திருமலையில் பல்லவோற்சவம்.. கர்நாடக சத்திரத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி
ஸ்ரீதேவி - பூதேவி சமேத மலையப்ப சுவாமி, கர்நாடக சத்திரத்திற்கு எழுந்தருளி, அங்கு கர்நாடக அரசு சார்பாகவும், மைசூரு சமஸ்தானத்தின் சார்பாகவும் அளிக்கப்பட்ட மரியாதைகளை ஏற்றுக் கொண்டார்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் மைசூர் மகாராஜாவின் பிறந்தநாள் கொண்டாட்டம், பல்லவோற்சவம் என்ற பெயரில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. திருமலை கோவிலுக்கு மிகப்பெரிய அளவில் காணிக்கைகளை வழங்கிய மைசூர் மகாராஜாவின் பிறந்த நட்சத்திரமான உத்திரட்டாதி (உத்தரபாத்ரபதா) நட்சத்திர நாளில் இந்த உற்சவம் நடத்தப்படுகிறது.
அவ்வகையில், இந்த ஆண்டுக்கன பல்லவோற்சவம் நேற்று நடைபெற்றது. இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஸ்ரீதேவி - பூதேவி சமேத மலையப்ப சுவாமி, கர்நாடக சத்திரத்திற்கு எழுந்தருளி, அங்கு கர்நாடக அரசு சார்பாகவும், மைசூரு சமஸ்தானத்தின் சார்பாக அளிக்கப்பட்ட மரியாதைகளை ஏற்றுக் கொண்டார். மைசூர் மகாராஜாவின் வம்சத்தினர் ஆரத்தி எடுத்து மலையப்ப சுவாமியை வரவேற்றனர்.
ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவத்தில் பயன்படுத்தப்படும் தந்த பல்லக்கு, ஏராளமான நிலம் மற்றும் நகைகள், பல்வேறு வாகனங்கள் ஆகியவற்றை மைசூர் மகாராஜா நன்கொடையாக அளித்ததாக புராணங்கள் கூறுகின்றன.
மேலும் ஆன்மிக செய்திகளுக்கு.. https://www.dailythanthi.com/Others/Devotional