திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்
உகாதி திருநாளுக்கு முதல் அமைந்த செவ்வாய்க்கிழமையான இன்று காலை 6:00 மணிக்கு துவங்கி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்தப்பட்டது.
வரும் 9 ஆம் தேதி தெலுங்கு வருடப்பிறப்பான உகாதி திருநாள் ஆகும். உகாதியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது . யுகாதி, வருடாந்திர பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி, ஆணிவார ஆஸ்தானம் ஆகியவற்றுக்கு முன் வரும் செவ்வாய்க்கிழமை அன்று கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் என்ற பெயரில் ஏழுமலையான் கோவிலை முழுமையாக கழுவி சுத்தம் செய்து சுவர்களுக்கு நறுமனை கலவை தெளிப்பது வழக்கம்.
எனவே இந்த ஆண்டு உகாதி திருநாளுக்கு முதல் அமைந்த செவ்வாய்க்கிழமையான இன்று காலை 6:00 மணிக்கு துவங்கி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அப்போது தேவஸ்தான அறங்காவலர் குழுவினர், நிர்வாக அதிகாரி, ஊழியர்கள் ஆகியோர் கோவில் கருவறை துவங்கி அனைத்து பகுதிகளையும் கழுவி சுத்தம் செய்தனர்.
மேலும் பூஜை பாத்திரங்கள், பிரசாத தயாரிப்பு பாத்திரங்கள் ஆகியவை உள்ளிட்ட அனைத்தும் கழுவி சுத்தம் செய்யப்பட்டன. இதனைத்தொடர்ந்து கோவில் சுவர்களுக்கு பச்சைக் கற்பூரம், ஜவ்வாது, நாமக்கட்டி, குங்குமம் ஆகியவை உள்ளிட்ட திரவியங்கள் கலந்த நறுமண கலவை தெளிக்கப்பட்டது. அதன்பின் கோவில் ஜீயர்கள் ஏழுமலையானுக்கு புதிய பட்டு வஸ்திரம் சமர்ப்பித்தனர். அதனைத்தொடர்ந்து இன்று காலை பத்தரை மணிக்கு மேல் பக்தர்கள் ஏழுமலையான் வழிபட்டனர்.