கோடை விடுமுறை முடியப்போகிறது.. திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
கோடை விடுமுறை நாட்களில் திருப்பதியில் பக்தர்களின் வருகை அதிகரித்து, வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அனைத்து அறைகளும் நிரம்பி வழிகின்றன.
திருப்பதி:
உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்கின்றனர். விடுமுறை நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படும். 300 ரூபாய் கட்டணத்தில் சிறப்பு தரிசனம் செய்யும் பக்தர்கள், குறிப்பிட்ட நேரத்தில் தரிசனம் செய்கின்றனர்.
ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாதவர்கள் டைம் ஸ்லாட் முறையில் டோக்கன் பெற்று, சர்வ தரிசன வரிசையில் நேரடியாக வந்து டிக்கெட்களை பெற்று தரிசனம் செய்கின்றனர். ஆனால், இதற்கும் 6 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை ஆகும். டிக்கெட் பெறுவதற்கும், டிக்கெட் பெற்ற பிறகு தரிசனத்திற்கும் காத்திருக்க வேண்டும்.
ஆன்லைனில் முன்பதிவு செய்யாமலும், டைம் ஸ்லாட் டோக்கன் பெறாமலும் நேரடியாக இலவச தரிசனம் செய்ய வருவோர் ஒரு நாள், இரண்டு நாள் என அன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டும்.
அவ்வகையில், இந்த ஆண்டின் கோடை விடுமுறை நாட்களில் பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அனைத்து அறைகளும் நிரம்பி வழிகின்றன. சில நாட்களில், நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் இரண்டு நாட்கள் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் நிலை உள்ளது.
இப்போது கோடை விடுமுறை முடிய உள்ள நிலையில், திருப்பதி திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அறைகள் நிரம்பி, சிலா தோரணம் வரை சுமார் 3 கிமீ. தூரம் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் சுமார் 30 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர். காத்திருக்கும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தேவஸ்தான நிர்வாகம் செய்து கொடுத்து வருகிறது.