‘கடுகளவு நம்பிக்கை’ என்ன செய்யும்..?


‘கடுகளவு நம்பிக்கை’ என்ன செய்யும்..?
x
தினத்தந்தி 25 Nov 2021 12:14 PM GMT (Updated: 25 Nov 2021 12:14 PM GMT)

திருத்தூதர்கள் ஆண்டவரிடம், “எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்” என்று கேட்டார்கள். அதற்கு ஆண்டவர் கூறியது: “கடுகளவு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த முசக்கட்டை மரத்தை நோக்கி, ‘நீ வேரோடே பெயர்ந்துபோய்க் கடலில் வேரூன்றி நில்’ எனக் கூறினால் அது உங்களுக்குக் கீழ்ப்படியும்” என்றார்.

மேலும் தொடர்ந்தவர், ஒரு உவமையை (தலைவரும் பணியாளரும் உவமை) கூறி, சீடர்களுக்கு பாடம் புகட்டினார். ‘‘உங்கள் பணியாளர் உழுதுவிட்டோ, மந்தையை மேய்த்துவிட்டோ வயல்வெளியிலிருந்து வரும்போது அவரிடம், “நீர் உடனே வந்து உணவருந்த அமரும்” என்று உங்களில் எவராவது சொல்வாரா..? தாம் பணித்ததைச் செய்ததற்காக அவர் தம் பணியாளருக்கு நன்றி கூறுவாரா? மாறாக, “எனக்கு உணவு ஏற்பாடு செய்யும், உம் இடையை வரிந்துகட்டிக்கொண்டு, நான் உண்டு குடிக்கும்வரை எனக்குப் பணிவிடை செய்யும், அதன்பிறகு நீர் உண்டு குடிக்கலாம்” என்று சொல்வாரல்லவா?

அது போலவே, நீங்களும் உங்களுக்குப் பணிக்கப்பட்ட யாவற்றையும் செய்தபின், “நாங்கள் பயனற்ற பணியாளர்கள் எங்கள் கடமையைத்தான் செய்தோம்” எனச் சொல்லுங்கள்.”

சீடர்கள் இயேசுவிடம் தங்களின் நம்பிக்கையை மிகுதியாக்கும்படி கேட்டார்கள். இயேசு கடுகளவு நம்பிக்கை இருந்தால்கூட மரத்தையும், மலையையும் பெயர்க்கமுடியும் என்று அறிவித்தார். எனவே, தம் சீடர்களுக்குத் தேவையானது பணிவும் தாழ்மையுமே என்பதை இந்த உவமையின் வாயிலாக அறிவித்தார்.

நற்செய்தியின் பணியில் தலைவராகிய இயேசுவும் பணியாளராகவே இருந்தார். திருவிருந்து அளிக்கும்போது இயேசு, “யார் பெரியவர்?, பந்தியில் அமர்ந்திருப்பவரா? அல்லது பணிவிடை புரிபவரா? பந்தியில் அமர்ந்திருப்பவர் அல்லவா? நான் உங்கள் நடுவே பணிவிடை புரிபவனாக இருக்கிறேன்” என்று கூறினார்.

தம்மைப் போலவே, அவரது சீடர்களும் பணியாளர்களாகவே இருக்கவேண்டும் என்று இயேசு அறிவித்தார். நற்செய்தியை அறியாத மக்களிடையே அவர்கள் இறைவார்த்தையை விதைக்கவேண்டும். நம்பிக்கையுள்ளோரை வழிநடத்தும் மேற்பார்வையாளராக பணிபுரியவேண்டும். அளிக்கப்பட்டப் பணிகளை ஓய்வின்றிச் செய்து முடிக்கவேண்டும். நன்றியையோ, ஓய்வையோ, எதிர்பார்க்காமல் தங்கள் பணியைத் தொடரவேண்டும் என்று இயேசு தம் சீடருக்கு அறிவுரை கூறினார்.

இவ்வாறே திருத்தூதர் பவுலும், “நான் நற்செய்தியை அறிவிக்கிறேன் என்றாலும் அதில் நான் பெருமைப்பட ஒன்றுமில்லை. செய்ய வேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது. நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு” என்று அவரின் கடமையை அறிவித்தார்.


Next Story