திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் வரலாறு


திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் வரலாறு
x
தினத்தந்தி 25 Jan 2024 6:25 AM GMT (Updated: 21 Feb 2024 12:38 PM GMT)

மனிதர்களுக்கு பல துன்பங்களை தந்து அவற்றை சுமக்கச் செய்து வாழ்க்கை என்பது இனிப்பும், கசப்பும் கலந்தது என்பதை உணர்த்துவது சனீஸ்வர பகவானின் கடமை.

பிரம்மன், விஷ்ணு முதலானவர்களாகிய தேவர் களாலும், தேவாரப் பண்ணிசையால் பாமாலை சாற்றிய நால்வர்களாலும் பாடல்பெற்ற திருத்தலம் திருநள்ளாறு. புராண காலத்தில் படைப்புத் தொழிலால் செருக்கை அடைந்த பிரம்மா, சிவபெருமானால் தண்டிக்கப்பட்டு சிருஷ்டி தொழிலை இழந்தார். அதனை தொடர்ந்து சிவபெருமானை வேண்டி பூஜை செய்ய பிரம்மன் வந்த இடம் தர்பாரண்யம் என்ற இந்த இடமாகும். அந்தணர் மரபுகளின்படி தர்ப்பைகளால் ஆன கூர்ச்சத்தில் சிவபெருமானை ஆவாஹணம் செய்து பிரம்மா பூஜைகள் செய்தார். அந்த கூர்ச்சம் வைத்த இடத்திலேயே பிரம்மாவுடைய பக்திக்கு இறங்கிய சிவபெருமான் கூர்ச்சத்தின் அடியில் சுயம்பு மூர்த்தியாக தோன்றினார். பிரம்மனுக்கு விரும்பிய வரத்தை கொடுத்து சிருஷ்டி கர்த்தாவாக அவரை மீண்டும் நியமித்தார். பிரம்மனோடு கூட அவர் நாவில் குடியிருக்கும் நாமகளாகிய சரஸ்வதியும் சிவபூஜைகள் செய்து நலம் பல பெற்றாள். பிரம்மனின் வாகனமாகிய அன்னப்பறவையும் சிவபூஜைகளை செய்து சிறப்புகளை அடைந்தது. இவர்களின் பெயரால் 'பிரம்மதீர்த்தம்', 'சரஸ்வதி தீர்த்தம்', 'ஹம்ஸ தீர்த்தம்' என்று மூன்று தீர்த்தங்கள் இன்றும் விளங்குகின்றன.

திருநள்ளாறு திருத்தல சிறப்புகள்

நளச்சக்கரவர்த்தி இங்கு சிவபெருமானை தரிசனம் செய்த உடனேயே சனிபகவானால் உண்டான துன்பங்கள் நீங்கி மன அமைதி அடைந்து பேரானந்தம் அடைந்தான். தஞ்சையை ஆண்ட சரபோஜி மகாராஜாவின் காலத்தில் இக்கோவில் திருப்பணி அரசு கஜானாவில் நிதி இல்லாமல் தடைபட்டது. அப்பொழுது இங்குள்ள ஆதி கணபதி சன்னதியில் சொர்ண கணபதியின் சிலை ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அள்ள அள்ளக் குறையாத வகையில் கஜானாவில் தங்கம் சேர்ந்து, திருப்பணி தடங்கலின்றி செய்து முடிக்கப்பட்டது. கோவில் திருப்பணிக்கு சொர்ணம் கொடுத்ததால் இங்குள்ள விநாயகருக்கு 'சொர்ணகணபதி' என்று பெயர் வந்தது. கோவிலின் கன்னி மூலையில் உள்ள சன்னதியில் சொர்ணகணபதி வேண்டுவோர்க்கு வேண்டிய வரம் தரும் கற்பக கணபதியாக இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அதுபோன்று வள்ளி-தெய்வானையுடன் சுப்ரமணியசுவாமி, மயில் வாகனத்தில் அமர்ந்து கையில் ஞானப்பழத்துடன் திருக்கல்யாண கோலத்தில் கல்யாண சுப்ரமணிய மூர்த்தியாக விளங்கி வருகிறார்.

இத்தலத்தில் உள்ள முருகனுக்கு அருணகிரி நாதரால் பாடப்பட்ட அழகான திருப்புகழ் ஒன்றும் உள்ளது. மேலும், இந்த இறைவன் சன்னதிக்கு சமயக்குரவர்களாகிய நால்வரும் வந்து வழிபட்டுள்ளனர். அதுமட்டுமின்றி இத்தலமானது சப்தவிடங்கத் தலங்கள் ஏழினுள் ஒன்றாகவும் விளங்குகிறது. இறைவன் சன்னதிக்கு தென்பகுதியில் நீலோத்பலாம்பாள் நகவிடங்க செண்பகத் தியாகராஜர் சன்னதி அருள் நிலையோடு விளங்குகிறது. இங்குள்ள செண்பகத்தியாகராசரை வழிபட்டு இச்சன்னதியில் உள்ள மரகதலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து பால், பழம் மற்றும் சந்தனம் இவற்றை பிரசாதமாக உண்டு வந்தால் எல்லா பிணிகளும் நீங்கி, உடல் வனப்பும், வலிமையும் பெற்று புத்திரப்பேறு உருவாகும்.

இங்குள்ள அம்பாள் சன்னதிக்கு பல்வேறு சிறப்புகள் உள்ளன. லலிதா சகஸ்ரநாமத்தில் பிராணேஸ்வரி, பிராணதாத்ரீ, பஞ்சாஸத்பீடரூபிணி என்று கூறியபடி அருள் பொழியும் அம்பாளுக்கு பிராணேஸ்வரி, பிராணநாயகி, பிரணாம்பிகை என்ற பெயர்கள் உண்டு. இத்தலம் சக்தி பீடங்கள் ஐம்பதில் அம்பாளின் உயிர் நிலையான பிராணேஸ்வரி பீடமாகும். பிராணேஸ்வரி என்றும், தமிழில் போகமார்த்த பூண்முலையாள் என்றும் சிறப்பு பெயர்கள் உண்டு. அம்பாளை தரிசிப்பவர்களுக்கு லட்சுமி கடாட்சம் ஏற்படும். கல்வி ஞானங்களில் சிறந்து விளங்குவார்கள்.

கோவிலின் இரண்டாவது கோபுர வாயிலின் வலது புறமாக சனிபகவான் சன்னதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. பொதுவாக சனிபகவான் சன்னதி மேற்கு நோக்கியே இருக்கும். ஆனால் இங்குள்ள கோவிலில் மட்டுமே சனிபகவானுக்கு கிழக்கு நோக்கி சன்னதி உள்ளது. உக்ரமூர்த்தியாகிய சனிபகவான் அங்கு அனுக்கிரக மூர்த்தியாக உள்ளார்.

மூர்த்தி, தீர்த்தம், திருத்தலம்

நளச்சக்கரவர்த்தியை துன்புறுத்திக்கொண்டிருந்த சனி பகவான், நளச்சக்கரவர்த்தி இந்த கோவிலுக்கு வந்து தர்பாரண்யேஸ்வரரை வணங்கி தரிசித்த உடன் அவரை விட்டு விலகி விடுகிறார். அப்பொழுது என்னைப் போன்று இங்கு வந்து வணங்கும் பக்தர்களுக்கு சனிபகவான் அருள் புரிந்து அவர்களது துன்பங்களை எல்லாம் நீக்கி, நன்மைகளை செய்ய வேண்டும். இத்தலத்தின் ஒருகாத விஸ்தீரணத்திற்கு சனி பகவான் அனுக்கிரக பார்வை உடையவராக இங்குள்ளவர்களுக்கு நன்மை அளிக்க வேண்டும். மேலும், இப்பகுதிக்கு இன்று முதல் மூர்த்தி, தீர்த்தம், திருத்தலம் ஆகிய மூன்றும் என்பெயரில் விளங்கிட வேண்டும் என்று நளச்சக்கரவர்த்தி சுவாமியிடம் மூன்று வரங்களைக் கேட்டார். அதனை இறைவனும், சனிபகவானும் ஏற்றுக் கொண்டு அருள்புரிந்தனர். சுவாமியின் அருளாணையின்படி ஈஸ்வர பட்டத்துடன் சனிபகவான் சனீஸ்வர பகவானாக பக்தர்களுக்கு அருள் புரிந்து வருகிறார். நளனுக்கு விமோசனம் அளித்ததால் இறைவனுக்கு நளேஸ்வரர் என்றும், திருக்குளத்திற்கு நளதீர்த்தம் என்றும், இந்த ஊருக்கு திருநள்ளாறு என்றும் பெயர் வந்தது.

சனிபகவான்

விதி வலியது. பூர்வஜென்மத்தில் செய்த நல்வினை, தீவினைகளுக்கு ஏற்ப மனிதர்களாகிய நாம் இப்பிறவியை எடுத்துள்ளோம். ஆணவம் தலையெடுக்கும்போது எல்லாம் சாட்டையடி கொடுத்து நம்மை சமநிலைக்கு நெறிப்படுத்தவும், பூர்வஜென்மங்களில் செய்த பாவங்களுக்கேற்ற தண்டனைகளை அவ்வப்போது தந்து தவறை குறைத்துக் கொள்ளவும், தறிவிட்டு, நெறிகெட்டு ஓடும் குதிரைக்கு கடிவாளம் போன்று அமைந்து நவக்கிரக நாயகர்களில் சனிபகவான் நம்மை இழுத்து பிடித்து வழிபடுத்துகிறார். தண்டனை தரும்போது தன்பிள்ளை, மாற்றான்பிள்ளை என்ற தயவு தாட்சண்யம் எல்லாம் அவரிடம் இல்லை. அவருடைய நேர்பார்வை பட்டால் மூவர்களும், தேவர்களும் கூட பாதிக்கப்படுவார்கள். எனவே கண்களை கட்டிக் கொண்டு நியாய, அநியாயங்களை உள்ளத்தால் எடை போட்டு தீர்ப்பு வழங்கும் நடுநாயகமாக, விதிமன்றத்தின் நீதிபதியாக அவர் விளங்குகிறார். ஒருவரது ஆயுளை நிர்ணயிப்பவர் அவரே. மனிதர்களுக்கு பல துன்பங்களை தந்து அவற்றை சுமக்கச் செய்து வாழ்க்கை என்பது இனிப்பும், கசப்பும் கலந்தது என்பதை உணர்த்துவது அவரது கடமை.

கோட்சாரத்தில் சனிபகவான் ஜனனராசிக்கு 4-ல் சஞ்சரிக்கும்போது 'அர்த்தாஷ்டமசனி' எனப்படுகிறது. 7-ல் சஞ்சரிக்கும்போது 'கண்டசனி' பற்றிக் கொள்கிறது. 8-ல் சஞ்சரிக்கும்போது 'அஷ்டமச்சனி' ஆகிறது. ஒரு ஜாதகத்தில் இத்தகைய சூழ்நிலை அமையும் போது எல்லாம் ஜாதகர் படும் கஷ்டம், அதனை அனுபவித்து பார்த்தவர்கள் நன்கு அறிவார்கள். அனைத்திற்கும் உச்சகட்ட சோதனையாக ஜனன ராசிக்கு 12.1.2-ல் சஞ்சரிக்கும் காலம் 'ஏழரைச்சனி' என்று அழைக்கப்படுகிறது. இந்தக்காலத்தில் (ஏழரை ஆண்டுகள்) பட்டது போதும், இனிமேல் பட முடியாது என்று இறைவனிடம் சரணாகதி அடையும் பக்குவத்தை சனிபகவான் தருகிறார். வாழ் நாள் முழுவதும் பெறும் இன்பங்கள் எல்லாம் இந்த ஏழரைச்சனி காலத்தில் அனுபவிக்கும் துன்பங்களுக்கு முன்பு தூசுக்கு சமமாகும். நவக்கிரகங்களில் 'ஈஸ்வரன்' என்ற பட்டத்தை சனிபகவானே பெற்றுள்ளார். தன்னை வழிபடுவதன் மூலம் அதுவரை சோதித்து வந்த மனிதனை ஆட்கொண்டு அவனுக்கு அள்ளி வழங்கவும் அவர் தவறுவதில்லை. கெடுப்பதும் அவரே, அள்ளிக் கொடுப்பதும் அவரே.

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து 6 கி.மீ. தொலைவில் இத்திருத்தலம் அமைந்துள்ளது.


Next Story