விவசாயத்தை செழிப்பாக்கும் ஆனி திருமஞ்சனம்


விவசாயத்தை செழிப்பாக்கும் ஆனி திருமஞ்சனம்
x

‘திருமஞ்சனம்’ என்ற சொல்லுக்கு ‘மங்கல நீராட்டல்’ என்று பொருள். ஆனி திருமஞ்சனம் என்பது ஆனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தில் நடராஜப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேகம் மற்றும் ஆராதனையைக் குறிக்கும்.

உலகை தன் உள்ளங்காலில் சுழல வைக்கும் தத்துவத்தை உணர்த்தும் ஒப்பற்ற உருவமாக நடராஜர் இருக்கிறார். சிவபெருமானின் 64 மூர்த்தி வடிவங்களில் இவர் முக்கியமானவா். அந்த நடராஜர் அருளாட்சி செய்யும் இடங்களில் முதன்மையானது, சிதம்பரம் நடராஜர் ஆலயம். இங்கு நடராஜருக்கு ஆண்டுக்கு 6 முறை அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறுகின்றன. இந்த ஆறு நாட்களில் ஆனி மாதத்தில் வரும் உத்திரமும், மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரையும் சிறப்பு வாய்ந்தவை. ஏனெனில் இந்த இரண்டு நாட்களில் மட்டும்தான், சிதம்பரம் நடராஜருக்கு அதிகாலை நேரத்தில் அபிஷேகம் செய்யப்படும். மற்ற நாட்களில் மாலை நேரத்தில்தான் அபிஷேகம் நடைபெறும்.

மனிதர்களுக்கு ஒரு வருடம் என்பது, தேவர்களுக்கு ஒரு நாள். நமக்கு ஒரு நாளிலே வைகறை, காலை, உச்சி, மாலை, இரவு, அர்த்தஜாமம் ஆகிய ஆறு பொழுதுகள் இருக்கின்றன. அந்த வகையில் தேவர்களின் வைகறைக்குச் சமமானது, மார்கழியில் மாத ஆருத்ரா தரிசனம். மாசி மாத பூர்வ பட்ச சதுர்த்தசி திதியில் வரும் அபிஷேகம் காலை அபிஷேகமாகும். சித்திரை மாதத்தில் திருவோண நட்சத்திரத்தில் வரும் அபிஷேகம் உச்சிகால அபிஷேகம். ஆனி மாத உத்திரத்தில் வரும் அபிஷேகம், மாலை நேரத்திற்குரியது. ஆவணி பூர்வ பட்ச சதுர்த்தசி திதியில் நடைபெறும் அபிஷேகம் இரவு அபிஷேகமாகும். புரட்டாசி மாத பூர்வ பட்ச சதுர்த்தசி திதியில் வரும் அபிஷேகம் அர்த்தஜாம அபிஷேகமாக குறிப்பிடப்படுகிறது.

'திருமஞ்சனம்' என்ற சொல்லுக்கு 'மங்கல நீராட்டல்' என்று பொருள். ஆனி திருமஞ்சனம் என்பது ஆனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தில் நடராஜப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேகம் மற்றும் ஆராதனையைக் குறிக்கும். ஆனி மாத கார்த்திகை நட்சத்திரத்தில் இந்த ஆனி திருமஞ்சன விழா தொடங்குகிறது. முதல் எட்டு நாட்கள் விநாயகர், சுப்பிரமணியர், சோமஸ்கந்தர், சிவானந்த நாயகி, சண்டேஸ்வரர் ஆகியோர் வாகனங்களில் வீதி உலா வருவார்கள். ஒன்பதாம் நாள் தேரோட்டம் நடைபெறும். தேரோட்டத்தில் விநாயகர், சுப்பிரமணியர், நடராஜர், சிவகாமி அம்மை, சண்டேஸ்வரர் ஆகியோர் தனித்தனித் தேர்களில் வலம் வருவார்கள்.

பின் நடராஜர் சிவகாமி அம்மையுடன் யானைகள் தாங்கியது போல் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் இரவில் தங்குவார். 10-ம் நாளான ஆனி உத்திரத்தன்று அதிகாலையில் நடராஜருக்கும், சிவகாமி அம்மைக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். ஆனி உத்திரத்தன்று பகல் 1 மணி அளவில் நடராஜரும் சிவகாமி அம்மையும் நடனம் செய்தபடியே சித்சபையில் எழுந்தருள்வார்கள். நடராஜரும், சிவகாமி அம்மையும் மாறி மாறி நடனம் செய்து, சிற்றம்பல மேடையில் எழுந்தருளும் நிகழ்ச்சியைக் காண மக்கள் பெருந்திரளாகக் கூடியிருப்பர். நடராஜ பெருமானுக்கு பிரதோஷ வேளையில் சிறப்பு அபிஷேகமும், அதனைத் தொடர்ந்து அலங்காரமும் நடைபெறும். இந்த நிகழ்வையே 'ஆனித் திருமஞ்சனம்' என்கிறோம்.

இந்த நிகழ்ச்சியின்போது நடராஜ ருக்கு பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், நெய், சந்தனம், இளநீர் உள்பட 16 வகையான குளிர்ச்சி மிகுந்த பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்விக்கப்படுகிறது. ஆனி மாத உத்திர நட்சத்திர நாளில் தேவர்கள், ஆடலரசனுக்குப் பூஜைகள் செய்வதாக சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. அந்த நன்னாளே ஆனித் திருமஞ்சனத் திருவிழா. ஈசனின் திருநட்சத்திரம் திருவாதிரை. மிக உஷ்ணமான நட்சத்திரம் இது. தவிர, ஆலகாலம் உண்ட நீலகண்டன் அல்லவா ஈசன். சாம்பல் தரித்தவன். அக்னியை ஏந்திக் கொண்டிருப்பவன். ஆக மொத்தம் உஷ்ணாதிக்கத்துடன் இருப்பவன். எனவே, அவனுக்குக் குளிரக் குளிர அபிஷேகம் செய்யச் சொல்கிறது ஆகம விதி. இதனால்தான் சிவபெருமானை 'அபிஷேகப் பிரியன்' என்றும் அழைக்கிறோம்.

நடராஜருக்கு காலையில் அபிஷேக ஆராதனை நடைபெற்று முடிந்ததும், இரவு மீண்டும் சித்சபையில் கடாபிஷேகம் நடைபெறும். ஆனித்திருமஞ்சன நிகழ்ச்சியை பதஞ்சலி முனிவர் ஆரம்பித்து வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிகழ்ச்சியின்போது, சிதம்பரம் ஆலயத்தில் உள்ள மூலவர் நடராஜரே வீதி உலா வருவது சிறப்பு வாய்ந்ததாகும். விரதம் இருந்து ஆனித் திருமஞ்சன தரிசனத்தைக் காண்பதால் பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருப்பார்கள். தம்பதிகளுக்கு சுகமான வாழ்வு கிடைக்கும். கன்னிப் பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும். ஆண்களுக்கு மனதில் தைரியமும், உடல் பலமும், செல்வ வளமும் கூடும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. நாடெல்லாம் நல்ல மழை பெய்து விவசாயம் சிறக்கவும் இந்த விழா நடத்தப்படுகிறது.

சிதம்பரத்தில் 'பஞ்ச சபை'

நடராஜர் நடனம் புரிந்த ஐந்து திருத்தலங்கள், 'பஞ்ச சபைகள்' என்று அழைக்கப்படுகின்றன. ஆனால் சிதம்பரம் நடராஜர் ஆலயத்திலேயே பஞ்ச சபைகள் இருக்கின்றன. சிற்றம் பலம், பொன்னம்பலம், பேரம்பலம், நிருத்தசபை, ராஜசபை என்று அழைக்கப்படும் அவற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

சிற்றம்பலம்:- நடராஜர் ஆடும் சித்சபையைத்தான் 'சிற்றம்பலம்' என்கிறோம். இங்கு நடராஜர் ஆடும் நடனத்தை, சிவகாமி அம்மை எப்போதும் கண்டு ரசித்தபடி இருக்கிறார். இதற்கு 'தப்ர சபா' என்ற பெயரும் உண்டு. இந்த சபைக்கு இரண்யவர்மன் என்ற மன்னன் பொன் கூரை வேய்ந்தான். இங்குள்ள படிகள் பஞ்சாட்சர படிகள் என்றும், நமசிவாய படிகள் என்றும் போற்றப்படுகின்றன.

பொன்னம்பலம்:- சிற்றம்பலத்திற்கு முன்பாக உள்ளது, இந்த பொன்னம்பலம். இதனை 'கனகசபை' என்றும் அழைப்பர். இங்குதான் நடராஜருக்கு அபிஷேகம் நடத்தப்படும். இங்குள்ள ஸ்படிக லிங்கத்திற்கு தினமும் ஆறு கால பூஜையும், ரத்தினசபாபதிக்கு அபிஷேகமும் நடைபெறும்.

பேரம்பலம்:- இந்த இடத்திற்கு 'தேவசபை' என்றும் பெயர். விநாயகர், முருகர், நடராஜர், சிவகாமி அம்மை, சண்டிகேஸ்வரர் ஆகியோர் எழுந்தருளும் சபை இதுவாகும். இந்த சபைக்கு, மூன்றாம் குலோத்துங்கன் என்ற மன்னன் பொன் கூரை வேய்ந்துள்ளான்.

நிருத்தசபை:- இது நடராஜருக்குரிய கொடிமரத்தின் தெற்கே அமைந்திருக்கிறது. இங்கு நடராஜர், ஊர்த்துவ தாண்டவ கோலத்தில் காட்சியளிக்கிறார்.

ராஜசபை:- சிதம்பரம் ஆலயத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபம்தான், ராஜ சபை ஆகும். ஆனி மற்றும் மார்கழி மாதத்தில் நடக்கும் விழாவில், தேரில் பவனி வரும் நடராஜர், இந்த ராஜசபைக்கு எழுந்தருள்வார். ஆருத்ரா தரிசனம் இங்குதான் நடைபெறும். அப்போது சிவகாமியம்மன் முன்பாக நடராஜர் முன்னும், பின்னுமாக நடனமாடி தரிசனம் தருவார். இதற்கு 'அனுக்கிரக தரிசனம்' என்று பெயர்.


Next Story