வாரம் ஒரு திருமந்திரம்


வாரம் ஒரு திருமந்திரம்
x

திருமந்திரம் நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.

திருமந்திரம் என்னும் சிறப்புமிக்க நூலை இயற்றியவர் திருமூலர். சிவபெருமானின் அடியார்களில் முக்கியமானவராக திகழ்ந்த இவர், மூவாயிரம் பாடல்களுடன் கூடிய திருமந்திர நூலை, சைவ நெறிகளைப் போற்றும் நூல்களுக்கு ஒப்பாக இயற்றியிருக்கிறார். அதில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.

பாடல்:-

கண்காணி இல்லென்று கள்ளம் பலசெய்வார்

கண்காணி இல்லா இடமில்லை காணுங்கால்

கண்காணி யாகக் கலந்தெங்கும் நின்றானைக்

கண்காணி கண்டார் களஒழிந் தாரே.

விளக்கம்:-

இந்த உலகத்தில் நம்மை கண்காணிப்பவர்கள் எவரும் இல்லை என்று அறிந்து தைரியமாக தவறு செய்பவர்களே அதிகம்பேர். ஆனால் உண்மையில் நம்மை கண்காணிக்கும் இறைவன் இல்லாத இடம் என்று எதுவும் கிடையாது.

ஆழ்ந்த விழிப்புணர்வுடன் சற்றே சிந்தித்துப் பார்த்தால், இறைவன் என்னும் கண்காணிப்பாளர் எங்கும் இருப்பதை உணர முடியும்.

அவ்வாறு உணர்ந்த பிறகு, தங்களிடம் இருக்கும் தவறுகளை மனிதர்கள் விட்டுவிடுவார்கள்.


Next Story