உள்ளம் மகிழவைக்கும் `உருவார பொம்மை வழிபாடு'


உள்ளம் மகிழவைக்கும் `உருவார பொம்மை வழிபாடு
x
தினத்தந்தி 29 Jan 2022 4:44 AM GMT (Updated: 29 Jan 2022 4:44 AM GMT)

மண்ணைக் குழைத்து உருவங்கள் செய்து, அதை சூளையில் இட்டு சுட்டு, சுடுமண் சிற்பங்கள் உருவாக்கும் கலை, உலகம் முழுவதும் இருக்கிறது. தமிழகத்தில் சுடுமண் சிற்பங்கள், உருவங்களாக (உருவாரங்களாக) மாறி இறை வழிபாடு சார்ந்து உள்ளது. சங்க காலம் தொட்டே சுடுமண் சிற்பங்கள் இருந்து வந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

‘கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு சக்தி மனித வாழ்வில் மாற்றங்களையும், ஏற்றங்களையும் உண்டாக்க முடியும்’ என்பது மனிதர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. அந்த சக்திக்கு கடவுள், இயற்கை, அறிவியல் என்று ஒவ்வொருவரும் தங்கள் பார்வைக்கு தக்கபடி பெயர் சூட்டியுள்ளனர். அந்த வகையில் பல ஆயிரம் ஆண்டுகளாக மனிதர்களிடையே இயற்கையை வணங்கும் வழக்கம் உள்ளது.

அதன் ஒரு பகுதியாகத்தான் விளைச்சலுக்கு கை கொடுக்கும் சூரியனுக்கு நன்றி செலுத்தும் பொங்கல் திருநாள், உழவர்களுக்கு தோள் கொடுக்கும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. அத்துடன் தெய்வங்களின் வாகனங்களாக பசு, காளை, நாய், மயில், சேவல் போன்றவற்றை வைத்து அவற்றையும் வழிபட்டு வருகிறோம். அதுபோன்ற வழிபாட்டு முறை மனிதர்கள் மற்றும் கால்நடைகளை நோய்களிலிருந்து பாதுகாக்கவும், பாதிப்பில் இருந்து மீட்டெடுக்கவும் உதவும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அவற்றின் உருவங்களை மண்ணால் செய்து கோவில்களுக்கு காணிக்கையாக செலுத்தும் பழக்கம் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் உள்ளது. இவற்றை ‘உருவாரங்கள்’ என்பார்கள்.

அந்த வகையில் உள்ளங்கைக்குள் அடங்கும் உருவங்கள் முதல், அண்ணாந்து பார்க்கச் செய்யும் பிரமாண்ட உருவங்கள் வரை பக்தர்கள் காணிக்கையாக செலுத்துவதுண்டு. இந்த வகையான வழிபாட்டு முறைகள் கொங்கு மண்டலத்தில் அதிக அளவில் காணப்படுகிறது. மேலும் தென் தமிழகப் பகுதிகளில் மண்ணால் செய்த குதிரைகளை அலங்கரித்து வழிபாடு செய்யும் முறை உள்ளது. காவல் தெய்வங்களின் வாகனமான குதிரைகளுக்கு செய்யும் மரியாதையாக கருதப்படும் இந்த முறையை ‘புரவியெடுப்பு’ என்கின்றனர்.

தமிழகம் முழுவதும் பல கிராமங்களில், கம்பீரமாக வரிசை கட்டி நிற்கும் மண் குதிரை பொம்மைகளை காண முடியும். ‘நான் நல்லபடியாக பிறக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு எங்கள் தாத்தா வைத்த குதிரை சிலை’ என்று சுடுமண் உருவங் களைப் பற்றிய உரையாடல்களை இன்றும் பல கிராம கோவில்களில் கேட்க முடியும். மேலும் சில கோவில்களில் தெய்வங்களின் உருவங்கள் சுடுமண் சிற்பங்களால் செய்யப்படுவதுண்டு.

உருவ வழிபாடு தோன்றிய காலந்தொட்டே சுடுமண் சிலைகளை நேர்த்திக்கடனாக செலுத்தி வழிபடும் முறையும் வந்திருக்கக்கூடும். அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த பெதப்பம்பட்டி பகுதியில் அமைந்துள்ள ஆல்கொண்டமால் கோவிலில், காணும் பொங்கல் அன்று நடத்தப்படும் திருவிழாவில், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் திரண்டு வந்து உருவங்களை வைத்து உள்ளம் மகிழ வழிபாடு செய்கிறார்கள். ஆண், பெண், குழந்தை, ஆடு, மாடு, நாய், குதிரை, கோழி என பல வகைப்பட்ட உருவங்களை இந்தக் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி வழிபடுகின்றனர். உருவார பொம்மைகளை நேர்த்திக்கடனாக செலுத்துவதை, நோய் தீர்க்கும் மருந்தாக இந்த பகுதி மக்கள் நம்புகின்றனர். நம்பிக்கையின் அடிப்படையிலேயே கலாசாரமும், பண்பாடும் தொன்று தொட்டு இன்றளவும் காக்கப்பட்டு வருகிறது. சுடுமண்ணால் மட்டும் செய்யப்பட்ட பொம்மைகளாக அல்லாமல் எதிர்கால சந்ததியினருக்கு பறைசாற்றும் வழிபாடாகவே `உருவார பொம்மைகள்' பார்க்கப்படுகிறது.

Next Story