திருநங்கைகளின் குல தெய்வமான கூவாகம் கூத்தாண்டவர்


திருநங்கைகளின் குல தெய்வமான கூவாகம் கூத்தாண்டவர்
x

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா கூவாகம் கிராமத்தில் உள்ளது, கூத்தாண்டவர் கோவில். திருநங்கைகள், இக்கோவிலில் உள்ள கூத்தாண்டவரை தங்களின் குலதெய்வமாக கருதி வழிபட்டு வருகின்றனர்.

இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாத பவுர்ணமியையொட்டி சித்திரை பெருவிழா 18 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும்.

கூத்தாண்டவர் வரலாறு

ஒரு திருநங்கையின் வாழ்வில் மிக முக்கியமான தருணம் அல்லது நிகழ்வு என்றால், அது கூத்தாண்டவர் திருவிழாதான். அந்தளவிற்கு திருநங்கைகளின் உணர்வோடு பின்னிப் பிணைந்த ஒரு சமுதாய சடங்கு அது. திருநங்கைகளின் சமூகத்திற்கென்றே தனித்துவ அடையாளமாக விளங்கும் இத்திருவிழா, ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் பவுர்ணமி நாளன்று கொண்டாடப்படுகிறது. இந்த விழாவிற்கென்று ஒரு வரலாறு உண்டு.

மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் போர் மூண்டது. அந்தப் போரில் பாண்டவர்கள் வெற்றி பெற வேண்டுமானால், போருக்கு முன்பாக யுத்த தேவதையை திருப்திப்படுத்த களப்பலி கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதற்கு 32 சாமுத்திரிகா லட்சணம் பொருந்திய ஆண் மகன் வேண்டும். இதற்கு தகுதியானவர்களாக இருந்தவர்கள் அர்ச்சுனன், கிருஷ்ணன் மற்றும் அர்ச்சுனனுக்கும், நாகக்கன்னிக்கும் பிறந்த அரவான் ஆகியோர் மட்டுமே.

அர்ச்சுனனும், கிருஷ்ணனும்தான் இந்த போருக்கு முக்கியமானவர்கள். அவர்கள் இருவரையும் இழக்க முடியாது என்பதால், அரவானை பலியாக்க முடிவு செய்யப்பட்டது. அர்ச்சுனனும், கிருஷ்ணனும் அரவானிடம் இதுபற்றி பேசினர். அரவானும் சம்மதம் தெரிவித்தார். ஆனால் ஒரே ஒரு நிபந்தனையும் விதித்தார். அதாவது, "என் இறுதி ஆசையாக திருமண வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும். அதன் பின்னரே பலிக்களம் புகுவேன்" எனக்கூறுகிறார். ஆனால் அரவானை கணவனாக ஏற்க, வேந்தர் குலம் முதல் வேடுவர் குலம் வரை எந்தவொரு பெண்ணும் முன்வரவில்லை. விடிந்தால் பலியாகப்போகும் ஒருவனை மணக்க எந்த பெண்தான் சம்மதிப்பாள்.

இப்படிப்பட்ட சூழலில் கிருஷ்ணரே, மோகினி அவதாரம் எடுத்து அரவானை மணந்துகொண்டார். ஓர் இரவு இல்லற வாழ்விற்கு பிறகு மறுநாள், அரவான் களப்பலி கொடுக்கப்பட்டார். அதன் பிறகு அரவானை மணமுடித்த மோகினி, விதவைக்கோலம் பூணுகிறாள். இதுதான் அரவான் எனப்படும் கூத்தாண்டவரின் வரலாறு. இந்த கதையின் அடிப்படையில் தங்களை கிருஷ்ணரின் அவதாரமான மோகினியாக உணரும் திருநங்கைகள், திரளாக கூடி கொண்டாடும் விழாவாக கூவாகம் கூத்தாண்டவர் திருவிழா இருக்கிறது. இதனாலேயே இக்கோவிலை திருநங்கைகள், தங்களின் குல தெய்வமாக கருதுகின்றனர்.

ஆண்டுதோறும் அரவானை வழிபட புதுடெல்லி, மும்பை, கொல்கத்தா, கேரளா, பெங்களூரு உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான திருநங்கைகள், கூவாகம் கூத்தாண்டவர் கோவிலுக்கு வந்து கூடுவார்கள். அரவான் களப்பலியை நினைவு படுத்தும் விதமாக இரவு சுவாமி கண் திறத்தல் நிகழ்ச்சி நடக்கும். 18 நாள் திருவிழாவில், இது முக்கியமான நிகழ்வு. இதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருநங்கைகள் கூவாகம் கூத்தாண்டவர் கோவிலுக்கு வந்து குவிவார்கள். பின்னர் கோவில் வாசலில் அனைத்து திருநங்கைகளும் தங்களை புதுமணப் பெண்கள்போல் ஆடை அணிகலன்களால் அலங்கரித்துக்கொள்வர். கை நிறைய வளையல், தலைநிறைய பூ சூடி திருநங்கைகள், கோவிலின் பூசாரி கையால் தாலி கட்டிக்கொள்வார்கள். பிறகு தங்கள் கணவனான அரவானை நினைத்து பொங்கல் வைத்து வழிபடுவார்கள். தொடர்ந்து, அன்று இரவு முழுவதும் அவர்கள் கும்மியடித்து ஆட்டமும், பாட்டமுமாக மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

மறுநாள் பொழுது விடிந்ததும், கோவிலில் உள்ள அரவான் சிரசுக்கு முதல் மாலை அணிவிக்கப்படும். அதனை தொடர்ந்து ஊர்வலமாக அரவான் சிரசு எடுத்து வரப்படும். அப்போது திருநங்கைகள், சுற்றி நின்று கும்மியடித்து ஆடிப்பாடி மகிழ்வார்கள். 108 தேங்காய், ஆயிரத்து எட்டு தேங்காய் என சூரைத் தேங்காய் அடிப்பார்கள். இதற்கிடையே கோவிலின் வடபுறத்தில் சகடையில் 30 அடி உயர கம்பம் நட்டு, வைக்கோல் புரி சுற்றப்படும். இது அரவான் திருவுருவம் அமைக்க அடிப்படை பணியாகும்.

பின்னர் கீரிமேட்டில் இருந்து மக்கள் பூஜை செய்து அரவானின் புஜங்கள், மார்பு பதக்கம் எடுத்து வருவார்கள். சிவலியாங்குளம் கிராமத்தில் இருந்து அரசிலை, விண்குடை கொண்டு வரப்படும். நத்தம் கிராமத்தில் இருந்து பாதம், கைகள், புஜங்கள் எடுத்து வருவார்கள். தொட்டி கிராமத்திலிருந்து மார்பு புஜங்கள், கயிறு, கடையாணி கொண்டு வருவார்கள். இவை அனைத்தையும் வைக்கோல் புரி மீது பொருத்தி அரவான் திருவுருவம் அமைக்கப்படும். அதன் பின் தேரோட்டம் நடக்கும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வேண்டுதலின்பேரில் தேரை வடம்பிடித்து இழுப்பார்கள். தேர் புறப்பட்டவுடன் விவசாயிகள் வேண்டுதலின்பேரில் விளைந்த காய்கறிகளையும், தானியங்களையும் அரவான் மீது வீசி கற்பூரம் ஏற்றி பயபக்தியுடன் வணங்குவார்கள்.

அது மட்டுமின்றி 20 அடி நீள பூமாலைகளையும், வள்ளவாட்டுகளையும் (நீண்ட துண்டுகள்) அரவான் மீது வீசி பயபக்தியுடன் வணங்குவார்கள். திருநங்கைகளும், பக்தர்களும் பூக்களை பந்துகளாக செய்தும், நீண்ட மாலைகளையும் அரவான் மீது வீசுவார்கள். அவ்வாறு வீசிய மலர்களால் வைக்கோல் புரி மறைக்கப்படும். தேர் ஊர்வலமாக வரும்போது திருநங்கைகள் குவியல், குவியலாக கற்பூரம் ஏற்றி சுற்றி வந்து கும்மியடித்து பாட்டுப்பாடி மகிழ்வார்கள். இவ்வாறு கும்மியடித்து பாடுவது காதுக்கு இனிமை சேர்க்கும். தேர் ஊர்வலம் புறப்பட்டு வந்த பின்னர், தேர் அழிகளம் நோக்கி புறப்படும். அப்போது புதுமணப் பெண்கள்போல் தங்களை ஆடை, அணிகலன்களால் அலங்கரித்துக்கொண்டு கூத்தும், கும்மாளமுமாக இருந்த திருநங்கைகள், தேர் அழிகளம் புறப்பட்டவுடன் சோகமயமாய் உணர்ச்சி வசப்பட்டு ஒப்பாரி வைத்து அழ ஆரம்பித்து விடுவார்கள். வாயிலும், வயிற்றிலும் அடித்துக்கொண்டபடி தேரை பின் தொடருவார்கள். அங்கு அரவானை களப்பலி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கும். அப்போது திருநங்கைகள், தங்கள் தலையில் சூடியிருந்த பூக்களை பிய்த்து எறிவார்கள். நெற்றியில் உள்ள குங்கும பொட்டை அழிப்பார்கள். பூசாரிகள், திருநங்கைகளின் கையிலிருக்கும் வளையல்களை உடைத்து நொறுக்கி கழுத்தில் அணிந்திருக்கும் தாலிகளை அறுத்தெறிவார்கள். தங்கத்தாலிகளை திருநங்கைகள், அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கொடுப்பார்கள்.அப்போது திருநங்கைகள் அழுது புலம்பி ஒப்பாரி வைப்பது உருகாத நெஞ்சத்தையும் உருக்கும். சொந்த கணவன்மார்களை இழந்தவர்கள்கூட இவ்வளவு உணர்வுப்பூர்வமாக அழுவார்களா? என ஐயப்படும்படியாக இருக்கும். பின்னர் திருநங்கைகள் அனைவரும், அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு சென்று தலைமூழ்கி வெள்ளாடை அணிந்து விதவைக்கோலம் பூண்டு சோகமயமாக தங்கள் சொந்த ஊருக்கு புறப்படுவார்கள்.

உறுமை சோறு

கூவாகம் கிராமத்தில் பந்தலடி தெய்வநாயகம் செட்டியார் தோப்பில் பலி சாதம் படைக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இதில் உப்பு, புளி, மிளகாய் எல்லாம் ஒன்றாக சேர்த்து சமைத்த உணவு படைக்கப்படும். இதனை 'உறுமை சோறு' என்பார்கள். இந்த உறுமை சோறு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதனை வாங்கி சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை மக்களிடையே ஆண்டாண்டு காலமாக இருந்து வருகிறது. எனவே மக்கள் முண்டியடித்துக்கொண்டு இந்த உறுமை சோறு வாங்கிச் சாப்பிடுவார்கள்.

வேண்டுதல் நிறைவேற தாலி கட்டிக்கொள்ளும் பக்தர்கள்

கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் நடக்கும் சித்திரை திருவிழாவில் கலந்துகொள்ளும் திருமணம் ஆகாத ஆண் மற்றும் பெண் பக்தர்கள், தங்களுக்கு திருமணமாக வேண்டும் என்றும், குழந்தை இல்லாதவர்கள் தங்களுக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் என்றும் கூத்தாண்டவரிடம் மனமுருக வேண்டிக்கொள்வார்கள். இந்த வேண்டுதல் நிறைவேறியதும் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் சித்திரை திருவிழாவின்போது இக்கோவிலுக்கு வந்து திருநங்கைகளைப்போல் கோவில் பூசாரி கையினால் தாலி கட்டிக்கொள்வார்கள். பின்னர் மறுநாள் அரவான் களப்பலிக்கு பிறகு திருநங்கைகளைப்போல் மற்ற பக்தர்களும் தாலியை, பூசாரி கையால் அறுத்துக்கொண்டு தங்களது வேண்டுதலை நிறைவேற்றிக்கொள்வது இங்கு சடங்காக இருந்து வருகிறது.

கூத்தாண்டவர் கோவில்கள்

இந்தியாவில் உள்ள திருநங்கைகள் மத்தியில் புகழ்பெற்ற புண்ணியத்தலமாக விளங்கி வருவது கூத்தாண்டவர் கோவில். தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கிராமத்தில் திருநங்கைகளுக்கான தனி தெய்வமாகிய கூத்தாண்டவர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலை தவிர விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுகா அருணாபுரம், வானூர் தாலுகா தைலாபுரம், கடலூர் மாவட்டம் கொத்தட்டை, தேவனாம்பட்டினம், புதுச்சேரி மாநிலம் பிள்ளையார்குப்பம், மடுகரை ஆகிய இடங்களிலும் கூத்தாண்டவர் கோவில்கள் இருக்கின்றன. இருப்பினும் கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவில்தான் மிகவும் புகழ்பெற்றது.


Next Story