ராமநாதபுரத்தில் ஆடிமாத கடைசி வெள்ளி: அம்மன் கோவில்களில் பெண்கள் சிறப்பு பூஜை


ராமநாதபுரத்தில் ஆடிமாத கடைசி வெள்ளி: அம்மன் கோவில்களில் பெண்கள் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 14 Aug 2021 11:47 AM GMT (Updated: 14 Aug 2021 11:47 AM GMT)

ராமநாதபுரத்தில் ஆடிமாத கடைசி வெள்ளிக்கிழமையை யொட்டி அம்மன் கோவில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் ஏராளமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி கோவில்களில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார்.

ராமநாதபுரம், 

ஆடி மாதம் என்பது அம்மனுக்கு உரிய வழிபாடு, உரியமாதமாக கருதப்படுகிறது. ஆடி மாதம் முழுவதும் அம்பிகையை கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளோம். இதன்காரணமாக ஒவ்வொரு ஆண்டும் ஆடிமாதம் அம்மன் கோவில்களில் அம்பாளுக்கு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. பொதுவாக ஆடி மாதத்தின் கடைசி வெள்ளி என்பது விஷ்ணு பகவானின் மனைவியான மகாலட்சுமிக்கு உரியது. இதன்படி இந்த ஆண்டு ஆடி மாதம் கடைசி வெள்ளியான நேற்று ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடைபெற்றன.

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மல்லம்மாள் காளிஅம்மன், ராமநாதபுரம் உத்ரகாளி அம்மன், ருத்ரமாதேவி அம்மன், காந்தாரி அம்மன், வெட்டுடையாள் காளி அம்மன் உள்ளிட்ட அனைத்து அம்மன் கோவில்களிலும் காலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பெண்கள் அதிகஅளவில் கலந்து கொண்டு சுமங்கலி பூஜை செய்து படையல் படைத்து பெண் பக்தர்களுக்கு மஞ்சள் குங்குமம் கொடுத்து வழிபட்டனர்.

திருவிளக்கு பூஜை

கோவில்களில் திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டு பெண்கள் மாவிளக்கு எடுத்து அம்மனை வழிபட்டனர். ஆடி மாத கடைசி வெள்ளி என்பது பெண்களுக்கு கேட்ட வரம் கொடுக்கும் நாள் என்பதால் ஏராளமான பெண்கள் அம்மன் கோவில்களில் கூடி பிரார்த்தனை செய்து வழிபட்டனர். கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கோவில் நிர்வாகத்தினர் ஒலிபெருக்கி மூலம் சமூக இடைவெளியுடன் முககவசம் அணிந்து தரிசனம் செய்யுமாறு அறிவுறுத்தினர்.

Next Story