இன்ப வாழ்வு தரும் எட்டு கணபதிகள்

மனிதனின் வாழ்க்கை எட்டு நிலைகளால் ஆனது. அதனை எந்தவித துன்பமும், தடைகளும் இன்றி கடந்துசெல்ல, ‘அஷ்ட கணபதி’ என்னும் எட்டு விதமான விநாயகர்களை வணங்கி செயல்களைத் தொடங்க வேண்டும். அந்த எட்டு விநாயகர்களைப் பற்றி சிறிய குறிப்புகளாகப் பார்க்கலாம்.
ஸ்ரீவரத கணபதி
தவ சீலர்கள் தங்கள் எண்ணம் ஈடேற வணங்க வேண்டிய மூர்த்தியாக ‘ஸ்ரீவரத கணபதி’ இருக்கிறார். 4, 13, 22 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் இந்த கணபதியை வழிபடுவது நன்மை அளிக்கும். தன்னை வணங்குபவர்களுக்கு இவர் அளிக்கும் செல்வம் நிரந்தரமானது. ஆம், அவை அழியாச் செல்வமாக பக்தர்களிடம் நிலைத்து நிற்கும். எடுத்த காரியத்தை நடத்திக் கொடுக்கும் வல்லமை படைத்தவர்.
பல்லாலேஸ்வர கணபதி
வாழ்க்கையில் உள்ள மேடு பள்ளங்களை அறிந்து வேதனைகளையும், சோதனைகளையும் சாதனைகளாக மாற்ற அருள்புரியும் விநாயகராக இவர் அருள்கிறார். ‘சகட யோகம்’ உள்ள ஜாதகக்காரர்கள், இந்த விநாயகப் பெருமானை வழிபடலாம்.
மகா கணபதி
இளமை இருக்கும் வரை மரணத்தைக் கண்டு யாரும் அஞ்சுவது கிடையாது. ஆனால், ஒரு சிறு நோய் நொடியில் விழுந்து விட்டால் கூட மரண பயத்தால் மிரண்டு விடுபவர்களே அதிகம். இறுதிக் கால வாழ்வு மரண பயத்தால் நசிந்து விடாமல் இருக்க அருள்புரியும் இறைவனாக, ‘மகா கணபதி’ இருக்கிறார்.
மயூரேஸ்வர கணபதி
அடிக்கடி பயணத்தை மேற்கொள்பவர்கள் வழிபட வேண்டிய அனுக்கிரக மூர்த்தியாக இவர் உள்ளார். கார், பஸ் போன்ற வாகனங்கள் தயாரிப்பவர்களும், உரிமையாளர்களும், ஓட்டுநர்களும் வணங்க வேண்டியவராக இந்த ‘மயூரேஸ்வர விநாயகர்’ உள்ளார்.
சித்தி விநாயகர்
கன்னிப் பெண்கள் வணங்க வேண்டிய விநாயகப்பெருமானாக, ‘சித்தி விநாயகர்’ அருள்கிறார். தங்களுக்கு வரப்போகும் கணவன்மார்கள் பணம் படைத்தவராய் இருக்க வேண்டும் என்று கன்னிப் பெண்கள் நினைப்பது இயற்கையே. ஆனால், பணம் படைத்தவனை விட நல்ல மனம் படைத்தவனே மேல் என்று உத்தம வழிகாட்டும் இறைவன் இவர்.
சிந்தாமணி விநாயகர்
மூன்றாம் பிறை அன்றுதான் சிந்தாமணி விநாயகர், அற்புதமான சிந்தாமணி என்ற ஆபரணத்தை தரித்தார். அதனால் பக்தர்கள் இவரை வணங்குவதால் மூன்றாம் பிறையை தரிசனம் பெற்ற பலன் கிட்டும். உலகிலுள்ள அனைத்து நவரத்தினங்களின் சக்தியையும் ஈர்க்கும் வல்லமை கொண்டதே, விநாயகர் தரித்துள்ள சிந்தாமணி ஆகும். எனவே, சிந்தாமணி விநாயகரைப் பிரார்த்தனை செய்து நவரத்தினங்களை அணிவதால், லட்சுமி கடாட்ச சக்திகள் கிடைக்கப்பெறும். தங்களையும் அறியாமல் பலரும் நான்காம் பிறையை தரிசனம் செய்து விடுவதுண்டு. நான்காம் பிறையைப் பார்த்தால் வீண் பழி நேரும் என்பார்கள். இவ்வாறு தவறிப் போய் நான்காம் பிறையை தரிசனம் செய்தவர்கள், இந்த சிந்தாமணி விநாயகரை வணங்கலாம்.
கிரிஜாத்மஜ கணபதி
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பார்கள். அந்த வகையில் விநாயகர் குன்றின்மேல் கொலுவிருந்தால், அவர் ‘கிரிஜாத்மஜ கணபதி’ என்ற சிறப்பைப் பெறுவார். மீண்டும் ஒரு பிறவி எடுக்காத உயர் நிலையை அடைய வேண்டும் என்ற எண்ணம் கொண்டோர் வணங்க வேண்டிய இறைவனாக இவர் இருக்கிறார். தாயை குருவாக மதிப்பவர்களுக்கும், தாய் சொல்லைத் தட்டாத பிள்ளைகளுக்கும் இந்த விநாயகரின் அருள் பூரணமாகக் கிடைக்கும்.
விக்னேஸ்வர கணபதி
நற்காரியங்களில் ஏற்படும் இடர்களைக் களைந்து இறுதியில் வெற்றியைத் தரும் விநாயகர்களில் இவர் முதன்மையானவர். அரிஷ்ட யோகங்களில்இருந்து மீள அருள்புரியும் இறைவனாக இந்த விக்னேஸ்வர கணபதி இருக்கிறார்.
Related Tags :
Next Story






