2021 10:09 AM GMT)

பிரதோஷத்திலும் 20 வகைகள் இருக்கின்றன. இதில் ஒரு 5 வகையான பிரதோஷத்தை இங்கே பார்ப்போம்.

மாதந்தோறும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி திதியன்று வருவது பிரதோஷம். இந்த பிரதோஷத்திலும் 20 வகைகள் இருக்கின்றன. இதில் ஒரு 5 வகையான பிரதோஷத்தை இங்கே பார்ப்போம்.

திவ்யப் பிரதோஷம்

பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது ‘திவ்யப் பிரதோஷம்’ ஆகும். இந்த நாளன்று மரகத லிங்கேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை செய்தால் பூர்வஜென்ம வினை முழுவதும் நீங்கும்.

தீபப் பிரதோஷம்

பிரதோஷ தினமான திரயோதசி திதியில் தீப தானங்கள் செய்வது, ஈசனுடைய ஆலயங்களைத் தீபங்களால் அலங்கரித்து ஈசனை வழிபட சொந்த வீடு அமையும். இது தீபப் பிரதோஷம் ஆகும்.

அபயப் பிரதோஷம் அல்லது சப்தரிஷி பிரதோஷம்

வானத்தில் ‘வ’ வடிவில் தெரியும் நட்சத்திர கூட்டங்களே, ‘சப்தரிஷி மண்டலம்’ ஆகும். இது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வானில் தெளிவாகத் தெரியும். இந்த மாதங்களில் திரயோதசி திதியில் முறையாக பிரதோஷ வழிபடுவதும், சப்தரிஷி மண்டலத்தைத் தரிசித்து வழிபடுவதுமே அபயப் பிரதோஷம் அல்லது சப்தரிஷி பிரதோஷம் ஆகும். இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கும் ஈசன் தரம் பார்க்காது அருள் புரிவான்.

மகா பிரதோஷம்

ஈசன் விஷம் உண்ட நாள் கார்த்திகை மாதம், சனிக்கிழமை, திரயோதசி திதி ஆகும். எனவே சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் ‘மகா பிரதோஷம்’ ஆகும். இந்த மகா பிரதோஷத்து அன்று எமன் வழிபட்ட சுயம்பு லிங்க தரிசனம் செய்வது மிகவும் உத்தமம் ஆகும்.

குறிப்பாக திருக்கடையூர், சென்னை வேளச்சேரியில் உள்ள, ‘தண்டீசுவர ஆலயம்.’ திருச்சி, மண்ணச்சநல்லூர் அருகே உள்ள ‘திருப்பைஞ்ஞீலி’ சிவ ஆலயம், குடவாசலில் இருந்து நன்னிலம் செல்லும் பாதையில் உள்ள ‘ஸ்ரீவாஞ்சியம்’ சிவ ஆலயம், கும்ப கோணம் - கதிராமங்கலம் சாலையில் உள்ள ‘திருக்கோடி காவல்’ சிவ ஆலயம் ஆகியவை குறிப்பிடத்தக்கனவாகும். மாசி மாதம் வரும் மகா சிவராத்திரிக்கு முன்பாக வரும் பிரதோஷமும், ‘மகா பிரதோஷம்’ எனப்படும்.

உத்தம மகா பிரதோஷம்

சிவபெருமான் விஷம் அருந்திய தினம் சனிக்கிழமையாகும். அந்தக் கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறையில், சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் உத்தம மகா பிரதோஷம் ஆகும். இது மிகவும் சிறப்பும் கீர்த்தியும் பெற்ற தினமாகும்.

Next Story