தீமைகளை அகற்றும் தீபாவளி


தீமைகளை அகற்றும் தீபாவளி
x

பஞ்சபூதங்களால் ஆன நமது உடலின் உள்ளே புகுந்து, தீயவற்றை விலக்கி, நமக்கு இறைவன் அருள்பாலிப்பதை உணர்த்துகிறது.

மகாவிஷ்ணு கடலுக்கு அடியில் இரண்யாசுரன் என்ற அசுரனால், மறைத்து வைக்கப்பட்ட பூமியை மீட்பதற்காக வராக அவதாரம் எடுத்தார். அவனை அழித்து பூமியை தன்னுடைய இரு கொம்புகளுக்கு இடையில் வைத்து தூக்கி வந்தார். அசுரனை அழித்த உக்கிரத்துடன் இருந்த வராகருக்கும், பூமாதேவிக்கும் பிறந்த மகனே 'நரகாசுரன்'. அவன் கடும் தவம் புரிந்து பிரம்மாவிடம் இருந்து வரம் பெற்றான். 'தன் தாயாலேயே அழிவு வரவேண்டும்' என்று கேட்டதால், தனக்கு சாவே இல்லை என்று நரகாசுரன் நம்பினான்.

ஆனால் மகாவிஷ்ணு கிருஷ்ணராக அவதரித்த போது, பூமாதேவி சத்யபாமாவாக அவதரித்தார். இந்த நிலையில் பிரம்மனிடம் இருந்து வரத்தைப் பெற்ற நரகாசுரன், மூவுலகங்களையும் ஆட்டிப்படைக்கத் தொடங்கினான். அவன் அசாமில் உள்ள பிரக்ஜோதிஷபுரம் என்ற இடத்தை தலைமையிடமாகக் கொண்டு தன்னுடைய ராஜ்ஜியத்தை நடத்தி வந்தான். அவனது துன்பத்தால் துவண்டு போன தேவர்களும், முனிவர்களும், மக்களும், கிருஷ்ணரிடம் தங்களின் குறைகளை போக்கும்படி வேண்டினர்.

அவர்களுக்கு உதவ நிைனத்த கிருஷ்ணர், சத்யபாமாவையும் உடன் அழைத்துக் கொண்டு, நரகாசுரன் ஆட்சி செய்த இடத்திற்குச் சென்றார். அவனது ராஜ்ஜியத்தின் காவலாக இருந்த கிரி துர்க்கம், அக்னி துர்க்கம், ஜல துர்க்கம், வாயு துர்க்கம் என்னும் கோட்டைகளை அழித்து நகருக்குள் நுழைந்தார். போருக்கான சங்கை முழங்கினார். சங்கொலி கேட்டு கோட்டையில் இருந்து வெளியே வந்த நரகாசுரன், தன் சாம்ராஜ்ஜியத்திற்குள் நுழைந்த கிருஷ்ணனை கண்டு ஆத்திரமடைந்தான். அவருடன் போரிட்டான். அப்போது நரகாசுரன் எய்த அம்பு ஒன்றால் தாக்கப்பட்டது போல நடித்து, தேரில் சாய்ந்து விழுந்தார் கிருஷ்ணர்.

இதனால் ஆத்திரம் அடைந்த சத்யபாமா தன்னுடைய கணவருக்காக, நரகாசுரனுடன் போரிட்டு அவனை வதம் செய்தாள். நரகாசுரன் பெற்ற வரத்தின்படியே, தன் தாயின் கரத்தாலேயே அழிவை சந்தித்தான்.

இந்தக் கதையில் 4 கோட்டைகளை உடைத்தெறிந்து, 5-வது கட்டமாக நரகாசுரனின் நகருக்குள் கிருஷ்ணன் நுழைந்ததாக சொல்லப்பட்டுள்ளது. இது பஞ்சபூதங்களால் ஆன நமது உடலின் உள்ளே புகுந்து, தீயவற்றை விலக்கி, நமக்கு இறைவன் அருள்பாலிப்பதை உணர்த்துகிறது. இதில் 'கிரி துர்க்கம்' நிலத்தையும், 'அக்னி துர்க்கம்' நெருப்பையும், 'ஜல துர்க்கம்' நீரையும், 'வாயு துர்க்கம்' காற்றையும் குறிப்பதாகும். பஞ்ச பூதங்களில் 4 இங்கு கூறப்பட்டுள்ளதால் 5-வதான ஆகாயமும் சேர்ந்தே வரும்.


Next Story