அயோத்தியை போன்று ஒடிசாவிலும் பிரமாண்ட ராமர் கோவில் திறப்பு


அயோத்தியை போன்று ஒடிசாவிலும் பிரமாண்ட ராமர் கோவில் திறப்பு
x

ஒடிசா மாநிலம் நயாகர் மாவட்டம், பதேகர் கிராமத்தில் உள்ள மலை உச்சியில் ராமர் கோவில் அமைந்துள்ளது.

புதுடெல்லி:

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. கருவறையில் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பால ராமர் சிலைக்கு பிரதமர் மோடி முதலில் பூஜை செய்தார். அதன்பின்னர் உ.பி. ஆளுநர் ஆனந்திபென் படேல், உ.பி. முதல்- மந்திரி யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட தலைவர்கள் பூஜை செய்து வழிபட்டனர்.

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் பஜனைகள் நடத்தப்பட்டன.

இந்நிலையில், அயோத்தியில் இன்று ராமர் கோவில் விழா நடைபெற்ற சமயத்தில், அயோத்தியில் இருந்து 1000 கிமீ தொலைவில் இன்னொரு பிரமாண்ட ராமர் கோவிலும் திறக்கப்பட்டுள்ளது.

ஒடிசா மாநிலம் நயாகர் மாவட்டம், பதேகர் கிராமத்தில் உள்ள மலை உச்சியில் இந்த கோவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 1800 அடி உயரத்தில் உள்ளது. கோவிலின் உயரம் 165 அடி. ஒடிசா மாநில மக்கள் மற்றும் பக்தர்களின் நன்கொடைகள் மூலம் கோவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கோவிலின் கட்டுமானத்திற்கு தேவையான நிதியில் பாதியை பதேகர் பகுதி மக்கள் அளித்துள்ளனர்.

பாரம்பரிய ஒடியா கட்டிடக்கலை பாணியில், இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. அடையாள சின்னங்களான தாரா தாரிணி மற்றும் கோனார்க் கோவில்களின் கட்டிட அமைப்பைப் போன்று இந்த கட்டிடமும் உள்ளது. கோவில் கருவறை 65 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. பிரதான கோவிலை சுற்றி சூரிய கடவுள், சிவன், விநாயகர் மற்றும் அனுமான் ஆகிய தெய்வங்களுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன.

அயோத்தியைப் போன்று இந்த மலைக்கோவிலும் ஆன்மிக அடையாளமாக மாறியிருக்கிறது. பக்தர்கள் மத்தியில் மிக பிரபலம் ஆவதுடன், சுற்றுலா தலமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story