உங்கள் நம்பிக்கை எதில் உள்ளது?

“நீ நம்பியிருக்கிற இந்த நம்பிக்கை என்ன?” (ஏசா. 36:4).
உங்கள் எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கை என்ன? நித்தியத்தைக் குறித்த நம்பிக்கை என்ன? இந்த பூமியிலே வாழும்போது, உங்களுடைய நம்பிக்கை என்ன? சற்று சிந்தித்துப் பாருங்கள்.
சிலர் தங்களுடைய நம்பிக்கையை பணத்தில் வைக்கிறார்கள். பணம் எல்லாவற்றுக்கும் உதவும், பணம் பாதாளம் வரை செல்லும், பணமென்றால் பிணமும் வாயைப் பிளக்கும் என்பதெல்லாம் உண்மைதான். ஆனால் எந்த ஒரு மனிதன் ஆண்டவர்மேல் நம்பிக்கை வைக்காமல், பணத்தின்மேல் நம்பிக்கை வைக்கிறானோ, ஒரு நாள் அந்தப் பணம் அவனைக் கைவிடும்போது, அவன் தவித்து, துடித்துப் போவான்.
ஒரு பெரிய செல்வந்தர், “என் நம்பிக்கைஎல்லாம் என் பணத்தில்தான் இருக்கிறது” என்று பெருமையாக கூறினார். ஆனால் ஒரு பெரிய இனக்கலவரத்தில் அவருடைய எதிராளிகள் அவரைப் பிடித்துக்கொண்டார்கள். அவர்கள் கையிலிருந்து தப்பும்படி பீரோவிலிருந்த லட்சக்கணக்கான பணத்தை, நகைகளை அள்ளி அவர்களுக்கு முன்பாக வீசினார்.
ஆனால் அவர்களோ, அந்தப் பணம் எங்களுக்கு வேண்டாம். நீ தான் வேண்டுமென்று சொல்லி அவரைப் பிடித்து, அவர்களுடைய காரின் பின்னால் கட்டி, தரையிலே இழுத்து, பிறகு அவரை கொண்டுபோய் ஒரு மரத்திலே தலைகீழாக கட்டி, தொங்க வைத்து, கீழே தீயை பற்றவைத்து கொன்றார்கள். ஆம், அவர் நம்பின பணம் அவரை கைவிட்டது.
சிலர் தங்களுடைய சரீர பெலத்திலே நம்பிக்கை வைக்கிறார்கள். கராத்தே, குங்பூ போன்ற தற்காப்பு கலையை உலகத்திற்கு கற்றுக்கொடுத்த வீரனாகிய புரூஸ்லி, தன் நம்பிக்கையை எல்லாம் தன் உடல் பலத்தில் வைத்தான். பல ஆண்டுகள் உடற்பயிற்சி செய்து தனது உடம்பையும், நரம்புகளையும் முறுக்கேற்றி, உலகத்திலேயே மிகச்சிறந்த சண்டை வீரனாக விளங்கினான்.
அந்தோ! ஒரு நாள் ஒரு நடிகை அவனை விருந்துக்கு அழைத்தாள். அவன் உணவிலே விஷம் வைக்கப்பட்டிருந்தது. அவன் அதை அறியாமல் புசித்தான். சில நிமிடங்களுக்குள் வேரற்ற மரம்போல சாய்ந்து தன் ஜீவனை விட்டான். அவனுடைய நம்பிக்கை அதோடு முடிந்தது.
இன்னும் சிலர் தங்களுடைய நம்பிக்கையை பதவியிலும், இனத்தவர்களின் மேலும், டாக்டர்கள் மேலும் வைக்கிறார்கள். அவர்களெல்லாம் ஒரு நாள் கைவிடும்போது வேதனைப்படுவார்கள்.
“நீ நம்பியிருக்கிற உன் நம்பிக்கை என்ன?” என்று வேதம் கேட்கிறது.
ஆம், “தேவனே, நீரே என் நம்பிக்கை”.
தாவீது தன்னுடைய நம்பிக்கையை உலகத்திற்கடுத்த காரியங்களில் வைக்காமல், உலக மனுஷன் மேல் வைக்காமல், தேவன்பேரில் வைத்தார். தேவன்மேல் நம்பிக்கையுள்ளவர்கள் அசைக்கப்படுவதேஇல்லை.
“என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்” என்று தாவீது வேதத்தில் திரும்பத் திரும்பச் சொல்லுகிறார் (சங். 7:1).
பிரியமானவர்களே, உங்கள் நம்பிக்கையை ஆண்டவர் பேரில் வையுங்கள்.
“அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல, தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான்” (1 யோவான் 3:3).
போதகர் ஜோசப் ஆஸ்பார்ன் ஜெபத்துரை, சென்னை.
Related Tags :
Next Story