உழைப்பின் உன்னதத்தை வலியுறுத்தும் இஸ்லாம்


உழைப்பின் உன்னதத்தை வலியுறுத்தும் இஸ்லாம்
x
தினத்தந்தி 7 Sep 2021 8:05 AM GMT (Updated: 7 Sep 2021 8:05 AM GMT)

உழைப்பாளர்களின் உழைப்பில்தான் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அவர்களின் வியர்வைத் துளிகளால் தான் உலகம் பல உயரிய கண்டுபிடிப்புகளை கண்டு கொண்டுள்ளது.

உழைப்பாளர்களின் உழைப்பில்தான் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அவர்களின் வியர்வைத் துளிகளால் தான் உலகம் பல உயரிய கண்டுபிடிப்புகளை கண்டு கொண்டுள்ளது.

வானில் பறக்கும் வானூர்திகள், விண்வெளி ஆய்வுகள், வானளாவிய கட்டிடங்கள், கடலில் மிதக்கும் மிதவைகள், நிலப்பரப்பில் இயங்கும் வாகனங்கள், ஆலைகள், நிலத்தில் கிடைக்கும் உற்பத்திகள் அனைத்தும் உழைப்பாளர்களின் உன்னதமான வியர்வைத் துளிகளால் உருவானவைகளாகும்.

உழைப்பாளிகளிடமிருந்து கடின உழைப்பை மட்டுமே எதிர்பார்க்கும் சாராரிடம் அவர்களின் ஊதியத்திற்காக உரத்த குரல் கொடுத்த உத்தமர் முகம்மது நபி (ஸல்) ஆவார். அவர்களின் உழைப்பையும், ஊதியத்தையும் ஒன்றாக சேர்த்து பார்த்த மார்க்கம் இஸ்லாம் ஆகும்.

இஸ்லாம் எவருடைய கூலி விஷயத்திலும் அநீதி இழைத்ததில்லை. அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதரும் அநீதி இழைக்கவில்லை.

“எவருடைய கூலியிலும் நபி (ஸல்) அவர்கள் அநீதி இழைத்ததில்லை”. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி)

உழைப்பாளியின் ஊதியத்தை தர மறுப்பது குற்றமாகும். உழைப்பாளியின் ஊதியத்தை அறவே கொடுக்க மறுப்பதும், அல்லது குறைத்துக் கொடுப்பதும் மோசடியாகும். இத்தகைய அரக்கர்களுக்கெதிராக (நபி (ஸல்) இறைவனிடம் மறுமையில் வாதாடி தண்டனை பெற்றுத்தருவார்கள்) இறைவனும் தானே வாதாடி தக்க பதிலடி கொடுப்பான்.

“மூவருக்கெதிராக மறுமைநாளில் நான் வாதாடுவேன். 1) என் பெயரால் சத்தியம் செய்து மோசடி செய்தவன், 2) சுதந்திரமானவனை (அடிமையாக) விற்று அந்தக்கிரயத்தைச் சாப்பிட்டவன், 3) கூலிக்கு ஒருவரை அமர்த்தி அவரிடம் உழைப்பை வாங்கிக் (சுரண்டிக்) கொண்டு ஊதியம் கொடுக்காமல் இருந்தவன், என இறைவன் இவ்வாறு கூறியதை நபி (ஸல்) தெரிவித்தார்கள்”. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)

உழைப்பாளிகளுக்கு ஆதரவாக இறைவனே முன்வந்து வாதாடுவது உழைப்பின் உன்னதத்தை உயர்த்திக் காட்டுகிறது. அதுபோல வேலைக்கு முன்பு கூலியை நிர்ணயம் செய்ய இஸ்லாம் வலியுறுத்துகிறது.

“எவர் ஒருவர் ஒரு கூலியாளை பணியமர்த்துவாரோ அவர் அவரின் கூலியை தெரிவித்து விடட்டும் என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: அபூஸயீத் குத்ரீ (ரலி), நூல்: பைஹகீ)

“கூலி குறிப்பிடப்படாமல் கூலியாளை பணியமர்த்துவதை நபி (ஸல்) தடுத்தார்கள்”. (அறிவிப்பாளர்: அபூஸயீத் குத்ரீ, நூல்: அஹ்மது)

வேலை முடிந்ததும் வியர்வை உலரும் முன்பு பேசிய ஊதியத்தை வழங்கிட இஸ்லாம் பரிந்துரைத்துள்ளது.

“உழைப்பாளியின் வியர்வை உலரும் முன்பாகவே அவருக்கு நீங்கள் ஊதியம் வழங்கிவிடுங்கள் என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்: இப்னுமாஜா)

தினக்கூலி, வாரக்கூலி, மாதக்கூலி என வழங்கப்படுகிறது. இவற்றில் நிர்ணயிக்கப்பட்ட தினத்தில் ஊதியத்தை வழங்கிட வேண்டும். இவற்றை இழுத்தடிக்கக் கூடாது. இதுவும் உழைப்பாளிக்கு இழைக்கப்படும் அநீதமே. இவ்வாறு செய்ய நேர்ந்தால் அவரின் ஊதியத்தை முதலாளி முதலீடு செய்து லாபத்தையும் சேர்த்து வழங்கிட வேண்டும்.

“மழைக்காக மூவர் மலைப்பகுதியிலுள்ள குகை ஒன்றில் தஞ்சம் அடைந்தனர். எதிர்பாராதவிதமாக பெரும்பாறை ஒன்று உருண்டு வந்து அந்தக் குகையின் பாதையை அடைத்துவிட்டது. இதிலிருந்து மீள ஒவ்வொருவரும் இறைவனுக்காகச் செய்த தமது நற்செயலை நினைவு கூர்ந்தனர். இதனால் அந்தப் பாறை அகன்றது. அவர்களில் ஒருவர் “இறைவா! நான் ‘பரக்’ எனும் அளவு நெல்லைக் கூலியாக நிர்ணயித்து ஒரு கூலியாளை அமர்த்தினேன். வேலை முடிந்ததும் நிர்ணயித்தக் கூலியை அவர் வாங்க மறுத்து சென்றுவிட்டார். அதை நான் நிலத்தில் விதைத்து, விவசாயம் செய்து வந்தேன். அதன் வருவாயிலிருந்து பல மாடுகளையும், இடையர்களையும் சேகரித்து விட்டேன். அவர் சில காலங்களுக்குப் பிறகு வந்து, ‘இறைவனை அஞ்சு, எனது கூலியைக் கொடு’ என்றார். நான், ‘இவற்றையெல்லாம் எடுத்துக் கொள்’ என்றேன். அவரும் எடுத்துச் சென்றார் என இந்த நிகழ்வை அவர் கூறியதாக நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி)

Next Story