ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மார்கழி பகல்பத்து திருவிழா இன்று தொடக்கம்


ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மார்கழி பகல்பத்து திருவிழா இன்று தொடக்கம்
x

திருமணமாகாத பெண்கள் மார்கழி மாதம் நோன்பு இருந்து ஆண்டாளை வழிபட்டால் மணவாழ்க்கை விரைவில் அமையும் என்பது ஐதீகம்.

ஸ்ரீவில்லிபுத்தூர்.

பூமாதேவியான ஆண்டாள் ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்தவர். ஆண்டாள் சிறு வயதிலேயே கண்ணன் மீது காதல் கொண்டு கண்ணனையே தனது கணவனாக அடைய இறைவனை வேண்டி நோன்பு இருந்துள்ளார். மார்கழி மாதம் 30 நாட்களும் விரதம் இருந்து திருப்பாவை பாடி கண்ணனை தன் மணவாளனாக அடைந்தாள். பல்வேறு சிறப்புகள் கொண்ட மார்கழி மாதத்தில் ஆண்டாள் கோவிலில் நடக்கும் திருவிழா முக்கியத்துவம் வாய்ந்தது.

திருமணமாகாத பெண்கள் மார்கழி மாதம் நோன்பு இருந்து ஆண்டாளை வழிபட்டால் மணவாழ்க்கை விரைவில் அமையும் என்பது ஐதீகம். ஆதலால் ஏராளமான பெண்கள் மார்கழி மாதத்தில் விரதம் இருப்பார்கள். மார்கழி மாதம் தொடங்கி இருப்பதால், அந்த மாதத்தின் முதல் நாளில் இருந்து கோவில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும்.

இந்தாண்டு மார்கழி மாத திருவிழாவையொட்டி, மார்கழி பகல் பத்து உற்சவம் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. இன்று மாலை 4.35 மணிக்கு ஆண்டாள்-ரெங்க மன்னார் கோவிலில் இருந்து புறப்பட்டு மாலை 5 மணிக்கு தனது பிறந்த வீட்டிற்கு வருகிறார். அங்கு ஆண்டாளுக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.

தனது பிறந்த வீட்டில் (தற்போது பெரியாழ்வார் பரம்பரையில் வந்தவர்கள் வீட்டிற்கு) ஆண்டாளுக்கு பிடித்த உணவு பதார்த்தங்கள் மற்றும் பச்சை காய்கறிகள் பரப்பி சிறப்பு பூஜைகள் நடைபெறும். வருடத்திற்கு ஒருமுறை ஆண்டாள் தனது பிறந்த வீட்டிற்கு வருவார். அதன் பிறகு ஆண்டாள், ரெங்க மன்னாருடன் பகல் பத்து மண்டபத்திற்கு செல்வார். அங்கு 10 நாட்கள் பகல் பத்து திருவிழா நடைபெறும்.

இந்நிலையில் இன்று முதல் வருகிற 22-ந் தேதி வரை 10 நாட்கள் பகல்பத்து மண்டபத்தில் வைத்து பகல் பத்து திருவிழா நடைபெறுகிறது.

வருகிற 23-ந் தேதி அன்று ராப்பத்து உற்சவம் தொடங்குகிறது. வருகிற 23-ந் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறும்.

ஜனவரி 7-ந் தேதியன்று பிரியாவிடை நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் 8-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை மார்கழி நீராட்ட உற்சவம், எண்ணெய் காப்பு திருவிழா நடைபெறுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் திருமுக்குளம் எண்ணெய் காப்பு மண்டபத்தில் வைத்து எண்ணெய் காப்பு உற்சவம் நடைபெறும்.


Next Story