மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை காண அதிகாலையிலேயே குவிந்த பக்தர்கள்


மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை காண அதிகாலையிலேயே குவிந்த பக்தர்கள்
x
தினத்தந்தி 21 April 2024 7:11 AM IST (Updated: 21 April 2024 5:55 PM IST)
t-max-icont-min-icon

மதுரை மாநகர் முழுவதும் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்திற்காக விழாக்கோலத்துடனும், களைகட்டியும் காணப்படுகிறது.

மதுரை,

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்றுவரும் உலகப்புகழ் பெற்ற சித்திரை திருவிழா கடந்த 12-ந் தேதி தொடங்கியது. விழாவில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி அம்மனின் பட்டாபிஷேகம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. அப்போது மதுரையின் அரசியாக மீனாட்சிக்கு முடிசூட்டப்பட்டது. நேற்று காலையில் சப்பரத்தில் சுவாமி, அம்மன் வீதி உலா நடந்தது.

சித்திரை திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோவிலில் உள்ள வடக்கு-மேற்கு ஆடி வீதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலையில் கோலாகலமாக நடக்க இருக்கிறது. இதற்காக திருமண மண்டபம் மற்றும் பழைய கல்யாண மண்டபம் சுமார் ரூ.30 லட்சம் மதிப்பில் ஊட்டி, பெங்களூரு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட 10 டன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.



மீனாட்சி அம்மனுக்கு மங்கல நாண் சூட்டும்போது வண்ண மலர்கள் கொட்டும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் ரிஷப லக்னத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடக்கிறது.

திருக்கல்யாணத்தை காண்பதற்காக மதுரையில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். மதுரை மாநகர் முழுவதும் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்திற்காக விழாக்கோலத்துடனும், களைகட்டியும் காணப்படுகிறது. நாளை மாசி வீதிகளில் தேரோட்டம் விமரிசையாக நடக்க இருக்கிறது.

1 More update

Next Story