மதுரை கள்ளழகர் கோவில் மகா கும்பாபிஷேகம்.. 'கோவிந்தா' கோஷம் எழுப்பி பக்தர்கள் தரிசனம்


மதுரை கள்ளழகர் கோவில் மகா கும்பாபிஷேகம்.. கோவிந்தா கோஷம் எழுப்பி பக்தர்கள் தரிசனம்
x

யாகசாலையில் இருந்து தீர்த்த கலசங்கள் எடுத்துச் செல்லப்பட்டு, ராஜகோபுர கும்பங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

மதுரை,

மதுரை அருகே அழகர்கோவிலில் பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோவிலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு கும்பாபிஷேக பெருவிழாவை நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்றன. ரூ.2 கோடியில் ராஜகோபுர திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், நேற்று முன்தினம் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டப வளாகத்தில் யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. நேற்றும் 2-வது நாளாக 40 பட்டர்கள் கொண்ட குழுவினர், ஒரே நேரத்தில் 8 யாக குண்டங்களில் வேத மந்திரங்களுடன் யாக பூஜைகள் நடத்தினர்.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக கும்பாபிஷேகம் இன்று விமரிசையாக நடைபெற்றது. யாகசாலையில் இருந்து தீர்த்த கலசங்கள் எடுத்துச் செல்லப்பட்டு, ராஜகோபுர கும்பங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து 15 இடங்களில் சுழல் கருவி மூலம் பக்தர்கள் மீது புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது.

கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு `கோவிந்தா' கோஷம் எழுப்பி கோபுர தரிசனம் செய்தனர். விழாவையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.


Next Story