நல்ல மேய்ப்பரின் வேலை என்ன?


நல்ல மேய்ப்பரின் வேலை என்ன?
x
தினத்தந்தி 13 April 2021 9:55 AM GMT (Updated: 13 April 2021 9:55 AM GMT)

மனிதர்களை ஆபத்து இல்லாத பகுதிகளில் வழிநடத்திச் சென்றார். அங்கு இளைப்பாறுதலும் தந்தார். அவரைப் போலவே, பெற்றோர்களைத் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல மேய்ப்பர்களாக இருக்கும்படி அவர் கேட்டுக்கொள்கிறார்.

இயேசு கிறிஸ்து நல்ல மேய்ப்பர். எப்படி என்கிறீர்களா?

மனிதர்களை ஆபத்து இல்லாத பகுதிகளில் வழிநடத்திச் சென்றார். அங்கு இளைப்பாறுதலும் தந்தார். அவரைப் போலவே, பெற்றோர்களைத் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல மேய்ப்பர்களாக இருக்கும்படி அவர் கேட்டுக்கொள்கிறார்.

“மழை, வெயில், பனி என்று பார்க்காமல் வயல்களில் தங்கி ஆடுகளை மேய்த்தார்கள். எதிரிகளிடமிருந்தும், கொடிய விலங்குகளிடமிருந்தும் ஆடுகளைப் பாதுகாத்தார்கள். காயப்பட்ட ஆடுகளுக்கும், வியாதிக்குள்ளான ஆடுகளுக்கும் தேவையானதைச் செய்தார்கள். ஆட்டுக்குட்டிகளை இன்னும் நன்றாகக் கவனித்துக் கொண்டார்கள்” (40:11) என்று ஏசாயா புத்தகம் மேய்ப்பர்களின் பணியை விவரிக்கிறது.

பெற்றோர்களும் மேய்ப்பர்களைப் போல்தான் இருக்கிறார்கள். பிள்ளைகளை `பரலோகத் தந்தைக்கு ஏற்ற முறையில்' வளர்க்க வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது. ஆனால் அது அவ்வளவு எளிதானதில்லை. ஏனென்றால் பிள்ளைகளுக்கு, சாத்தான் நிறைய சோதனைகளைக் கொடுக்கிறான்; இளமைப் பருவத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் உடல், மன ரீதியான ஆசை களோடு பிள்ளைகள் போராட வேண்டியிருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் பெற்றோர்கள் நல்ல மேய்ப்பர்களாக செயல்பட விவிலியம் வழிகாட்டுகிறது.

தன் மந்தையில் உள்ள ஆடுகள் ஒவ்வொன்றும் எப்படி இருக்கிறது என்று ஒரு நல்ல மேய்ப்பர் அடிக்கடி கவனிப்பார். “உன் ஆடுகளின் நிலைமையை நன்றாய் அறிந்துகொள்; உன் மந்தைகளின்மேல் கவனமாயிரு” (27:23) என நீதிமொழி எடுத்துக் காட்டுகிறது. உங்கள் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்று நீங்கள் கவனிக்க வேண்டும்; என்ன நினைக்கிறார்கள், எப்படி உணர்கிறார்கள் என்று புரிந்துகொள்ள வேண்டும். அதற்காக பிள்ளைகளிடம் மனந்திறந்து பேசுங்கள். இளமை பருவத்தில் பிள்ளைகள் பெற்றோர்களிடம் மனந்திறந்து பேசத் தயங்குவார்கள். இதை சரிசெய்ய உங்கள் பிள்ளைகளோடு சேர்ந்து விளையாடுங்கள். உடற்பயிற்சி செய்யுங்கள். அவர்களோடு சேர்ந்து சாப்பிடுங்கள். அவர்களுக்குப் பிடித்தமான விஷயம் பேசும்போது, அதில் உங்களுக்குத் தெரிந்ததைக் கூறி, உங்களுக்கும் அவர்களுக்குமான மனத்தடையை உடைத்தெறியுங்கள். இப்படி அவர்களோடு போதுமான அளவு நேரம் செலவிட்டால், பிள்ளைகள் உங்களிடம் மனந்திறந்து பேச முன்வருவதைப் பார்ப்பீர்கள்.

மற்றவர்கள் பேசுவதைக் கூர்மையாகவும், பொறுமையுடனும் கேட்பது ஒரு சிறந்த பழக்கம். உங்கள் பிள்ளைகளிடம் நீங்கள் இன்னும் பொறுமையைக் கையாளலாம்.

நீங்கள் பொறுமையாகக் கேட்கிறீர்கள் என்று பிள்ளைகளுக்குத் தெரிந்தால்தான் பிள்ளைகள் உங்களிடம் மனந்திறந்து பேசுவார்கள். நீங்கள் எப்போதும் அலுவலக மனநிலையிலேயே இருந்தால் உங்களிடம் பேசத் தயங்குவார்கள். உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் நல்ல நண்பர்களாகவும் இருக்க வேண்டும்; அப்போதுதான் வெளிப்படையாகப் பேசுவார்கள்.

“கெட்ட சகவாசமோ, மோசமான பொழுதுபோக்கோ அவர்களைத் தவறாக வழிநடத்திவிடும்” என்கிறது நீதிமொழி. ஒரு ஆடு, சற்று தூரத்தில் இருக்கும் பசுமையான இடத்தைப் பார்த்து, அங்கிருக்கும் புல்லை மேய்வதற்குச் சென்றுவிடலாம். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக வழிமாறிப் போய்விடலாம். அதேபோல், பிள்ளைகளும் கொஞ்சம் கொஞ்ச மாகப் பெற்றோர்களை விட்டு விலகிப்போவதற்கு வாய்ப்பிருக்கிறது.

நீங்கள் நல்ல மேய்ப்பர் என்றால் உங்கள் ஆடுகளாகிய அன்புப் பிள்ளைகள், எத்தகைய மேய்ச்சல் நிலத்தில் இளைப்பாறிவருகிறார்கள் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்க வேண்டும். மேய்ச்சல் நிலம் ஆபத்துக்கள் நிறைந்ததாக இருந்தால், மந்தையிலுள்ள ஆடு தொலைந்துபோக வாய்ப்பிருக்கிறது என்று உணர்ந்தால் அவர்களை பக்குவமாய் வழிநடத்துங்கள். நல்ல நிலத்திற்கு அழைத்து வாருங்கள். அது நல்ல மேய்ப்பனின் வேலை.


Next Story