வித்தியாசமான கோவில் பிரசாதங்கள்


வித்தியாசமான கோவில் பிரசாதங்கள்
x

ஆலயங்களில் இறைவனுக்கு படைக்கப்படும் நைவேத்தியங்களும் பிரசாதமாக பக்தர்களுக்கு விநியோகிக்கப்படும்.

ஆலயங்கள் தோறும் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்படும். பெரும்பாலும் அந்த பிரசாதங்கள், விபூதி மற்றும் குங்குமமாகத்தான் இருக்கும். ஆனால் சில ஆலயங்களில் இறைவனுக்கு படைக்கப்படும் நைவேத்தியங்களும் பிரசாதமாக பக்தர்களுக்கு விநியோகிக்கப்படும். அவற்றில் வித்தியாசமான சில பிரசாதங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்..

* கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகில் உள்ளது மண்டைக்காடு என்ற ஊர். இங்கு பகவதி அம்மன் கோவில் இருக்கிறது. இந்த ஆலயத்தை 'பெண்களின் சபரிமலை' என்றும் அழைப்பார்கள். ஏனெனில் சபரிமலை ஐயப்பன் கோவிலைப் போல இங்கு பெண்கள், விரதம் இருந்து இருமுடி கட்டி வந்து வழிபாடு செய்வார்கள். இந்த ஆலயத்தில் அம்மனுக்கு பச்சரிசி மாவு, சர்க்கரை, வெல்லம் சேர்த்து மண்டையப்பம் எனும் பிரசாதம் செய்து படைக்கிறார்கள். இதனை சாப்பிட்டால் தீராத தலைவலியும் நீங்கிவிடும்.

* கரூரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது மாரியம்மன் ஆலயம். இங்கு அம்பாள் நான்கு கரங்களுடன், கிழக்கு நோக்கி, அதே நேரம் சற்றே ஈசான்ய பார்வையுடன் அமர்ந்த கோலத்தில் அருள்கிறார். இங்கு வைகாசி பெருவிழாவின் போது நடைபெறும், கம்பம் நடும் நிகழ்வு விசேஷமானது. இதில் வேப்ப மரத்தின் மூன்று கிளைகளைக் கொண்ட ஒரு பகுதி, அதன் பட்டைகளை உரித்து, அதில் மஞ்சள் தடவி, கோவில் பலி பீடத்தின் அருகில் நடப்படுகிறது. இதையே பக்தர்கள் அம்பாளாகக் கருதி வழிபடுகிறார்கள். இங்கு அம்மன் பிரசாதமாக திருமண் வழங்கப்படுகிறது.

* பொதுவாக பெருமாள் கோவில்களில், துளசியையும், துளசி தீர்த்தத்தையும் பிரசாதமாக வழங்குவார்கள். ஆனால் திண்டுக்கல் தாடிக்கொம்பு சுந்தரராஜப் பெருமாள் ஆலயத்தில் இருக்கும் தன்வந்திரி பகவான் சன்னிதியில், லேகியம் மற்றும் தைலம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. உடல்நல பாதிப்பு உள்ளவர்கள், இந்த மருந்தை சாப்பிட்டால் உடல் பிணி நீங்குமாம்.

* கும்பகோணத்தில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, தேப்பெருமாநல்லூர் என்ற திருத்தலம். இங்கு வேதாந்தநாயகி உடனாய விஸ்வநாதர் கோவில் இருக்கிறது. இவ்வாலய இறைவனுக்கு, ருத்ராட்சத்தினால் அர்ச்சனை செய்யப்படுகிறது. இத்தலம் வரும் பக்தர்களுக்கு, சுவாமிக்கு அர்ச்சனை செய்த ருத்ராட்சத்தையே பிரசாதமாக வழங்குகிறார்கள்.

* ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே மறவர் கரிசல் குளம் கிராமம் உள்ளது. இங்கு ராஜராஜேஸ்வரி உடனாய விஸ்வநாதர் கோவில் இருக்கிறது. தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இங்கு வந்து இறைவனை வணங்குவதோடு, வில்வ இலையையும், வில்வக் காயையும் பிரசாதமாக எடுத்துக் கொண்டால், நோய் தீரும் என்பது நம்பிக்கை. மேலும் இங்குள்ள கோவில் கிணற்றில் ஆண்கள் மட்டுமே தண்ணீர் இறைக்க அனுமதிக்கப்படுகிறார்கள். பெண்களுக்கு அனுமதி இல்லை.


Next Story