நிம்மதியான வாழ்விற்கு இறைவன் காட்டும் வழி...


நிம்மதியான வாழ்விற்கு இறைவன் காட்டும் வழி...
x
தினத்தந்தி 28 Jan 2022 4:40 AM GMT (Updated: 28 Jan 2022 4:40 AM GMT)

இன்றைய உலகில் பலர் தேடி அலையும் விஷயம் மனநிம்மதி. இந்த நிம்மதிக்காக சிலர் பொருளாதாரத்திற்குப் பின்னால் ஓடுகிறார்கள். சிலர் அமைதியான இடத்திற்கு சென்றுவிட்டால் நிம்மதி இருக்கும் என்று அங்கு செல்கின்றார்கள். இன்னும் சிலரோ போதைக்கு அடிமையா கிறார்கள்.

இப்படி மனிதர்கள் எடுக்கும் முயற்சியில் அவர்களுக்கு மன நிம்மதி கிடைத்து விட்டதா என்றால் ‘இல்லை’ என்பதுதான் பதிலாக இருக்க முடியும்.

இதற்கான தீர்வை இறைவன் கூறுகின்றான்: “ஆணாயினும் பெண்ணாயினும் எவர் இறை நம்பிக்கை கொண்டவராய் இருக்கும் நிலையில் நற்செயல் புரிகின்றாரோ அவரை இவ்வுலகில் தூய வாழ்வு வாழச் செய்வோம்”. (திருக்குர்ஆன் 16:97)

தூய வாழ்வு என்றால் என்ன? நிம்மதியான சலனங்களுக்கு உள்ளாகாத வாழ்வுதான் அது. பிரச்சினைகள் வரும், சிக்கல்கள் எழும், ஆயினும் மனதில் நிம்மதியை மட்டும் ஒருபோதும் இழக்காத வாழ்வுதான் தூய வாழ்வு.

நிம்மதி இல்லாமல் போவதற்கு முக்கியமான காரணம் எது?

இழப்புகள்தான். இழப்புகளை சந்திக்கும்போது நிம்மதியையும் இழக்கிறான் மனிதன். அது எந்த இழப்பாக வேண்டுமானாலும் இருக்கலாம். பொருளாதார இழப்புகள், பிரியமானவர்களுடைய இழப்புகள், உடல் ஆரோக்கியத்தின் இழப்பு. இப்படி இழப்புகளை சந்திக்கும்போது மனிதன் நிம்மதியையும் சேர்த்தே இழக்கின்றான்.

இதுபோன்ற வேளைகளில் நிம்மதியை இழக்காமல் இருக்க இஸ்லாம் கூறும் வழிமுறை என்ன தெரியுமா? இறைநம்பிக்கையை இறுக்கமாகப் பற்றிப் பிடிப்பதுதான். யாரிடம் உண்மையான, உறுதியான இறைநம்பிக்கை இருக்கிறதோ அவர் நிம்மதியை வெகு சீக்கிரம் இழப்பதில்லை.

இறைநம்பிக்கையின் உட்கருத்து என்ன தெரியுமா? எனக்கு பொருளாதாரத்தை தந்ததும் இறைவன்தான், எடுத்ததும் இறைவன்தான். பிரியமானவர்களை கொடுத்ததும் இறைவன்தான், எடுத்ததும் இறைவன்தான். ஆரோக்கியத்தை கொடுத்ததும் இறைவன்தான், எடுத்ததும் இறைவன்தான். என் வாழ்வில் ஏற்படும் அனைத்து இழப்புகளும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடந்திருக்கின்றது என்று யார் உறுதியுடன் நம்புகின்றாரோ அவருடைய உள்ளம் நிம்மதியடைகின்றது.

அநீதி இழைக்கப்படும் போது மனிதன் கவலைக்கு உள்ளாகின்றான். மக்கள் நம்மை தவறாக விமர்சிக்கும்போது, நம்மைப் பார்த்து கை கொட்டிச் சிரிக்கும்போதும், மறுமையை நம்பக்கூடிய ஓர் இறைநம்பிக்கையாளர் எப்படி இருக்க வேண்டும் என்றால்; “இந்த உலகில் எத்தனை வருடம் வாழ்வோம்? சராசரியாக 60 அல்லது 70 வருடம் தான். மண்ணறை வாழ்க்கை முடிந்த பிறகு மறுமையில் அல்லாஹ் என்னை எழுப்புவான். எழுப்பிய பிறகு, ‘நான் நல்லவனா கெட்டவனா’ என்று காண்பிப்பான். அங்கு எனக்கு நீதியை வழங்குவான்” என்று நம்ப வேண்டும். இந்த நம்பிக்கை நிம்மதியைப் பெற்றுத்தரும்.

இறைத்தூதர் (ஸல்) கூறினார்கள்:

ஒருவர் தன் சகோதரனுக்கு அவனுடைய மானத்திலோ, வேறு (பணம், சொத்து போன்ற) விஷயத்திலோ, இழைத்த அநீதி (ஏதும் பரிகாரம் காணப்படாமல்) இருக்குமாயின், அவர் அவனிடமிருந்து அதற்கு இன்றே மன்னிப்பும் பெறட்டும். பொற்காசுகளோ, வெள்ளிக் காசுகளோ பயன் தரும் வாய்ப்பில்லாத நிலை ஏற்படும் மறுமை நாள் வருவதற்கு முன்னால் மன்னிப்பு பெறட்டும். ஏனெனில் மறுமை நாளில் அவரிடம் நற்செயல் ஏதும் இருக்குமாயின் அவனுடைய அநீதியின் அளவுக்கு அவரிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு (அநீதிக்குள்ளானவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு) விடும். அநீதி இழைத்தவரிடம் நற்செயல்கள் எதுவும் இல்லையென்றால் அவரின் தோழரின் (அநீதிக்குள்ளானவரின்) தீய செயல்கள் அவர் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டு அநீதியிழைத்தவரின் மீது சுமத்தப்பட்டு விடும். (நூல்: புகாரி)

இந்த நபிமொழியை ஒருவர் நன்றாக விளங்கிவிட்டால் மனம் கண்டிப்பாக நிம்மதி அடையும். நமக்கு அநீதி இழைக்கக்கூடிய மக்களைப் பார்த்து ஒருவகையில் மகிழ்ச்சி அடையவேண்டும். காரணம், நமக்காக அவரும் நன்மை செய்கின்றார். இந்த எண்ணத்தை வளர்த்தால் நிம்மதி வந்து சேரும்.

நல்லசிந்தனை நிம்மதியைப் பெற்றுத்தருவது போன்றே நற்செயல்களும் நிம்மதியைப் பெற்றுத் தருகிறது. நற்செயல்களில் மிகவும் மேலானது இறை நினைவுதான். இறைவன் கூறுகின்றான்:

“அறிந்து கொள்ளுங்கள் அல்லாஹ்வை நினைவு கூர்வதால் தான் உள்ளங்கள் நிம்மதியடைகின்றன”. (திருக்குர்ஆன் 13:28)

வாழ்க்கை கவலைகளால் நிரம்பியுள்ளதா? உடனே அல்லாஹ்வை நினைவு கூருவதின் பக்கம் விரைந்து வாருங்கள். நிச்சயமாக அனைவருடைய உள்ளமும் நிம்மதி அடையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

முஹம்மத் முபாரக், திருச்சி.

Next Story