முக்தியை அளிக்கும் திருவண்ணாமலை தீபம்


முக்தியை அளிக்கும் திருவண்ணாமலை தீபம்
x
தினத்தந்தி 17 Nov 2021 5:35 AM GMT (Updated: 17 Nov 2021 5:35 AM GMT)

தமிழ்நாட்டில் உள்ள சிவபெருமானுக்குரிய பஞ்சபூதத் தலங்களில், திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் ‘அக்னி தலம்’ என்ற சிறப்பைப் பெற்றுள்ளது.

திருமாலுக்கும், பிரம்மதேவருக்கும் இடையே ‘யார் பெரியவர்?’ என்ற போட்டி ஏற்பட்டது. அப்போது சிவபெருமான், தன்னுடைய முடியையும், அடியையும் யார் முதலில் காண்கிறார்களோ, அவர்களே பெரியவர் என்று கூறினார்.

இதையடுத்து திருமால் வராக உருவம் கொண்டு, சிவபெருமானின் அடியைத் தேடி புறப்பட்டார். பிரம்மதேவனோ, அன்னப் பறவையின் தோற்றம் கொண்டு ஈசனின் முடியைக் காணச் சென்றார். சிவபெருமானோ இருவரும் காண முடியாதபடி ஓங்கி உயர்ந்து வளர்ந்து ஜோதிவடிவாக நின்றார். இப்படி ஜோதி ரூபமாக இறைவன் நின்ற தினமே கார்த்திகை திருநாள் என்று சொல்லப்படுகிறது. அதோடு இந்த நாளில்தான் சிவபெருமான், தன்னுடைய உடலில் பாதியை அம்பாளுக்கு அளித்ததாகவும் கூறப்படுகிறது.

நெருப்பு வடிவமாக நின்ற சிவபெருமான், தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, மலையாக நின்றதாக சொல்லப்படுகிறது. எனவே திருவண்ணாமலையில் உள்ள மலையை, சிவபெருமானாகவே நினைத்து வழிபடுகின்றனர். அண்ணாமலையார் கோவிலுக்குப் பின்புறமாக உள்ள இந்த மலையை, கிழக்கு திசையில் இருந்து பார்த்தால் ஏக (ஒன்று) மலையாகத் தெரியும். மலை சுற்றும் வழியில் நின்று பார்த்தால், இரண்டாகத் தெரியும். இது அர்த்தநாரீஸ்வர தத்துவத்தைக் குறிக்கும். மலையின் பின்னால் மேற்கு திசையில் இருந்து பார்த்தால் மூன்றாகத் தெரியும். இது சிவன், பிரம்மா, திருமால் என மும்மூர்த்திகளைக் குறிப்பதாகும்.

பஞ்சபூதங்களில் அக்னி தலம் என்பது போல, ஆறு ஆதாரங்களில் திருவண்ணாமலை மணிப்பூரகத் தலமாக விளங்குகிறது. மனித உடலில் மணிப்பூரகம் என்பது வயிற்றுப்பகுதியைக் குறிக்கும். வயிறு என்பது உலகம் என்பதாகப் பொருள் கொண்டால், இந்த ஒட்டுமொத்த உலகமும், அண்ணாமலையாருக்குள் அடக்கம் என்பதாக அர்த்தம்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கிரிவலம் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். ஆண்டுக்கு இரண்டு முறை, அண்ணாமலையாரே, தன்னுடைய மலையை கிரிவலம் வரும் நிகழ்வு நடக்கிறது. இதனால் கிரிவலம் என்பது முக்கியத்துவம் பெறுகிறது. கார்த்திகை தீபத்தின் மறுதினத்திலும், பொங்கலுக்கு மறுநாளும் என இரண்டு முறை, அண்ணாமலையார், தன்னுடைய மனைவி உண்ணாமுலையம்மனுடன் கிரிவலம் வருவார். கிரிவலம் செய்யும் போது இரவு நேரத்தில், பவுர்ணமி வெளிச்சத்தில் வலம் வருவதே சரியான முறையாகும். அந்த நிலவொளியில் சந்திரன் 16 கலைகளுடன் பூரணமாக பிரகாசிப்பார். அந்த ஒளி மனித உடலில் பட்டால் தைரியம் பெருகும். தெய்வ பலம் விரைவில் கிட்டும் என்பது நம்பிக்கை.

கார்த்திகை திருநாள் அன்று, திருவண்ணாமலை மலை மீது தீபம் ஏற்றப்படுகிறது. 2668 அடி உயரம் கொண்ட இந்த மலையின் மீது, 7½ உயர கொப்பரை ஒன்று வைத்து, அதில் 1000 மீட்டர் காடாத்துணி, 3 ஆயிரம் கிலோ பசுநெய் ஊற்றி, 2 கிலோ கற்பூரம் வைத்து தீபத்தை ஏற்றுவார்கள்.

மலையில் தீபம் ஏற்றியதும், அண்ணாமலையார் கோவிலில் இருக்கும் அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தின் வெளியே வந்து பக்தர்களுக்கு தரிசனம் கொடுப்பார். இது ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும் ஒரு நிகழ்வாகும். மலை மீது ஏற்றப்படும் தீபம் தொடர்ச்சியாக 11 நாட்கள் எரியும். இந்த தீபத்தை எரித்து கிடைத்த மை, அடுத்து வரும் ஆருத்ரா தரிசனத்திற்குப் பிறகு பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்படும்.

திருவண்ணாமலையில் ஏற்றப்படும் தீபத்தை தரிசனம் செய்தால் 21 தலைமுறைகளுக்கு முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

Next Story